கர்தினால் மால்கம் இரஞ்சித் கர்தினால் மால்கம் இரஞ்சித் 

துன்புறுவோரை, கிறிஸ்து பிறப்புக் காலத்தில் நினைவுகூர்வோம்

கர்தினால் இரஞ்சித் : நாட்டில், அமைதியும், ஒப்புரவும், இணக்கவாழ்வும் இடம்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் உழைப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்  செய்திகள்

இவ்வாண்டு கிறிஸ்து உயிர்ப்பு நாளில் இலங்கையில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல்களின் பாதிப்புக்களால் இன்னும் துன்புறுவோர் குறித்து இக்கிறிஸ்து பிறப்புக் காலத்தில் நினைவுகூர்வோம் என அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் மால்கம் இரஞ்சித்.

கிறிஸ்து பிறப்பு விழாவிற்கென சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், ஏழைகள், வாழ்வின் ஓரத்திற்குத் தள்ளப்பட்டோர், மற்றும், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டோருடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதை தன் செய்தியின் மையக் கருத்தாகக் கூறியுள்ளார்.

இவ்வாண்டு ஏப்ரம் மாதம் 21ம் தேதி, கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவன்று 3 கோவில்களும் 4 தங்கும் விடுதிகளும் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகி, 45 குழந்தைகள் உட்பட 253 பேர் உயிரிழந்த நிகழ்வினைப் பற்றி தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டோர் என  அனைவரின் துன்பங்களும், குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகளின் செயலால் மேலும் அதிகரித்துள்ளன என தன் கிறிஸ்து பிறப்புச் செய்தியில் கூறியுள்ளார்.

வன்முறையால் இறந்தோருக்காகவும் பாதிக்கப்பட்டோருக்காகவும் செபிக்கும் இக்காலத்தில், நாட்டில் அமைதியும், ஒப்புரவும், இணக்க வாழ்வும் இடம்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் உழைப்போம் எனவும் கிறிஸ்து பிறப்பு விழாச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் இரஞ்சித்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2019, 16:26