கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ 

கிறிஸ்மஸ் விழாவையொட்டி, ஈராக்கின் துன்பங்கள் தீரவேண்டும்

அமைதியை இழந்து தவிக்கும் ஈராக் நாட்டில், மனிதாபிமானமும், ஆன்மீகமும் நிறைந்த ஒரு பாதையை, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து உருவாக்கவேண்டும் - கர்தினால் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2003ம் ஆண்டு முதல், தன் அமைதியை இழந்து தவிக்கும் ஈராக் நாட்டில், மனிதாபிமானமும், ஆன்மீகமும் நிறைந்த ஒரு பாதையை, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து உருவாக்கவேண்டுமென்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இத்திருவருகைக் காலத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், ISIS எனப்படும் இஸ்லாமிய அரசு, ஈராக் நாட்டில் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளின் காயம் ஆறுவதற்குள், ஈராக் அரசுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களை அடக்க, அரசு மேற்கொண்ட அடக்குமுறைகளால், ஈராக் சமுதாயம் மேலும் காயமடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அக்டோபர் மாதத் துவக்கத்திலிருந்து, ஈராக் சமுதாயம், குறிப்பாக, இளையோர், ஊழலற்ற ஓர் அரசுக்காகவும், நீதியான சமுதாயத்திற்காகவும் போராடி வருகின்றனர் என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், வன்முறையிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு, இளையோர் மேற்கொண்டுள்ள அமைதி வழி போராட்டத்தை, அரசு, வன்முறை கொண்டு அடக்குவது தவறு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசின் அடக்குமுறையால், நவம்பர் மாத இறுதி வரை, 450க்கும் அதிகமானோர் இறந்ததையும், 20.000த்திற்கும் அதிகமானோர் காயமுற்றதையும் கருத்தில் கொண்டு, கர்தினால் சாக்கோ அவர்கள், இவ்வாண்டு, கல்தேயத் திருஅவையில், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், மிகக் குறைந்த அளவில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

அமைதி, நீதி, சுதந்திரம், மனித மாண்பு, உடன்பிறந்த உணர்வு, அன்பு, மகிழ்வு என்ற அனைத்து உன்னத கொள்கைகளையும் நிலைநாட்ட, இறைமகன் இவ்வுலகில் மனிதராகப் பிறந்தார் என்ற உண்மையைக் கொண்டாடும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில், மத்திய கிழக்குப் பகுதியின் துன்பங்கள் தீரவேண்டும் என்ற வேண்டுதலை, கர்தினால் சாக்கோ அவர்கள், தன் செய்தியில் கூறியுள்ளார்.

போராடும் குழுக்களிலும், பாதுகாப்பு துறையிலும், இறந்துபோனவர்கள், மற்றும் காயப்பட்டிருப்போர் அனைவருடன் தன் ஒருமைப்பாட்டை வெளியிட்டு, கர்தினால் சாக்கோ அவர்கள் தன் திருவருகைக்ககாலச் செய்தியினை நிறைவு செய்துள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2019, 15:40