தேடுதல்

Vatican News
செர்னோபிலில் கிறிஸ்மஸ் மரம் செர்னோபிலில் கிறிஸ்மஸ் மரம்   (ANSA)

உக்ரைன் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை ஆசீர்

உக்ரைனின் Donetsk மற்றும், Lugansk பகுதிகளில் ஆயுத மோதல்களால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான அடிப்படை மனிதாபிமான உதவிகளை, உலகளாவிய செஞ்சிலுவை சங்கம் ஆற்றி வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் திருப்பலி நிறைவேற்றி, அம்மக்கள் மீது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வைத்திருக்கும் அன்பையும், அக்கறையையும் தெரிவித்தார், அந்நாட்டுத் திருப்பீடத் தூதர் பேராயர், Claudio Gugerotti

உக்ரைன் நாட்டில் இடம்பெற்ற ஆயுத மோதல்களால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத Donetsk மற்றும், Lugansk பகுதிகளில் வாழ்கின்ற சிறிய கிறிஸ்தவ சமுதாயத்திற்குத் திருப்பலி நிறைவேற்றிய பேராயர் Gugerotti அவர்கள், அம்மக்கள் மத்தியில் நம்பிக்கைத் தளிர்விடுவதைக் காண முடிகின்றது என்று கூறியுள்ளார்.

வத்திக்கான் செய்திகளிடம் இவ்வாறு கூறியுள்ள பேராயர் Gugerotti அவர்கள், அப்பகுதி மக்கள் பசி பட்டினியிலும், அச்சத்திலும், ஊரடங்கு சட்ட நடவடிக்கையின்கீழும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர், அவர்கள் வறிய நிலையில் வாழ்ந்தாலும், நாங்கள் வாழ்கிறோம் என்பதை திருத்தந்தை அறிந்திருக்கிறார், எங்களை அவர் அன்பு கூர்கிறார், அவர் எங்களை மறக்கவில்லை என்பதில் உறுதியாய் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, உக்ரைனின் Donetsk மற்றும், Lugansk பகுதிகளில் இடம்பெறும் போரில், ஏற்கனவே 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் நாடு, ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் கம்யூனிச ஆட்சியின்கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாட்டிலுள்ள கத்தோலிக்கத் திருஅவை, கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை, இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை ஆகிய இரு பிரிவுகளாக இயங்கி வருகிறது.

28 December 2019, 15:53