கொலம்பியாவில் வேலை நிறுத்தம் பற்றி ஆயர்கள் கொலம்பியாவில் வேலை நிறுத்தம் பற்றி ஆயர்கள்  

நவம்பர் 17ல் கொலம்பியாவுக்காக செபம்

கொலம்பியாவை, ஓர் இல்லமாகவும், எல்லாருக்கும் உரிய இல்லமாகவும் அமைப்பதற்குரிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு, அரசையும், குடிமக்கள் சமுதாயத் தலைவர்களையும் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், நவம்பர் 21, வருகிற வியாழனன்று, நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளவேளை, வறியோர் உலக நாள் கடைப்பிடிக்கப்படும் நவம்பர் 17, இஞ்ஞாயிறன்று, நாட்டிற்காக இறைவனிடம் மன்றாடுமாறு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டங்கள், குடிமக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும், கடமையுணர்வை வெளிப்படுத்தும் சனநாயக உரிமையாக உள்ளன, அதேநேரம், போராட்டங்களின்போது, வன்முறை, சூறையாடல், நாசவேலைகள் மற்றும், மரணங்கள் தவிர்க்கப்படுமாறு, கொலம்பிய ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தேசிய அளவில் நடைபெறவுள்ள போராட்டங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது விடுத்த வேண்டுகோள்களையும், ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளைக் குறைத்துவிட வேண்டாமெனவும், சந்திப்பு கலாச்சாரத்திற்கு ஆதரவாகச் செயல்படுங்கள் எனவும் திருத்தந்தை கொலம்பிய மக்களுக்கு அழைப்பு விடுத்ததைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், எந்தவித சமுதாய பிரச்சனைகளும், உற்றுக்கேட்டல் மற்றும், உரையாடல் வழியாக தீர்வு காணப்பட வேண்டுமென்ற கத்தோலிக்கத் திருஅவையின் நிலைப்பாட்டை மீண்டும் தெரிவித்துள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2019, 15:07