தேடுதல்

Vatican News
துன்புறும் கிறிஸ்தவர்களை நினைவுகூர, உரோம் கொலோசேயத்தை ஒளிர்விக்கும் சிவப்பு வண்ண விளக்குகள் துன்புறும் கிறிஸ்தவர்களை நினைவுகூர, உரோம் கொலோசேயத்தை ஒளிர்விக்கும் சிவப்பு வண்ண விளக்குகள்  (AFP or licensors)

துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக அயர்லாந்தில் 'சிவப்பு புதன்'

உலகின் பல நாடுகளில், தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் வகையில், அயர்லாந்து தலத்திருஅவை, நவம்பர் 27ம் தேதி, 'சிவப்பு புதனை' சிறப்பித்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அயர்லாந்து நாட்டின் தலைமைப் பேராயர், ஈமோன் மார்ட்டின் அவர்கள், நவம்பர் 27, இப்புதனன்று, சிறப்பிக்கப்படும் 'சிவப்பு புதனன்று' புனித பாட்ரிக் பேராலயத்தில், 'சாட்சிய வழிபாடு' ஒன்றை முன்னின்று நடத்தினார்.

உலகின் பல நாடுகளில் தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் வகையில், அயர்லாந்து தலத்திருஅவை, நவம்பர் 25 இத்திங்கள் முதல் சிறப்பித்துவரும் 'சாட்சிய வாரத்தின்' ஒரு பகுதியாக, 'சிவப்பு புதன்' கொண்டாடப்பட்டது.

இந்த 'சிவப்பு புதனை'யொட்டி, அயர்லாந்து மற்றும் பிரித்தானியாவில் உள்ள பல்வேறு ஆலயங்கள் சிவப்பு வண்ண விளக்குகளால் ஒளிர்விடும் என்றும், இந்நாளின் நினைவாக கத்தோலிக்கர்கள், சிவப்பு உடைகளை அணிவது உதவியாக இருக்கும் என்றும், பேராயர் மார்ட்டின் அவர்கள் கூறியிருந்தார்.

'சாட்சிய வாரத்தின்' ஒரு முக்கிய நிகழ்வாக, இந்த சிவப்பு புதனன்று, "அதிகாரம் அல்ல, அச்சம் அல்ல" என்ற தலைப்பில் இறைவேண்டுதல்களின் தொகுப்பு ஒன்றை, பேராயர் மார்ட்டின் அவர்கள் பாட்ரிக் பேராலயத்தில் வெளியிட்டார்.

இந்த சாட்சிய வாரத்தின் ஒரு சிகர நிகழ்வாக, நவம்பர் 28, இவ்வியாழனன்று, தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக உயிர் துறந்த, மற்றும் துன்புற்றுவரும் அனைத்து மக்களுக்காகவும், புனித பாட்ரிக் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்தும் பேராயர் மார்ட்டின் அவர்கள், இத்திருப்பலியில், பல இளையோருக்கு உறுதிப்பூசுதல் வழங்கி, அவர்களை, 'சாட்சிய வாழ்வில் நடைபோட' அழைப்பு விடுக்கிறார். (ICN)

27 November 2019, 15:15