தேடுதல்

Vatican News
பாக்தாத்தில் போராட்டம் பாக்தாத்தில் போராட்டம்  (ANSA)

ஈராக் நாட்டில் அமைதி நிலவ, செபம் மற்றும் உண்ணா நோன்பு

ஈராக் நாட்டில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொணர, அந்நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை விசுவாசிகள், உண்ணா நோன்பு, மற்றும் செபம் என்ற சக்தி வாய்ந்த ஆன்மீக ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டும் - கர்தினால் சாக்கோ

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் நிலையான தன்மை உருவாகவும், அந்நாட்டிற்கு அமைதி என்ற கொடை கிடைக்கவும், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து மூன்று நாள்கள், உண்ணா நோன்பு மற்றும் செபத்தில் ஈடுபடுமாறு, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈராக் நாட்டில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொணர, அந்நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை விசுவாசிகள், உண்ணா நோன்பு, மற்றும் செபம் என்ற சக்தி வாய்ந்த ஆன்மீக ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டும் என்று கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

பொது மக்களின் நலனை மனதில் கொண்டு, அரசு அதிகாரிகளும், அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடுவோரும், ஞானத்துடனும், நடுநிலையான, மிதமான வழிகளிலும் செயலாற்றவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார், கர்தினால் சாக்கோ.

கடந்த சில வாரங்களாக, ஈராக் நாட்டின் பாதுகாப்புத் துறையினருக்கும், அரசை எதிர்ப்போருக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களால் இதுவரை, குறைந்தது, 320 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. (Fides)

11 November 2019, 15:30