தேடுதல்

Vatican News
ஆப்கானிஸ்தானில் அமைதியின் பள்ளி ஆப்கானிஸ்தானில் அமைதியின் பள்ளி 

ஆப்கானில் "அமைதியின் பள்ளி” வழியாக கல்வி

ஆப்கானிஸ்தானில், 2019ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில், 631 சிறார் இறந்தனர் மற்றும் 1,830 சிறார் காயமுற்றனர். இந்நிலை, 2018ம் ஆண்டைவிட அதிகம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 37 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றவேளை, "அமைதியின் பள்ளி (Tangi Kala)" என்ற திட்டத்தின்கீழ், இத்தாலிய மறைப்பணியாளர் ஒருவர், அந்நாட்டில் எழுத்தறிவின்மையை அகற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.

பர்னபைட் சபையைச் சேர்ந்த இத்தாலிய அருள்பணியாளர் ஜூசப்பே மொரெத்தி அவர்கள், ஆயுத மோதல்களும், பதட்டநிலைகளும் நிறைந்த ஆப்கானிஸ்தானில் கல்வியறிவை வளர்க்க முயற்சித்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில், கடந்த 18 ஆண்டுகளில் 700 கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால், 37 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர் என்று கூறும் அருள்பணி மொரெத்தி அவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக, தன்னால் காபூலைவிட்டுச் செல்ல இயலவில்லை என்று தெரிவித்தார்.

ஆப்கான் அரசால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும், கல்வித் திட்டங்களைக் கொண்டு இயங்கிவரும் அமைதியின் பள்ளியில், தற்போது மூவாயிரத்திற்கு அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர் எனவும், அருள்பணி மொரெத்தி அவர்கள் கூறினார்.

1990ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் மறைப்பணியாற்றிவந்த அருள்பணி மொரெத்தி அவர்கள், மீண்டும் கடந்த ஜூலையில் அந்நாட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆப்கான் நிலவரம்

ஆப்கானிஸ்தானில், 2019ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 2,461 சிறார் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 631 பேர் இறந்தனர் மற்றும் 1,830 பேர் காயமுற்றனர். 2018ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று, ஐ.நா.வின் UNAMA அமைப்பு கூறுகிறது. இதற்கிடையே, 38 இலட்சம் சிறார்க்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன, 6 இலட்சம் சிறார் கடும் சத்துணவு குறைபாட்டால் துன்புறுகின்றனர் மற்றும் 37 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை. இவர்களில் 60 விழுக்காட்டினர் சிறுமிகள் என்று "Save the Children" அரசு-சாரா அமைப்பு கூறுகிறது. (Fides)

09 November 2019, 14:55