பிலிப்பீன்ஸ் கிறிஸ்மஸ் பிலிப்பீன்ஸ் கிறிஸ்மஸ் 

கிறிஸ்து கொணர்ந்த மீட்பை அறிவிப்பவர்களாக வாழுங்கள்

கிறிஸ்மஸ் பேருண்மை, மக்களையும், வாழ்வையும், குடும்பங்களையும், சமுதாயங்களையும், படைப்பையும் அழிப்பதற்குத் தூண்டும் எண்ணத்திற்கு முரணானது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் மக்கள், கிறிஸ்து கொணர்ந்த மீட்பை அறிவிப்பவர்களாக வாழுமாறு, மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், கிறிஸ்மஸ் நாளன்று கூறியுள்ளார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராக வருகிற சனவரியில் பொறுப்பேற்கவிருக்கும் கர்தினால் தாக்லே அவர்கள், மனிலாவில் நிறைவேற்றிய கிறிஸ்மஸ் திருப்பலியில், பிலிப்பீன்சில், மற்றவரின் வாழ்வை அழிப்பதில், சிலர் ஆனந்தம் கொள்வது அதிர்ச்சியளிக்கின்றது என்று கூறியுள்ளார்.

இளைஞர்கள் தங்களையே துன்புறுத்தி வாழ்வை முடித்துக்கொள்வது, நம்மை அதிகம் கவலையடையச் செய்கின்றது என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், அழிப்பதற்கு அல்ல, மாறாக, நம்மைக் காப்பாற்றுவதற்கு கடவுள் விருப்பம் கொண்டுள்ளதை எடுத்துரைப்பதே கிறிஸ்மஸ் என்பதால், இளைஞர்களின் இச்செயல், நம்மை கவலைப்பட வைக்கின்றது என்றும் கூறினார்.

கிறிஸ்மஸ் பேருண்மை, மக்களையும், வாழ்வையும், குடும்பங்களையும், சமுதாயங்களையும், படைப்பையும் அழிப்பதற்குத் தூண்டும் எண்ணத்திற்கு முரணானது என்று கிறிஸ்மஸ் மறையுரையில் கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், கிறிஸ்மஸ் வழங்கும் இருபெரும் கொடைகளை நாம் மறக்கக்கூடாது என்றும் கூறினார்.

கிறிஸ்துவின் கொடை, தன்னையே வழங்கும் கொடை ஆகிய இரண்டு மாபெரும் கொடைகள் பற்றியும் மறையுரையில் குறிப்பிட்டார், கர்தினால் தாக்லே.

பிலிப்பீன்சின் மத்திய பகுதியிலுள்ள Iloilo மாநிலத்தில், 2016ம் ஆண்டுக்கும், 2019ம் ஆண்டு சூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், 9 வயதுக்கும், 21 வயதுக்கும் உட்பட்ட 179 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

அந்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில், போதைப்பொருள் தொடர்பாக, முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2019, 15:35