மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுப் பேரவை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுப் பேரவை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை 

நேர்காணல் – மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுப் பேரவை

மரியின் ஊழியர் ஆண்கள் துறவு சபையைத் தொடங்கிய, பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த ஏழு வர்த்தகர்கள், அந்நகருக்கு அருகேயுள்ள செனாரியோ என்ற மலையில் தங்கி ஏழ்மை மற்றும், கடும் தவ வாழ்வு மேற்கொண்டனர். ஏழு புனிதர்கள் என அழைக்கப்படும் இவர்களை, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், 1888ம் ஆண்டில் புனிதர்களாக அறிவித்தார்

மேரி தெரேசா - வத்திக்கான்

மரியின் ஊழியர் ஆண்கள் துறவு சபை, கத்தோலிக்கத் திருஅவையில் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து யாசக சபைகளில் ஒன்று. இச்சபை, 1233ம் ஆண்டில், இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில், ஏழு துணி வர்த்தகர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இத்துறவு சபையின் 214வது பொதுப் பேரவை, கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற்றது. அச்சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவரான, அருள்பணி சவுரிராஜ் அவர்கள், அச்சபை பற்றியும், அப்பொதுப் பேரவை பற்றியும் இன்று பகிர்ந்து கொள்கிறார்

மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுப் பேரவை

மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுப்பேரவை 2019, அரிச்சா, அக்டோபர் 7-27, 2019

மரியின் ஊழியர் சபை - மாறிவரும் உலகில் நம்பிக்கையின் ஊழியர்கள்

மரியின் ஊழியர் சபையானது, 1233 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள பிளாரன்ஸ் நாகரில் வாழ்ந்த ஏழு வணிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு துறவற சபையாகும். பிளாரன்ஸ் நகரை விட்டு செனாரியோ மலைக்குச் சென்ற எழுவரும் அன்னை மரியாவின் தூண்டுதலால், இத்துறவற சபையை உருவாக்கினர். 786 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இச்சபை, இன்று ஏறகுறைய 26 நாடுகளில் 117 குழுமங்களை அமைத்து சுமார் 700 துறவிகளைக் கொண்டு, மக்களுக்கும் திருச்சபைக்கும் பணியாற்றி வருகிறது. இச்சபையின் தனிவரங்களான, குழும வாழ்வு, மரியன்னை பக்தியை பரப்புதல் மற்றும் பணி வாழ்வு ஆகிய இவற்றால் ஈர்க்கப்பட்டு மரியன்னையின் ஆன்மீகத்தில் இணைந்தவர்கள், இன்று தங்களை மரியின் ஊழியர் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று பெருமையடைகின்றனர்.

இம்மரியின் ஊழியர் சபை குடும்பத்தில், இன்று ஆழ்தியான சபைகளில் வாழும் அருள்சகோதரிகள், 19 திருப்பணிநிலை சார்ந்த துறவற சபைகளில் வாழும் அருள்சகோதரிகள், 2 பொதுநிலைச் சபைகளில் வாழ்வோர், மரியின் ஊழியர் சபை பொது நிலையினர் மற்றும், பல்வேறு குழுக்கள் என, பெரிய குடும்பமாக பெருகியிருப்பது பெரும் மகிழ்ச்சியே. மரியின் ஊழியர்கள் “Servants of Mary அல்லது “Servites” என்று பலராலும் அறியப்படுவர்.

மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுபேரவை

மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுபேரவை, “மாறிவரும் உலகில் நம்பிக்கையின் ஊழியர்கள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டது. இக்கருப்பொருளானது, Bernhard M.Alpres என்ற எம் சபையைச் சார்ந்த சகோதரர் ஒருவர் 1991 ஆம் ஆண்டு வரைந்த ஓர் ஓவியத்தை மையமாகக் கொண்டு உருவானதாகும். இந்த ஓவியத்தில் மரியின் ஊழியர் சபையின் ஏழு புனிதர்கள், மலையிலிருந்து இறங்கி நகரத்தை நோக்கி வருவதுபோல் வரையப்பட்டிருக்கும். இன்றைய மாறிவரும் உலகில் மரியின் ஊழியர்கள் நம்பிக்கையின் ஊழியர்களாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுபேரவையின் தயாரிப்பு தொடங்கியது.

அ. பொதுப்பேரவையின் முன் தயாரிப்புக்கள்

1.பொதுப்பேரவையின் ஆவணங்கள் தயாரிக்கும் குழுக்கள் அமைப்பு

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பொதுப் பேரவையின் ஆவணங்கள் தயாரிக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டன.

1.பொதுப் பேரவையின் நிகழ்ச்சி குறிப்புக்களை வரையறுக்கும் குழு (Agenda formulating Commission)

2.பொதுப்பேரவையின் சுற்றுமடல் தயாரிக்கும் குழு (Commission to prepare a Marian document or message)

3.மரியின் ஊழியர் சபையின் அமைப்புச்சட்ட விதிமுறைகளை ஆய்வு செய்யும் குழு (Commission for the study of Constitutions)

4.            மரியானும் பாப்பிறை மரியியல் கல்லூரி ஆய்வு குழு (Marianum  Commission)

5.பல்தரப்பட்ட கலாச்சாரங்களை உள்ளடக்கி குழுமங்களை உருவாக்குவதற்கு நெறிமுறைகளை வரையறை செய்யும் குழு (Commission to prepare guidelines for intercultural community)

6.மரியின் ஊழியர்களின் உரோமை பிரசன்னத்தை சீரமைவு செய்யும் குழு (Commission for reorganizing the Servite presence in Rome)

இந்த 6 குழுக்களும் தங்கள் அறிக்கைகளை 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் சபை அதிபரிடம் சமர்ப்பித்தன.

2.பொதுப் பேரவையின் ஆவணங்கள் தயாரிப்பு

சபை அதிபர் தன் ஆலோசகர்களுடன் இணைந்து,

             குழக்கள் அளித்த அறிக்கைகள்

             சபை அதிபர், சபையின் செயலகங்கள், அலுவலகங்கள் தயாரித்துத் தந்த 6 ஆண்டுகால அறிக்கைகள்

             மாநில, இணை மாநில அதிபர்களின் அறிக்கைகள்

இவற்றை அடிப்படையாகக் கொண்டு பொதுப் பேரவையின் இறுதிநிலை ஆவணங்களைத் தயாரித்தனர்.

3.பொதுப் பேரவையின் பிரதிநிதிகள் தேர்வு

ஒவ்வொரு மாநிலமும், இணை மாநிலமும் மற்றும், பிரதிநிதித்துவ மாநிலமும் தமக்கான பொதுப் பேரவையின் பிரதிநிதிகளைத் தங்கள் சட்டவரையறைக்கு உட்பட்டு தேர்வு செய்வர்.

             ஒவ்வொரு மாநிலமும், இணை மாநிலமும் மற்றும், பிரதிநிதித்துவ மாநிலமும் ஒருவரையும்,

             25 நபர்களுக்கு மேல் இருந்தால் இருவரையும்,

             50 நபர்களுக்கு மேல் இருந்தால் மூவரையும்,

தங்கள் பிரதிநிதிகளாக பொதுப்பேரவையில் பங்கேற்கத் தேர்ந்தெடுப்பர்.

11 மாநிலங்கள், (Province) 1 இணை மாநிலம் (Vicariate) மற்றும், 3 பிரதிநிதித்துவ மநிலங்கள் (Delegation) இவற்றிலிருந்து 32 பிரதிநிதிகள் பொதுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இந்த 32 பிரதிநிதிகளோடு (Delegates for Chapters), 18 சபை நிர்வாகிகளும் (ex-ufficio members for the Chapter) பொதுப் பேரவையின் உறுப்பினர்கள் ஆவார்கள். சபை நிர்வாகிகள் குழுவில் சபை அதிபர், அவரின் ஆலோசகர்கள், மாநில மற்றும் இணை மாநில அதிபர்கள் அடங்குவர். இவர்கள் தங்களின் பணி நிமித்தமாக பொதுப் பேரவையின் உறுப்பினர்கள் ஆகின்றனர்.

இவ்வாறு 50 உறுப்பினர்களோடு மரியின் ஊழியர் சபை, தனது 214வது பொது பேரவையைக் கொண்டாடத் தயாரானது.

ஆ. பொதுப் பேரவைக் கொண்டாட்டம்

அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல், 27 ஆம் தேதி வரை உரோமை நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரிச்சா என்ற நகரில் மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுப் பேரவை கொண்டாடப்பட்டது. 19 நாடுகளைச் சார்ந்த 49 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பொதுப் பேரவை, தூய ஆவியாரின் துணைவேண்டி தொடக்கத் திருப்பலியோடு, அக்டோபர் 7 ஆம் தேதி இனிதே தொடங்கியது.

பொதுப்பேரவை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

1.முதல் பிரிவு (முதல் வாரம், 7-12 அக்டோபர் 2019): (கடந்த காலம்) கடந்த 6 ஆண்டுகால மதிப்பீடு மற்றும் அறிக்கைகள் சமர்ப்பிப்பு (Evaluation and presentation of the reports)

             சபை அதிபர், சபையின் செயலகங்கள், அலுவலகங்கள் தயாரித்துத் தந்த 6 ஆண்டுகால அறிக்கைகள்

             மாநில, இணை மாநில அதிபர்களின் அறிக்கைகள்

             பொதுப்பேரவையின் தயாரிப்பு குழுக்கள் அளித்த அறிக்கைகள்

ஒரு வார காலம் முழுவதும் மேற்சொன்ன இவ்வறிக்கைகள் வாசிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டன. இவ்வாறாக மரியின் ஊழியர் சபையின் 6 ஆண்டுகால வாழ்க்கையானது பொதுப் பேரவை உறுப்பினர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது.

2.இரண்டாம் பிரிவு (இரண்டாம் வாரம், 14-19 அக்டோபர் 2019): (நிகழ் காலம்) சபை நிர்வாகிகளின் தேர்வு மற்றும் பொதுப்பேரவையின் குழுப் பணிகள் (Election and Commission work)

சபை நிர்வாகிகளின் தேர்தல்

அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி நடந்த சபை அதிபர் தேர்தலில் Gottfried M.Wolff (ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்), மீண்டும் சபை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடந்த சபை அதிபரின் ஆலோசகர்களுக்கான தேர்தலில் Sergio M.Ziliani (இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்), Benito M.Isip (பிலிபைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்), David M. Mejia Cesneros (மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்) மற்றும் Souriraj M.Arulananda Samy (இந்தியா நாட்டைச் சேர்ந்தவர்) சபை அதிபரின் ஆலோசகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களிலிருந்து David M. Mejia Cesneros துணை அதிபராகவும், Souriraj M.Arulananda Samy சபையின் செயலுரிமையாளராகவும் (Procurator of the Order) தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நடந்த சபையின் செயலருக்கான தேர்தலில் Sergio M.Ziliani சபையின் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுப்பேரவையின் குழு பணிகள்

இந்த வாரத்தில் 5 குழுக்கள் நிறுவப்பட்டு பொதுப் பேரவையின் குழு பணிகள் நடைபெற்றன:

முதல் குழு: நம்பிக்கையின் ஊழியர்கள் (Servants of Hope)

மாறிவரும் இந்த உலகில் மரியின் ஊழியர்கள் எவ்வாறு நம்பிக்கையின் ஊழியர்களாக வாழ வேண்டும் என்பது பற்றி கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரித்தனர்.

இரண்டாம் குழு: மாறிவரும் உலகில், குழு வாழ்வு (Fraternal Life)

இன்றைய மாறிவரும் உலகில் மரியின் ஊழியர் சபையின் குழுமங்கள் எவ்வாறு பலதரப்பட்ட கலாச்சாரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு வறையறைகள் வகுக்கப்பட்டன.

மூன்றாம் குழு: மாறிவரும் உலகில், உருவாக்கம் (Formation)

மரியின் ஊழியர் சபையின் உருவாக்கம் எவ்வாறு இருக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டு, தொடக்ககால உருவாக்கம் மற்றும் தொடர் உருவாக்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.

நான்காம் குழு: மாறிவரும் உலகில், சபையின் அமைப்பு முறைகள் (Organization of the Order)

இன்றைய சூழலில் எத்தகைய மாற்றங்கள் சபையின் அமைப்பு முறைகளில் உருவாக்கப்பட வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஐந்தாம் குழு: மாறிவரும் உலகில், சபையின் பொருளாதார நிர்வாகம் (Administration of goods)

சபையின் பொருளாதார மற்றும் சொத்து நிர்வாகங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது பற்றி கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

3.மூன்றாம் பிரிவு (மூன்றாம் வாரம், 21-26 அக்டோபர் 2019): (எதிர்காலம்) எதிர்வரும் 6 ஆண்டுகளுக்கு திட்டமிடுதல் (Planning for the forthcoming 6 years)

மேற்சொன்ன 5 குழுக்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட திட்ட வரைவுகளை எழுதி பொதுப் பேரவையில் சமர்ப்பித்து, விவாதித்து பொதுப் பேரவையின் இசைவைப் பெற்றனர். வருகின்ற 6 ஆண்டு காலத்தில் எத்தகைய மாற்றங்களை மரியின் ஊழியர்கள் உருவாக்கி நம்பிக்கையின் ஊழியர்களாக வாழ வேண்டும் என்ற வழிமுறைகளை வகுத்தளித்தது இந்த பொதுப்பேரவை.

மரியின் ஊழியர் குடும்பத்திற்கு ஒரு சுற்றுமடல்

214வது பொதுப் பேரவை, மரியின் ஊழியர் குடும்பத்திற்கு ஒரு சுற்றுமடல் தயாரித்தது. அன்னை மரியாவையும், மரியின் ஊழியர்களின் இன்றைய வாழ்வையும் மற்றும் மரியின் ஊழியர்களின் ஆன்மீகத்தையும் மையப்படுத்தி “மாறிவரும் உலகில் நம்பிக்கையின் ஊழியர்கள்” என்ற தலைப்பில் ஒரு சுற்றுமடல் தயாரிக்கப்பட்டு பொதுப் பேரவையின் அனுமதியைப் பெற்று வெளியிடப்பட்டுள்ளது. இச்சுற்றுமடல் மரியின் ஊழியர்கள் இன்றையச் சூழலில் எவ்வாறு நம்பிக்கையின் ஊழியர்களாக அன்னை மரியாவைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.

இ.பொதுபேரவையின் சிறப்பு நிகழ்வுகள்

மரியின் ஊழியர்களின் குடும்ப விழா

அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி, சபை அதிபரின் ஆலோசகர்கள் பொறுப்பேற்ற நாளன்று உரோமை நகரிலும், அதைச்சுற்றி வாழும் மரியின் ஊழியர் குடும்பத்தின் சகோதர சகோதரிகள், சுமார் 200 பேர் ஒன்றுகூடி தங்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். பொதுப் பேரவையின் நிகழ்வுகளில் ஒன்றான இந்நிகழ்ச்சியில் அனைவரும் ஒரே மரியின் ஊழியர் குடும்பமாய் இணைந்திருந்தது ஒரு சிறப்பு நிகழ்வாகும்.

பொதுபேரவை உறுப்பினர்கள் திருத்தந்தையோடு சந்திப்பு

அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பொதுப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து அவரின் ஆசியையும் அறிவுரையையும் பெற்றனர். இச்சந்திப்பின்போது, தான் தயாரித்திருந்த உரையை வாசிக்காமல் அதை அப்படியே சபை அதிபரிடம் அளித்துவிட்டு. தன்னுடைய பாணியில் இயல்பாக திருத்தந்தை பிரான்சிஸ் பொதுப் பேரவை உறுப்பினர்களிடம் உரையாற்றினார்.

1957 ஆண்டு முதல் தனக்கு மரியின் ஊழியர்களைத் தெரியும் என்றும், தன்னுடன் இரண்டு மரியின் ஊழியர் சபையின் சகோதரர்கள் இறையியல் படித்தார்கள் என்றும், அவர்கள் வழியாகவே தனக்கு மரியின் ஊழியர்களைப் பற்றி தெரியவந்தது என்றும், தான் குருவானது முதல், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று, ஏழு புனிதர்கள் திருவிழாவை தவறாமல் கொண்டாடுவதாகவும், அந்நாட்களில் எல்லா மரியின் ஊழியர்களையும் நினைவுகூர்ந்து செபிப்பதாகவும் கூறினார். மேலும் பின்வரும் அறிவுரைகளையும் வழங்கினார்.

நீங்கள் ஊழியர்கள் அதுவும் நம்பிக்கையின் ஊழியர்கள், ஆகவே ஊழியர்களாக மட்டுமே இருங்கள், ஒருபோதும் முதலாளிகளாக மாறாதீர்கள். நீங்கள் நம்பிக்கையின் ஊழியர்கள், ஆகவே மற்றவர்க்கு நம்பிக்கை அளிப்பவராகவே இருங்கள். ஒருபோதும் அவநம்பிக்கையோடு வாழாதீர்கள். அனைத்தையும் இழந்தவருக்கு நம்பிக்கை அளிப்பவராக இருங்கள். நம்பிக்கையின் விதைகளாகவும், நம்பிக்கையை விதைப்பவர்களாகவும் இருங்கள்.

நீங்கள்; ஊழியர்கள் அதுவும் மரியின் ஊழியர்கள், ஆகவே அன்னை மரியாவைப்போல் இருங்கள். அன்னை மரியாவைப்போல் நம்பிக்கை மிகுந்தவர்களாக வாழுங்கள். அன்னை மரியாவின் பின்வரும் 4 பண்புகளைப் பின்பற்ற ஒருபோதும் மறவாதீர்கள்:

1.இயேசுவின் பிறப்பு பற்றிய மங்கள செய்தி கேட்டதும் விரைந்து சென்று எலிசபெத்தை சந்தித்தார் (உதவி செய்தார்).

2.கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே, மகன் இயேசுவிடம் உதவி கேட்டு முறையிட்டார் (பரிந்து பேசினார்).

3.இயேசுவின் சிலுவை மரத்தினடியில் முழு விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் வேதனைகளைத் தாங்கிக்கொண்டு நின்றார் (துன்பத்தில் பங்கேற்றார்).

4.திருத்தூதர்களோடு செபத்தில் ஒன்றிணைந்து தூய ஆவியாரின் வருகைக்காக காத்திருந்தார் (உடனிருந்து செபித்தார்).

அன்னை மரியாவின் இப்பண்புகள் மரியின் ஊழியர்களாகிய உங்களின் வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும்.

நீங்கள் ஊழியர்கள், அதுவும் ஏழு புனிதர்களின் வழிநடந்து பணியாற்றும் ஊழியர்கள், ஆகவே ஏழு புனிதர்களைப்போல அனைத்தையும் துறந்து எளிய வாழ்கையை வாழுங்கள். உங்கள் ஏழு புனிதர்கள் மலையிலும் வாழத் தெரிந்தவர்கள், நகரிலும் வாழத் தெரிந்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏழு புனிதர்களைப் போல மலையிலும் நகரிலும் பணியாற்றுங்கள்.

நீங்கள் ஊழியர்கள் அதுவும் “மாறிவரும் உலகில் நம்பிக்கையின் ஊழியர்கள்”, ஆகவே மாறிவரும் உலகைக் குறித்து கவனமாக இருங்கள். நேர்மறையான சிந்தனைகளோடு வாழுங்கள். தவறான கருத்துக்களைக் குறித்து கவனமாக இருங்கள். நல்லவற்றை மட்டும் பிறரோடு பகிருங்கள். மாறிவரும் உலகில் நம்பிக்கை கொடையாளர்களாக மாறுங்கள். செபத்தில் நிலைத்திருங்கள். செபத்தால் கிடைக்கும் கொடைகளை நம்புங்கள். ஒருபோதும் செபிக்க மறவாதீர்கள். தொடர்ந்து செபியுங்கள், எனக்காகவும் செபியுங்கள்.

இத்தகைய அருமையான வாழ்த்துக்களோடு பொதுப் பேரவையின் உறுப்பினர்களோடு சேர்ந்து மூவேளை செபத்தை செபித்த பின்பு, தனது ஆசீர்வாதங்களைத் தந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறுதியாக அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி காலை நன்றித் திருப்பலியோடு இனிதே நிறைவுற்றது, மரியின் ஊழியர் சபையின் 214வது பொதுபேரவை.

Souriraj M.Arulananda Samy OSM

சபை அதிபரின் பொது ஆலோசகர் மற்றும்

சபையின் செயலுரிமையாளர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2019, 14:32