தேடுதல்

Vatican News
புனித பேதுரு வளாகத்தில், “அறியாதவண்ணம் வானதூதர்கள்” சிலையை திருத்தந்தை திறந்து வைத்தபோது... - கோப்புப்படம் புனித பேதுரு வளாகத்தில், “அறியாதவண்ணம் வானதூதர்கள்” சிலையை திருத்தந்தை திறந்து வைத்தபோது... - கோப்புப்படம்  (AFP or licensors)

அமெரிக்காவில் வலம்வரும் “அறியாதவண்ணம் வானதூதர்கள்”சிலை

“அறியாதவண்ணம் வானதூதர்கள்”என்ற தலைப்பில் புனித பேதுரு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் சிலையைப் போன்ற மற்றொரு சிலை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு நகரங்களில் பயணம் செய்யும் - கனடா நாட்டு சிற்பி, Timothy Schmaltz

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு செப்டம்பர் 29ம் தேதி, ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரின் 105வது உலக நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி மற்றும், மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், அவ்வளாகத்தில், “அறியாதவண்ணம் வானதூதர்கள்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்த ஆள்உயர பெரிய சிலை ஒன்றை அர்ச்சித்து, திறந்து வைத்தார்.

இச்சிலையை வடிவமைத்த கனடா நாட்டு சிற்பி, Timothy Schmaltz அவர்கள், அச்சிலையைப் போன்ற மற்றொரு சிலை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு நகரங்களில் பயணம் செய்யும் என்று அறிவித்திருப்பதை, CNA கத்தோலிக்கச் செய்தி, டிசம்பர் 17, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

தர்மம் கேட்கும் இயேசு, சிறையில் இருக்கும் இயேசு, வீடற்ற இயேசு என்ற பல உருவச் சிலைகளை உருவாக்கியுள்ள Schmaltz அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் ஆகியோரை மையப்படுத்தி, “அறியாதவண்ணம் வானதூதர்கள்” என்ற உருவச் சிலையை வடிவமைத்துள்ளார்.

Schmaltz அவர்கள் வடிவமைத்த இச்சிலையில், பல்வேறு வரலாற்று காலங்கள், பல்வேறு கலாச்சார மற்றும் இன பின்புலங்களிலிருந்து வரும், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் ஆகியோரைக் குறிக்கும் 140 உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒருவரோடு ஒருவர் தோளில் சாய்ந்து, ஒன்றுசேர்ந்து ஒரு படகில் நிற்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள இவ்வுருவங்களின் நடுவில், வானதூதர்களின் இரு இறக்கைகள் உயர்ந்து நிற்பது, அந்நியர் மத்தியில், குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் மத்தியில் ஒரு புனிதம் காணப்படுகின்றது என்பதை விளக்குகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

“அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு”என, எபிரேயருக்கு எழுதப்பட்ட (எபி.13:2) திருமடலின் சொற்கள், இந்த உருவச்சிலையை வடிவமைக்க தூண்டுதலாக இருந்ததென Schmaltz அவர்கள் கூறியுள்ளார்.

இந்த உருவங்களில் திருக்குடும்பத்தின் மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு ஆகிய மூவரும், புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலரான அன்னை கபிரீனி அவர்களும் இடம்பெற்றுள்ளனர் என்று Schmaltz அவர்கள் CNA செய்தியிடம் கூறினார். (CNA)

18 December 2019, 15:42