கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில், தீய ஆவி பிடித்தவரை இயேசு குணமாக்கியபின்... - மாற்கு நற்செய்தி 1,21-28 கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில், தீய ஆவி பிடித்தவரை இயேசு குணமாக்கியபின்... - மாற்கு நற்செய்தி 1,21-28 

விவிலியத்தேடல்: தீய ஆவி பிடித்தவர் குணமடைதல் – பகுதி 3

அரியணையில் அமர்ந்து, மக்களை ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தைக் காட்டிலும், மக்களுக்கு நன்மைகள் செய்து, அதன் வழியே மக்கள் மனங்களில் அரியணை கொள்ளும் அதிகாரமே உயர்ந்தது என்பதை, இயேசு இப்புதுமை வழியே நம் எண்ணங்களில் ஆழப் பதிக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தீய ஆவி பிடித்தவர் குணமடைதல் – பகுதி 3

வழிபாட்டுத் தலங்களில் உயிர்பலிகள் நிகழ்வதை, செய்திகளாகக் கேட்டு வருகிறோம். இவ்வாண்டு, மார்ச் 15ம் தேதி, வெள்ளியன்று, நியூசிலாந்து நாட்டின் Christchurch என்ற நகரில், இஸ்லாமியத் தொழுகைக்கூடத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில், 51 பேர் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில், மூன்று கிறிஸ்தவ ஆலயங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளால், 259 அப்பாவி மக்கள் பலியாயினர். இதில் கூடுதல் வேதனையைத் தரும் மற்றொரு செய்தியும் இடம்பெற்றது. நியூசிலாந்து தொழுகைக்கூடத்தில் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட அந்த மனிதர், அந்நிகழ்வை, சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தார்.

கொலை வெறியால் ஆட்கொள்ளப்பட்ட அந்த மனிதர் செய்ததைப் போலவே, மற்றொரு மனிதர், அக்டோபர் 9ம் தேதி ஜெர்மனியில், Halle என்ற நகரில், யூதர்களின் தொழுகைக்கூடத்தில் தாக்குதல்களை மேற்கொள்ளவும், அதனை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தேவையான ஏற்பாடுகளுடன் சென்றார். ஆனால், தொழுகையில் இருந்தோர், அத்தொழுகைக்கூடத்தின் கதவை மூடிவிட்டதால், அம்மனிதரின் கொலைவெறித் திட்டம் நிறைவேறவில்லை. அந்த ஆத்திரத்தில், அவர், தொழுகைக்கூடத்தின் அருகே சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணையும், அருகிலிருந்த ஓர் உணவகத்தில் இருந்த மனிதரையும் கொன்றார் என்று செய்திகள் கூறுகின்றன.

இறைவனை வழிபடுதல், மறைசார்ந்த உரைகளுக்குச் செவிமடுத்தல் போன்ற உன்னத எண்ணங்களே, ஆலயங்களுக்குச் செல்வோரிடையே நிலவும். இத்தகைய உன்னத எண்ணங்கள் நடுவே, மக்களைக் கொல்லும் எண்ணத்துடன் ஒருவர் ஆலயம் செல்வது, நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. மதவெறி, கொலைவெறி போன்ற தீய ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டவர்களும் ஆலயங்களுக்குள் நுழையமுடியும் என்பதற்கு, வேதனை தரும் எடுத்துக்காட்டுகள், இவர்கள்.

கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில், தீய ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவரை, இயேசு குணமாக்கியப் புதுமையைச் சிந்தித்து வருகிறோம். ஓய்வுநாளில், தொழுகைக்கூடத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடிவருவது, ஒவ்வொரு ஊரிலும் நிகழ்ந்தது. அவ்வேளையில், தீய ஆவி பிடித்த ஒருவர், அவர்களுடன் தொழுகைக்கூடத்தில் நுழைவது எளிதல்ல. தீய ஆவியினால் வதைக்கப்பட்டவர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தால், ஊரார் அவரை உள்ளே அனுமதித்திருக்க மாட்டார்கள். அப்படியிருக்க, 'தீய ஆவி பிடித்த ஒருவர் தொழுகைக்கூடத்தில் இருந்தார்' (மாற்கு 1:23; லூக்கா 4:33) என்று நற்செய்தியாளர்கள் மாற்கும், லூக்காவும் கூறியிருப்பதற்கு, விவிலிய விரிவுரையாளர்கள் ஒரு சில விளக்கங்களை அளித்துள்ளனர்.

தீய ஆவி பிடித்திருந்தவர், வெளிப்புறத்தில், மற்றவர்களைப்போலவே காணப்பட்டதால், அவரும், மக்களோடு, மக்களாக, தொழுகைக்கூடத்தில் அமர்ந்திருந்தார் என்பது, ஒரு சிலர் தரும் விளக்கம். வேறு சில விரிவுரையாளர்களோ, இன்னும் ஒரு படி மேலேச் சென்று, அம்மனிதர், கப்பர்நாகும் தொழுகைக்கூடத்திற்கு வழக்கமாகச் செல்பவர் என்று கூறியுள்ளனர். அவருக்குள் குடியிருந்த தீய ஆவி, அதுவரை, அத்தொழுகைக் கூடத்தில் கற்பிக்கப்பட்ட பாடங்களால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருந்தது என்றும் ஒரு சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விளக்கத்தைக் கேட்கும்போது, நமது ஆலயங்களில் நிகழும் வழிபாடுகளை ஆய்வு செய்யத் தோன்றுகிறது. சமுதாயத்தில் நிகழும் அவலங்களைப்பற்றி பேசுவதற்குத் தயங்கி, பூசி மெழுகி, அனைவரையும் மகிழ்வித்து, அனுப்பிவைக்கும் வழிபாடுகளையும், அவற்றை வழிநடத்துவோர், யாரையும் எவ்வகையிலும் பாதிக்காத இனிப்பான செய்திகளை மறையுரைகளாக வழங்குவதையும் எண்ணிப்பார்க்கலாம்.

அத்தகைய வழிபாடுகளை, கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில், மறைநூல் அறிஞர்கள் நடத்திவந்ததால், அங்கு சென்ற தீய ஆவிகள், அந்த வழிபாடுகளில் சுகமாகப் பங்கேற்றன. அன்றோ, அத்தொழுகைக்கூடத்தில் ஒலித்த இயேசுவின் போதனைகள், 'மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு' (மாற்கு 1:22) வெளிவந்ததால், அவை, அங்கிருந்த தீய ஆவி, அல்லது ஆவிகளை வதைக்க ஆரம்பித்தன. அம்மனிதருக்குள், அதுவரை, சுகமாக உறங்கிக்கிடந்த தீய ஆவிகள் இயேசுவை எதிர்க்கத் துணிந்தன.

தீய ஆவிகளை வதைக்கும் வண்ணம் இயேசு என்ன கூறினார்? அவர், தனிப்பட்ட அதிகாரத்துடன் போதித்தார் என்று மட்டும் கூறும் மாற்கும் லூக்காவும், அவர் என்ன போதித்தார் என்ற விவரத்தை, இந்நிகழ்வில் கூறவில்லை. ஆனால், இயேசு கப்பர்நாகுமுக்கு வருவதற்குமுன், நாசரேத்து தொழுகைக்கூடத்தில் கூறியவற்றை நாம் அறிவோம். நற்செய்தியாளர் லூக்கா இப்பகுதியை இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

லூக்கா 4:16-19

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;

"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்."

எசாயாவின் சுருளேட்டில் பல பகுதிகள் இருந்தாலும், இயேசு அதைப் பிரித்தபோது, அவர் கண்களில் விழுந்தது, இறைவாக்கினர் வழங்கிய விடுதலைச் செய்தி. மக்களை பல வழிகளில் கட்டிப்போட்டிருக்கும் தளைகளை அகற்றுவதே தன் பணி என்று இறைவாக்கினர் எசாயா சொன்னதை, இயேசு தன் பணிவாழ்வின் முதல் செய்தியாக அறிவித்தார். அதுமட்டுமல்ல, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக்கா 4:21) என்பதையும், அழுத்தந்திருத்தமாகக் கூறியிருந்தார்.

நாசரேத்து தொழுகைக்கூடத்தில், இயேசு அறிவித்த விடுதலைப் பணியை, கப்பர்நாகும் தொழுகைக்கூடத்திலும் அவர் அதிகாரத் தொனியுடன் அறிவித்திருக்க வேண்டும். எனவே, தாங்கள் ஆக்ரமித்திருந்த மனிதர் மீது கொண்டிருந்த அதிகாரம் பறிபோய்விடும் என்பதை உணர்ந்த தீய ஆவிகள், இயேசுவை அங்கிருந்து விரட்டத் துணிந்தன. இயேசுவை அங்கிருந்து துரத்துவதற்கு, தீய ஆவிகள் பயன்படுத்திய சொற்கள், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன:

அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. (மாற்கு 1:24)

இயேசுவின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட, தீய ஆவிகள் இரு யுக்திகளைப் பயன்படுத்தின. முதல் யுக்தி, இயேசுவை, பெயர் சொல்லி அழைத்தது. இரண்டாவது யுக்தி, இயேசு யார் என்று தங்களுக்குத் தெரியும் என்று அறிவித்தது.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பெயர்களுக்குத் தனி மதிப்பு இருந்தது. ஒருவருக்கு மற்றொருவர் பெயர் சூட்டினால், அந்தப் பெயரைத் தாங்கியவர்மீது பெயர் சூட்டியவருக்கு அதிகாரம் உண்டு என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்தது. எனவேதான், இறைவனைப் பெயர் சொல்லி அழைக்க அவர்கள் தயங்கினார்கள். இறைவனுக்கு மக்கள் பெயர் சூட்டினால், அவர் தங்கள் சக்திக்கு உட்பட்டவராகிவிடுவார் என்ற தயக்கம் அது.

அதேவேளையில், இறைவன் அவர்களுக்குப் பெயர் சூட்டியதைப் பெருமையாக அவர்கள் எண்ணிவந்தனர். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து முக்கியமான பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள்தாம். ஆபிரகாமில் துவங்கி, ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே என்று தொடர்ந்து, யோவான், இயேசு என்று, அனைத்து பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள். ஒவ்வொரு பெயருக்கும் ஓர் அர்த்தமும் உண்டு.

யோசேப்பின் கனவில் தோன்றிய வானதூதர், "மரியா... ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில், அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். (மத்தேயு 1:21)

‘மக்களை மீட்பவர்’ என்ற பொருள் தாங்கிய 'இயேசு' என்ற பெயர் வழங்கப்பட்டவரை, தான் பெயர் சொல்லி அழைத்ததால், அவர் தன் கட்டுப்பாட்டில் உள்ளார் என்று தீய ஆவி தவறானக் கனவு கண்டது.

"நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று (மாற்கு 1:24, லூக்கா 4:34) தீய ஆவி அறிக்கையிடுவது, மேலும் சில எண்ணங்களை எழுப்புகின்றன. இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் யார் என்பதைப் புரிந்துகொள்ள இயலாமல், அவரது குடும்பத்தினரும், சீடர்களும் தவித்தனர் என்பதை நான்கு நற்செய்திகளும் பலமுறை குறிப்பிடுகின்றன. ஆனால், தீய ஆவிகளோ அவரை தங்களுக்குத் தெரியும் என்பதை ஊரறிய கத்தின. இது ஒரு விசுவாச அறிக்கை அல்ல, மாறாக, இயேசுவை அடங்கிப்போகச் செய்வதற்கு தீய ஆவிகள் எழுப்பிய ஓலம்.

தன்னை அடக்கி ஆள்வதற்காக, தீய ஆவி பயன்படுத்திய யுக்திகளையெல்லாம் இயேசு முறியடித்து, அந்த ஆவியை வெளியேற்றுகிறார். தீய ஆவி பிடித்தவரை இயேசு குணமாக்கியதும், அங்குள்ளவர்கள், வியந்து கூறும் சொற்கள் இதோ:

"இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" (மாற்கு 1:27) என்று மாற்கு நற்செய்தியிலும், "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" (லூக்கா 4:36) என்று லூக்கா நற்செய்தியிலும் வாசிக்கிறோம்.

இயேசு கூறிய சொற்களில் மட்டும் தனித்துவம் மிகுந்த அதிகாரமும் வல்லமையும் வெளிப்படவில்லை, மாறாக, அவர் ஆற்றிய செயல்களிலும் அந்த சக்தி வெளிப்பட்டது. அரியணையில் அமர்ந்து, தங்கள் சொற்களால், மக்களை ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தைக் காட்டிலும், மக்களுக்கு நன்மைகள் செய்து, அதன் வழியே மக்கள் மனங்களில் அரியணை கொள்ளும் அதிகாரமே உயர்ந்தது என்பதை, இயேசு இப்புதுமை வழியே நம் எண்ணங்களில் ஆழப் பதிக்கிறார். பிறருக்கு நன்மைகள் செய்வதிலும், பணியாற்றுவதிலும் நம் முழுமையான சக்தியையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்குத் தேவையானத் தெளிவை இறைவன் நம் அனைவருக்கும் வழங்கவேண்டும் என்று செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2019, 15:13