டிசம்பர் 24ம் தேதி எருசலேமில் கிறி்ஸ்மஸ் இரவு திருப்பலிக்கு முன் மக்களை ஆசீர்வதிக்கும் பேராயர் பியெர்பத்திஸ்தா பித்ஸபல்லா டிசம்பர் 24ம் தேதி எருசலேமில் கிறி்ஸ்மஸ் இரவு திருப்பலிக்கு முன் மக்களை ஆசீர்வதிக்கும் பேராயர் பியெர்பத்திஸ்தா பித்ஸபல்லா 

புனித பூமி காவலர், பேராயர் பித்ஸபல்லாவின் கிறிஸ்மஸ் செய்தி

இஸ்ரேல் பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே நிலவிவரும் மோதல்கள், தீராத பிரச்சனையாகத் தோன்றுவதைக்கண்டு, மனம் தளர்வோருக்கு, கிறிஸ்மஸ் காலம் சொல்லும் செய்தி, மனம் தளரவேண்டாம் என்பது ஒன்றே - பேராயர் பித்ஸபல்லா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமுதாய அமைப்பு முறைகளில் அரசியல் மாற்றங்களைக் கொணர்வதற்காக அல்ல, மாறாக, மக்களின் மனங்களில் மாற்றங்களைக் கொணரவே, இயேசு குழந்தை வடிவில் பிறந்தார் என்று, புனித பூமியின் காவலரான பேராயர் பியெர்பத்திஸ்தா பித்ஸபல்லா (Pierbattista Pizzaballa) அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

கிறிஸ்து பிறந்த காலத்திற்கும், நாம் வாழும் காலத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன என்றும், இயேசு, தன் காலத்தில், சமுதாய, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களைக் கொணர்வதற்குப் பதில், மனமாற்றத்தைக் கொணர்வதையே விரும்பினார் என்றும், பேராயர் பித்ஸபல்லா அவர்கள், தான் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே நிலவிவரும் மோதல்கள், தீராத பிரச்சனையாகத் தோன்றுவதைக்கண்டு, மனம் தளர்வோருக்கு, கிறிஸ்மஸ் காலம் சொல்லும் செய்தி, மனம் தளரவேண்டாம் என்பது ஒன்றே, என்ற கருத்தை, பேராயர் பித்ஸபல்லா அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இத்தனைப் பிரச்சனைகள் நடுவிலும், மனம் தளராமல், அமைதியில் பணியாற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு, குறிப்பாக, நம்பிக்கையை, தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் பெற்றோருக்கு நன்றி கூறுவதாக, பேராயர் பித்ஸபல்லா அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வை வழங்குதல், பலனை எதிர்பாராமல் அன்பு செய்தல் ஆகியவை கிறிஸ்தவ வாழ்வின் பொருள் என்றும், இதுவே, கிறிஸ்மஸ் பெருவிழாவின் கரு என்றும் பேராயர் பித்ஸபல்லா அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2019, 14:52