தேடுதல்

Vatican News
நம்பிக்கையின் உருமாற்றும் சக்தி - எசாயா 2: 1-5 நம்பிக்கையின் உருமாற்றும் சக்தி - எசாயா 2: 1-5 

திருவருகைக்காலம் - முதல் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

வாள்கள், கலப்பைக் கொழுக்களாக மாறும், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது என்ற கனவுகளை, நம் வருங்காலத் தலைமுறையின் உள்ளங்களில் விதைத்து, அவர்களை நம்பிக்கையில் வளர்க்க முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருவருகைக்காலம் - முதல் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

எரிக் சீகல் (Erich Segal) என்ற எழுத்தாளர் உருவாக்கிய 'லவ் ஸ்டோரி' (Love Story) என்ற ஆங்கில நாவல், 1970ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 'வாலன்டைன் நாள்', அல்லது, 'காதலர் நாள்' என்றழைக்கப்படும் 14ம் தேதி வெளியானது. அதே ஆண்டு, டிசம்பர் மாதம், அந்த நாவல், ஒரு திரைப்படமாகவும் வெளியானது. அந்த நாவலும், திரைப்படமும் உலகெங்கும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

அந்த நாவல், மற்றும், திரைப்படத்தின் முதல் வரிகள், நம் சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கின்றன: "இருபத்தைந்து வயதில் இறந்துபோன ஓர் இளம்பெண்ணைப் பற்றி என்ன சொல்லமுடியும்? அவள் அழகானவள். மிகவும் புத்திசாலி. அவளுக்கு மோசார்ட் (Mozart), பாக் (Bach) பிடிக்கும். பீட்டில்ஸ் (Beatles) பிடிக்கும். என்னையும் பிடிக்கும்." என்ற வரிகளை, அந்தக் கதையின் நாயகன் சொல்வதாக, இந்த நாவல், மற்றும், திரைப்படத்தின் ஆரம்பம் அமைந்திருந்தது.

பொதுவாக, ஒரு நாவல், அல்லது, திரைப்படத்தின், ஆரம்பத்திலேயே, கதையின் முடிவு இதுதான் என்று யாரும் சொல்வதில்லை. முடிவு என்னவென்று தெரியாமல் வாசிக்கப்படும் நாவல், மற்றும், பார்க்கப்படும் திரைப்படம், நமக்குள் எதிர்பார்ப்பை உருவாக்கும்; இறுதியில், வரும் முடிவு, நமக்கு, அதிர்ச்சியை, மகிழ்வை, அல்லது சோகத்தை உருவாக்கும் என்ற நோக்கத்துடன், முடிவுகள் முதலிலேயே வெளிப்படுத்தப்படுவதில்லை.

'லவ் ஸ்டோரி' கதாநாயகியின் மரணத்தைப் பற்றி முதலிலேயே சொல்லப்பட்டது ஏன் என்ற கேள்வி, ஆசிரியர், எரிக் சீகல் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இந்தக் கதையின் மிகத் துயரமான முடிவை, முதலிலேயே சொல்லிவிடுவதால், அது, கதையின் இறுதியில் வரும்போது, ஏற்படுத்தும் அதிர்ச்சியை, துவக்கத்திலேயே நாம் சந்தித்துவிடுகிறோம். இதன் விளைவாக, நம்மால் கதையை, பரபரப்பின்றி, அமைதியாக வாசிக்கமுடிகிறது" என்று பதில் கூறினார்.

ஒருவேளை, கதையின் முடிவை மக்கள் துவக்கத்திலேயே அறிந்துகொண்டது, இந்த நாவலையும், திரைப்படத்தையும் இன்னும் ஆழமாக அனுபவிக்க உதவியாக இருந்திருக்கும். அதுவே, அந்நாவலும், திரைப்படமும் வெற்றியடைய ஒரு காரணமாகவும் இருந்திருக்கலாம். வாழ்வின் இறுதியில் மரணம் உண்டு என்ற முடிவை சரியாகப் புரிந்துகொண்டால், பரபரப்பு, பதட்டம், பயம் என்ற எதிர்மறை உணர்வுகள் இன்றி, வாழ்வை, இன்னும் அமைதியாக வாழமுடியும். இந்த ஆழமான உண்மையை, 'லவ் ஸ்டோரி' நமக்குச் சொல்லித் தருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வாழ்வின் முக்கியக் கேள்வியான முடிவைப்பற்றி - அது, உலக முடிவாயினும் சரி, நம் சொந்த வாழ்வின் முடிவாயினும் சரி - அதைப்பற்றி எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும், திருவருகைக் காலத்துடன், ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். திருவருகைக் காலம் என்றதுமே, கிறிஸ்மஸ் விழாவுக்குத் தேவையான ஏற்பாடுகள், களைகட்டத் துவங்கிவிடும். குழந்தை வடிவில் நம் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி (மத்தேயு 24: 37-44) நமக்குத் தரப்பட்டுள்ளது.

உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. அது, நாளையே வரலாம்; அல்லது, நாலாயிரம் கோடி ஆண்டுகள் சென்று வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவற்றைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்க வேண்டும்  என்று சிந்தித்தால் பயனுண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க, நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க, இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது. நாம் சந்திக்கச் செல்வது, நமது அன்புத் தந்தையை, தாயை, அல்லது உற்ற நண்பரை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம். நாம் சந்திக்கப் போவது, நம்மைத் தீர்ப்பிடவிருக்கும் ஒரு நீதிபதியை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பு, பயத்தையும், கலக்கத்தையும் உருவாக்கும்.

நமக்குத் தெரியாத ஒருவரைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் விதம், நாம் மற்ற நேரங்களில் நடந்துகொள்ளும் விதத்தைவிட வித்தியாசமாக இருக்கும். அதிலும், நாம் சந்திக்கச் செல்வது, மிக முக்கியமான ஒருவர் என்றால், மிகவும் கவனமாக நடந்துகொள்வோம். குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் அதிகம் வளர்ந்தவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள் எந்நேரத்திலும், தங்கள் இயல்பான பண்புடன், உண்மையான ஈடுபாட்டுடன், ஒவ்வொரு செயலையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல், அல்லது, தன்னைச் சூழ்ந்திருப்போருக்குத் தகுந்ததுபோல், தங்களை மாற்றிக்கொள்ளாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை, நமக்குப் பாடமாக அமையவேண்டும்.

நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி அவர்கள், ஒருநாள், நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப்போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் ஒரு நிமிடம் சிந்தித்தார். பின்னர், ஒரு புன்னகையுடன், தன் நண்பரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்" என்றார்.

மரணத்தை, பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள், அதைக் கண்டு பயப்பட வேண்டியிருக்கும். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். அம்முரண்பாடுகளையெல்லாம் சரிசெய்துவிட்டு, மரணத்தைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும், நல்லவிதமாக, பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு, சாவு, எவ்வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு, புனித பிலிப் நேரி அவர்கள், நல்லதோர் எடுத்துக்காட்டு.

சாவின் வழியாக, தன்னைச் சந்திக்கப்போவது, அல்லது, தான் சென்றடையப்போவது, இறைவன்தான் என, ஆழமாக உணர்ந்தபின், பயமோ, பரபரப்போ தேவையில்லையே. புனித பிலிப் நேரியைப் பொருத்தவரை, நாம் இப்படி கற்பனைசெய்து பார்க்கலாம். நண்பர் சொன்னதுபோலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு சாவு நேரிட்டால், மறு வாழ்வில், அந்த இறைவனுடன்,  அல்லது, வானகத் தூதர்களுடன் தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார், பிலிப்.

ஜான் வெஸ்லி என்பவர், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது, பொறுப்புடன் சரியானக் கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு பணி என்ற எண்ணத்தை, இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "மாலை நான்கு மணிக்கு, நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று ஜான் வெஸ்லி அவர்கள் சொன்னாராம்.

புனித பிலிப் நேரியைப் போல், ஜான் வெஸ்லியைப் போல், மனதில் எவ்வித அச்சமுமின்றி, அமைதியாக மரணத்தைச் சந்திக்கும் பக்குவம், ஒரு நாளில் உருவாகும் மனநிலை அல்ல. வாழ்நாளெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தும் மனநிலை அது. இத்தகைய நிலையை அடைந்தவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தவர்கள். இத்தகைய அமைதியை, தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்பவர்கள் இவ்வுலகில் பெருகினால், நாம் இன்று ஏங்கித்தவிக்கும் அமைதி, உலகெங்கும் நிறையும்.

அமைதி நிறைந்த உலகை ஒரு கனவாக, கற்பனையாகக் கண்டவர், இறைவாக்கினர் எசாயா. அவரது கற்பனை வரிகள், இந்த ஞாயிறன்று, நமது முதல் வாசகமாக ஒலிக்கின்றன:

எசாயா 2 : 2,4-5

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்... மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்... அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இறைவாக்கினர் எசாயாவின் கனவு, உள்ளத்தை உயர்த்துகிறது. அதே வேளையில், நம்முன் சவால்களையும் வைக்கின்றது. இன்றைய உலகின் பல பகுதிகளில் நிலவும் மோதல்களைக் காணும்போது, 'துண்டு, துண்டாக நிகழும் மூன்றாம் உலகப்போர்' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறிவரும் ஒரு கருத்து, நினைவில் எழுகிறது.

‘மூன்றாம் உலகப்போரி’ல் ஈடுபட்டிருக்கும் உலக அரசுகள், போர்க்கருவிகளை விவசாயக் கருவிகளாக மாற்றினால், இவ்வுலகம் வாழும். ஆனால், இன்றைய நிலையில், விவசாயக் கருவிகளும் போர்க்கருவிகளாக மாறுவதை அவ்வப்போது காண்கிறோம். இந்தியாவில் உருவாகும் சாதிக்கலவரங்களில், பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள், உயிர்களை அறுவடை செய்யும் கொடூரம் நடந்துவருகிறது.

போர்க்கருவிகளை விவசாயக் கருவிகளாகவோ, விவசாயக் கருவிகளை போர்க்கருவிகளாகவோ மாற்றுவது, கருவிகளைப் பொருத்தது அல்ல, மனிதர்களின் முடிவுகளைப் பொருத்தது. அண்மைய ஆண்டுகளில், உலகத்தலைவர்கள், பூமிக்கோளத்தையும், மனித சமுதாயத்தையும் வாழவைக்கும் முடிவுகளை எடுப்பதற்குப் பதில், அழிவுக்கு இட்டுச்செல்லும் முடிவுகளை எடுத்துவருவது, வேதனைதரும் உண்மை.

நல்லவேளையாக, அண்மையில், ஐரோப்பிய பாராளுமன்றம் விழித்தெழுந்துள்ளது. பருவநிலையில் உருவாகியுள்ள மாற்றங்களைத் தடுக்க, அவசரகால நடவடிக்கைகளை அரசுகள் அறிவிக்கவேண்டும் என்ற முடிவை, நவம்பர் 28, கடந்த வியாழனன்று, ஐரோப்பிய பாராளுமன்றம் எடுத்துள்ளது. "நமது இல்லம் தீப்பிடித்து எரிகிறது. ஐரோப்பிய பாராளுமன்றம் இந்த தீயை, அருகிலிருந்து வேடிக்கைப் பார்ப்பது மட்டும் போதாது" என்ற கருத்தும், "நம் வருங்காலத் தலைமுறைக்கு ஓர் உலகை அளிக்கப் போகிறோமா? அல்லது, முற்றிலும் அழிக்கப் போகிறோமா?" என்ற கருத்தும் இந்தப் பாராளுமன்ற அமர்வில் பேசப்பட்டன.

உலகெங்கும், வருங்காலத் தலைமுறையினர், தங்கள் எதிர்காலத்திற்கு நிகழும் அழிவுகளை வேடிக்கை பார்ப்பதற்குப் பதில், அதற்காகப் போராடத் துவங்கியுள்ளது, நம்பிக்கை தருகிறது. சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்க, சர்வாதிகார போக்கில் செயல்படும் அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அணு சக்தி, மற்றும் நிலத்தடி எரிசக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வர்த்தகச் சக்திகளைத் தடுக்க, போர்களுக்கு எதிராகப் போராட, இளையோர் திரண்டு வருகின்றனர்.

நமக்கு இன்று வழங்கப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் முடிவு காலத்தைப் பற்றி சொல்கின்றன. அழிவும், இருளும் இருக்கும் என்று சொன்னாலும், நம்பிக்கையுடன், விழிப்புடன், இதை எதிர்நோக்கும்படி மூன்று வாசகங்களும் சொல்லித் தருகின்றன. ஒவ்வொரு வாசகத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ள வரிகள் நம் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வரிகள்:

யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள், நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம். (எசாயா 2 : 5)

இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். (உரோமையர் 13 : 14)

ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். (மத்தேயு 24 : 44)

போர்களாலும், சுற்றுச்சூழல் சீரழிவாலும் காயப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு, நம்பிக்கை தரும் செய்திகள் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. இத்திருவருகைக் காலத்தில், நம்மால் இயன்றவரை, நம்பிக்கை செய்திகளை பகிர்ந்துகொள்ள முயல்வோம். வாள்கள், கலப்பைக் கொழுக்களாக மாறும், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது என்ற கனவுகளை, நம் வருங்காலத் தலைமுறையின் உள்ளங்களில் விதைத்து, அவர்களை நம்பிக்கையில் வளர்க்க முயல்வோம்.

30 November 2019, 14:49