வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் 

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் கர்தினால் நிக்கோல்ஸ்

பிரித்தானியச் சமுதாயம், கசப்பானப் பிளவுகளையும், கருத்து வேறுபாடுகளையும் அனுபவித்து வரும் வேளையில், நாம் ஒருவர் ஒருவரிடம் நன்மைத்தனத்தைக் காண்பது மிகவும் தேவையான ஒரு பண்பு - கர்தினால் நிக்கோல்ஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தப் பேராலயத்தில், இந்த சிறப்பான இரவில் கூடி வர ஏதோ ஒன்று நம்மைத் தூண்டியுள்ளது, நம்மைத் தூண்டிய அதே விசுவாசம், இங்கு கூடியிருப்போர் அனைவரிடமும் உள்ளது என்பதை உணர்வது, நம்மை ஒரு குடும்பமாக இணைத்துள்ளது என்று, வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

டிசம்பர் 24, இச்செவ்வாய் இரவு, இலண்டன் நகரின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் இரவுத் திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், தன் மறையுரையின் துவக்கத்தில், அனைவரையும் வரவேற்ற வேளையில், இவ்வாறு கூறினார்.

அலங்கரிக்கப்பட்ட இப்பேராலயத்தின் பிரம்மாண்டம் நம் கவனத்தை ஈர்த்தாலும், நாம் இங்கு கூடியிருப்பதற்கு மிக முக்கிய காரணம், எளிமையில் பிறந்த ஒரு குழந்தை என்பதையும், அந்த எளிமையை உணர்வது, இவ்விழாவின் முக்கிய நோக்கம் என்பதையும், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

இவ்விரவில், பலர், தங்கள் விருந்துகளிலும், மேலும் பலர், தங்கள் உறக்கத்திலும் நேரம் செலவழிக்கும் வேளையில், நாம், இங்கு, அவர்கள் சார்பாகவும் கூடிவந்து, அவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

நாம் ஒருவரையொருவர் நேருக்கு நேர் காணும்போது, நம் ஒவ்வொருவரிலும் நிறைந்திருக்கும் நன்மைத்தனத்தைக் காண, நம் சாயலில் இவ்வுலகிற்கு வந்த குழந்தை இயேசு நம்மைக் கேட்கிறார் என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

அண்மையக் காலங்களில், பிரித்தானியச் சமுதாயம், கசப்பானப் பிளவுகளையும், கருத்து வேறுபாடுகளையும் அனுபவித்து வரும் வேளையில், நாம் ஒருவர் ஒருவரிடம் நன்மைத்தனத்தைக் காண்பது, மிகவும் தேவையான ஒரு பண்பு என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

கிறிஸ்மஸ் குடிலைவிட்டு நாம் புறப்படும்போது, இயேசுவிடம் வெளிப்பட்ட இறைவனின் முழுமையான நன்மைத்தனத்தை, நாம் பிறருக்கு எடுத்துச்செல்ல அழைக்கப்பட்டுள்ளோம் என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2019, 14:59