அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். (லூக்கா நற்செய்தி 20: 38) அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். (லூக்கா நற்செய்தி 20: 38) 

பொதுக்காலம் - 32ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

வழிபாட்டு ஆண்டின் இறுதியை நெருங்கியுள்ளோம் என்பதால், இன்று நமக்குத் தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள், மரணம், மறுவாழ்வு ஆகியவற்றைச் சிந்திக்க நல்லதொரு வாய்ப்பை வழங்குகின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 32ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

மருத்துவமனையில், மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த ஒரு நோயாளியை, டாக்டர் ஒருவர் சந்தித்தார். அவர் அங்கிருந்து கிளம்பும் வேளையில், நோயாளி அவரிடம், "டாக்டர், சாவதற்கு எனக்குப் பயமாக உள்ளது. சாவுக்குப் பிறகு என்ன இருக்கிறது, சொல்லுங்களேன்" என்று கேட்டார். டாக்டர் அவரிடம், "எனக்குத் தெரியாது" என்று சொல்லியபடி, அந்த அறையின் கதவருகே சென்றார். நோயாளி அவரிடம், "நீங்கள் ஒரு கிறிஸ்தவர். சாவுக்குப் பிறகு என்ன உள்ளதென்று உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.

கதவருகே சென்ற டாக்டர், அதன் கைப்பிடியைத் தொட்டதும், கதவுக்கு மறுபக்கம் நாய் ஒன்று, கதவின் மேல் தன் கால்களால் சுரண்டிக்கொண்டிருந்த சப்தம் கேட்டது. டாக்டர் கதவைத் திறந்ததும், அவரது நாய் பாய்ந்துவந்து, மகிழ்வுடன் அவரது கால்களைச் சுற்றிச் சுற்றி வந்தது.

டாக்டர் நோயாளியைப் பார்த்து, ஓர் அழகான கருத்தைக் கூறினார்: "என்னுடைய நாயைப் பார்த்தீர்களா? அது இந்த அறைக்குள் இதுவரை வந்ததேயில்லை. இந்த அறைக்குள் என்ன இருக்கும் என்பதும் அதற்குத் தெரியாது. அதற்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். இந்த அறைக்குள் அதனுடையத் தலைவனாகிய நான் இருப்பது மட்டுமே அதற்குத் தெரியும். எனவே, கதவைத் திறந்ததும், எந்தத் தயக்கமும் இல்லாமல், அது அறைக்குள் பாய்ந்து வந்தது. அதேபோல், சாவுக்கு மறுபக்கம் என்ன இருக்கிறது என்று எனக்குச் சுத்தமாகத் தெரியாது. ஆனால், சாவுக்கு மறுபக்கத்தில் என் தலைவனாம் இறைவன் இருக்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அது போதும் எனக்கு" என்று சொல்லிவிட்டு, டாக்டர், தன் நாயை அழைத்துக்கொண்டு சென்றார்.

மரணத்தைப் பற்றி சொல்லப்படும் பல கதைகளில், கருத்தாழம் மிக்க ஒரு கதை இது. மரணத்தையும் மறுவாழ்வையும் பற்றி அடிக்கடி சிந்திக்க, தாய் திருஅவை நமக்கு வழங்கியிருக்கும் ஒரு காலம், இந்த நவம்பர் மாதம். கல்லறைகளுக்குச் செல்லுதல், இறந்தோருக்காகத் திருப்பலிகள் நிறைவேற்றுதல் என்று, பொருள்நிறைந்த செயல்கள் பலவற்றில் நாம் ஈடுபடுகிறோம். அத்துடன், தற்போது, நாம் வழிபாட்டு ஆண்டின் இறுதியை நெருங்கியுள்ளோம் என்பதால், இன்று நமக்குத் தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள், மரணம், மறுவாழ்வு ஆகியவற்றைச் சிந்திக்க நல்லதொரு வாய்ப்பை வழங்குகின்றன.

நம்பிக்கையும் துணிவும் நிறைந்த ஒரு தாயும், அவரது ஏழு மகன்களும் மரணத்தைச் சந்திக்கும் நிகழ்வைக்கூறும் - மக்கபேயர் 2ம் நூல் 7: 1-2, 9-14 - இன்றைய முதல் வாசகம், நமக்குச் சில பாடங்களைச் சொல்லித்தருகிறது. துன்பம், மரணம், ஆகியவை, இறைவனுக்கு முன் சக்தியற்றவை என்று கூறும் இக்குடும்பத்தினர், மோசே தந்த சட்டங்களை மீறுவதற்குப்பதில், சாவைச் சந்திக்கத் துணிகின்றனர். மரணத்தின் மறுபக்கம், தங்களை உயிர்த்தெழச் செய்யும் இறைவனை தாங்கள் சந்திக்கப் போவதாக அவர்கள் அறிக்கையிடுகின்றனர்:

மக்கபேயர் 2ம் நூல் 7: 9,14

"நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்... கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன்." என்று, இவர்கள் கூறும் சொற்கள், உயிர்ப்பைப் பற்றிய உன்னத அறிக்கைகளாக ஒலிக்கின்றன.

உயிர்ப்பைப் பற்றிய மாற்றுக் கருத்துக்கள் கொண்ட சதுசேயர்களை, இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்றோம். இவர்களை, உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர்கள்' என்று, நற்செய்தியாளர் லூக்கா, நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். மறு உலக வாழ்வைப்பற்றி மக்களுக்கு வலியுறுத்திக் கூறிவந்த இயேசுவை, மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் எண்ணத்துடன், அவரிடம் ஒரு புதிரான கேள்வியை எழுப்புகின்றனர், சதுசேயர்கள். மறுஉலக வாழ்வையும், திருமணத்தையும் இணைத்து அவர்கள் கேட்ட அந்தக் கேள்வியில் ஒலித்த ஏளனத்தை இயேசு புரிந்துகொண்டார். எனவே, அவர்கள் தொடுத்த கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், மறுவாழ்வைக் குறித்தும், அந்த வாழ்வில் நாம் சந்திக்கவிருக்கும் இறைவனைக் குறித்தும் அழகான விளக்கங்களைத் தந்தார்.  

"வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" (லூக்கா நற்செய்தி 20: 34-38) என்று இயேசு தெளிவுபடுத்தினார்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் (எல்லா உயிரினங்களுக்கும்), பிறப்பு, இறப்பு என்ற இரு புள்ளிகள் உண்டு. இவ்விரு புள்ளிகளையும் இணைத்து நாம் வரையும் கோலம், நமது வாழ்வு. பல நேரங்களில் நாம் வரையும் கோலம் அலங்கோலமாய் மாறினாலும், அதை அழித்துத் திருத்தி, மீண்டும், மீண்டும், அழகானக் கோலம் வரைய, நமக்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.

இவ்விரு புள்ளிகளில், பிறப்பு என்ற புள்ளி, எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும். இறப்பு என்ற புள்ளி, எங்கோ ஓரிடத்தில் இருக்கிறதென்பதும் எல்லாருக்கும் தெரியும். அனைவரும் இறப்போம் என்பது நிச்சயம். ஆனால், எப்போது, எங்கே, எப்படி, இறப்போம் என்பது, நமக்குத் தெரியாது. குணமாக்க இயலாத நோய் கண்ட ஒரு சிலருக்கு, அவர்களது மரணத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது.

புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய், பலருக்கு, மறுஉலக வாழ்வைத் தருவதற்கு முன், இவ்வுலகிலேயே மாறியதொரு, புதியதொரு வாழ்வைத் தந்துள்ளது. இப்புதிய வாழ்வினால், ஒரு சிலர், அற்புத குணங்களும் பெற்றுள்ளனர். ஒரு சிலர், குணம் பெற முடியவில்லையெனினும், மரணத்தைச் சந்திக்கும் முன், தங்களையும், தங்களைச் சுற்றி உள்ளவர்களையும், வெகுவாக மாற்றியுள்ளனர்.

1984ம் ஆண்டு, கிரெக் ஆண்டர்சன் (Greg Anderson) என்பவருக்கு, நுரையீரலில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இன்னும் முப்பது நாட்களே வாழமுடியும் என்று மருத்துவர்கள் கூறினர். அவர்கள் சொன்ன அந்த முப்பது நாட்கள் முடிந்தன. இன்று 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆண்டர்சன் அவர்கள், இன்று, உலகெங்கும் சென்று, புற்றுநோயுடன் எப்படி வாழமுடியும், புற்றுநோயை எப்படி வெல்லமுடியும் என்பதை, உரைகளாகவும், நூல்களாகவும் வழங்கி வருகிறார்.

புற்றுநோயை மையப்படுத்தி, ஆண்டர்சன் அவர்கள் எழுதிய பல நூல்களில், 1995ல் வெளியிடப்பட்ட நூலின் தலைப்பு: “நலமான வாழ்வடைய, சிறிதும் சமரசம் செய்யாமல் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள்” (The 22 Non-Negotiable Laws of Wellness). புற்று நோய் உள்ளவர்களுக்கென எழுதப்பட்ட இந்த விதி முறைகள், நம் எல்லாருக்கும் தேவையான பாடங்களை வழங்குகின்றன. அவர் வழங்கிய விதிமுறைகளில் ஒரு சில இதோ:

வாழ்வை உற்சாகமாகச் சந்திக்க வேண்டும் என்று ஆரம்பமாகிறது, முதல் விதிமுறை.

தேவையின்றி உடலைப் புண்படுத்தாதே என்பது மற்றுமொரு முக்கிய விதிமுறை. மருத்துவம் வெகுவாக வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், எதற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சையை நாடுவதற்கு எதிரான விதிமுறை இது.

உன்னிடம் உள்ளவற்றை வளர்ப்பது உன் கடமை என்பது மற்றொரு விதிமுறை. இதே எண்ணத்தை, அமெரிக்க எழுத்தாளரும், போதகருமான Henry Van Dyke அவர்கள், வேறு வகையில் கூறியுள்ளார்: "நல்ல குரலுடையப் பறவைகள் மட்டுமே பாடவேண்டும் என்ற நியதி இருந்தால், காடெல்லாம் மயான அமைதி பெற்றுவிடும்."

பிறருக்கு ஆற்றும் சேவை வழியே, வாழ்வின் குறிக்கோளை அடைய வேண்டும் என்று ஆண்டர்சன் அவர்கள் கூறும் விதிமுறையை, புகழ்பெற்ற அறிவியலாளர் Albert Einstein அவர்கள், பின்வருமாறு கூறினார்: "சமுதாயத்தில், வெற்றி பெறும் மனிதராவதை விட, சமுதாயத்திற்குப் பயன்படும் மனிதராவதற்கு முயற்சி செய்யுங்கள்."

இவ்விதம் 21 விதிமுறைகளைக் கூறியுள்ள ஆண்டர்சன் அவர்கள், இவையனைத்திற்கும் சிகரமாக, 22வது விதிமுறையைத் தந்துள்ளார். "நிபந்தனையின்றி மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொள்" என்பது, அவர் தந்துள்ள விதிமுறைகளின் சிகரம்.

இந்தச் சிகரத்தை அடைவது மிகவும் சிரமமென்பதைக் கூற, தன் வாழ்க்கையை, எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார். அவரது மரணத்திற்கு மருத்துவர்கள் நாள் குறித்ததும், அவர் மேற்கொண்ட முதல் முயற்சி, பிறரை மன்னிக்கும் முயற்சி. தன் மனதில் மன்னிக்க முடியாமல் பூட்டி வைத்திருந்தவர்களை விடுவிக்க முயன்று, பல முறை தோற்றார் ஆண்டர்சன். வாழ்வில், தான், மிக அதிகமாக வெறுத்தது, தன் தந்தை என்றும், அவரை மன்னித்ததிலிருந்து ஆரம்பமான மன்னிப்பு முயற்சிகளால், விரைவில், தன் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதென்றும் அவர் கூறியுள்ளார்.

ஆண்டர்சன் அவர்களைப் போலவே மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட மற்றொருவர், இராண்டி பவுஷ் (Randy Pausch) என்ற பேராசிரியர். கணணித்துறையில் வல்லுனராக விளங்கிய இவருக்கு, மனைவி, மூன்று குழந்தைகள் என்று அழகான குடும்பம் உண்டு. 2007ம் ஆண்டு, இவரது கணையத்தைக் கரைத்துக்கொண்டிருந்த புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாண்டு, அவர் பேராசிரியராகப் பணிசெய்த பல்கலைக் கழகத்தில், அவர் அளித்த "இறுதிச் சொற்பொழிவு" (The Last Lecture), புகழ்பெற்ற ஒரு சொற்பொழிவாகக் கருதப்படுகிறது. YouTubeல் பதிவாகியுள்ள இந்தச் சொற்பொழிவை, ஆயிரக்கணக்கானோர் இன்றும் பார்த்துவருகின்றனர். உங்களது நேரத்தை ஒதுக்கி, இந்த உரையைக் கேளுங்கள். வாழ்வைப் பற்றிய பலத் தெளிவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

இராண்டி பவுஷ் அவர்கள், புற்றுநோயோடு மேற்கொண்ட போராட்டம், 2008ம் ஆண்டு ஜூலை மாதம், அவரது 48வது வயதில் முடிந்தது. அவர் வழங்கிய "இறுதிச் சொற்பொழிவு", ஒரு நூலாக, இப்போது, பலரது வாழ்வில் தாக்கங்களை உண்டாக்கிவருகிறது. அவரது மரணத்திற்கு முன், தன் மனைவிக்கும், மூன்று குழந்தைகளுக்கும் 'இன்னும் சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டி' ("guide to a better life") என்ற தலைப்பில், அவர் எழுதி வைத்த விதிமுறைகளில் ஒரு சில இதோ:

மற்றவர் வாழ்வோடு உன் வாழ்வை ஒப்பிடாதே. அவர்கள் மேற்கொண்ட பயணம் என்னவென்று உனக்குத் தெரியாது.

உனக்குத் தேவையான எல்லாமே உன்னிடம் உள்ளன. எனவே, பொறாமையால் புழுங்குவது வீண்.

உன் மகிழ்வுக்கு நீ மட்டுமே பொறுப்பு. வேறு யாருமல்ல.

ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு நல்லது எதையாவது செய்.

கடவுளை நீ அறிந்தால், உன் மகிழ்வுக்கு முடிவிருக்காது.

கிரெக் ஆண்டர்சன், இராண்டி பவுஷ், என்ற இவ்விருவரைப் போலவே, மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட இந்திய இளம்பெண், கீதாஞ்சலி கெய் (Gitanjali Ghei) அவர்கள், 16 வயதிலேயே புற்றுநோய்க்குப் பலியாகி, இவ்வுலகை விட்டுச்சென்றாலும், தன் கவிதைகள் வழியே, இன்றும் வாழ்ந்து வருகிறார். அவர் எழுதிவைத்த கவிதைகள், அவரது மரணத்திற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும், நம்பிக்கை தரும் அற்புதச் செய்திகள். அந்தக் கவிதைத் தொகுப்பில் ஒன்று, "அன்பு இறைவா" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. ஒரு செபமாக எழுதப்பட்டுள்ள இக்கவிதை, நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்யட்டும்:

அன்பு இறைவா, என் செபத்தைக் கேட்டருளும். உமது சித்தத்தை ஏற்றுக்கொள்ள எனக்குச் சக்தி தாரும். என் குற்றங்களை மன்னித்தருளும்.

என்னை இவ்வுலகினின்று எடுத்துக்கொள்வது உமக்கு விருப்பமானால், என் மீது அன்பு கொண்டவர்களுக்குச் சக்தியையும், மன உறுதியையும் தாரும்.

இது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி, நான் சுய பரிதாபத்தில் பிதற்றாமல் என்னைக் காத்தருளும். உமது விருப்பமே எனக்குச் சிறந்ததென என்னை நம்பச்செய்தருளும். உம்மீது கொண்ட பயத்தினால் அல்ல; உம்மீது கொண்ட அன்பினால் உம்மை நம்பும் வரம் அருளும்.

இயேசு இன்றைய நற்செய்தியில் மறுவாழ்வைப் பற்றிக் கூறும்போது, "அவர்கள் வான தூதர்களைப் போல் இருப்பார்கள்" என்றார். மறு வாழ்வை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தில், கிரெக் ஆண்டர்சன், இராண்டி பவுஷ், கீதாஞ்சலி கெய் போன்ற பல வானதூதர்களைச் சந்திக்கமுடியும். கண்களையும், செவிகளையும், உள்ளங்களையும் திறந்து, இவ்வுலகப் பயணத்தை மேற்கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2019, 14:18