தேடுதல்

Vatican News
பெர்லின் சுவருக்கருகே 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி மக்கள் திரண்டபோது... பெர்லின் சுவருக்கருகே 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி மக்கள் திரண்டபோது... 

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவு

ஜெர்மன் நாட்டை இரு பிரிவுகளாகப் பிரித்துவந்த பெர்லின் சுவர், 1989ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி இடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவையொட்டி ஆயர்களின் அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜெர்மன் நாட்டை இரு பிரிவுகளாகப் பிரித்துவந்த பெர்லின் சுவர், 1989ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி இடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவு, வருகிற சனிக்கிழமை சிறப்பிக்கப்படுவதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து, அறிக்கையொன்றை, நவம்பர் 6, இப்புதனன்று வெளியிட்டுள்ளனர்.

28 ஆண்டுகளாக குடும்பங்களையும், நண்பர்களையும் பிரித்து வைத்த பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது, ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணம் என்று கூறும் ஆயர்களின் அறிக்கை, இச்சுவர் இடிந்து விழுந்தபின், ஐரோப்பிய மக்கள், உலகத்தை நோக்கும் பார்வை மாறியது என்று கூறியுள்ளது.

1989ம் ஆண்டு, ஹங்கேரி, இரஷ்யா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் உருவாகிவந்த மாற்றங்களின் சிகரமாக, ஐரோப்பாவின் பல்வேறு பிரிவுகளுக்கு அடையாளமாக விளங்கிய பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது என்று, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

அவ்வேளையில், திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், "ஐரோப்பா, தன் இரு நுரையீரல்களையும் கொண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவேண்டும்" என்று கூறிய சொற்களையும், ஐரோப்பிய ஆயர்கள் தங்கள் அறிக்கையில் நினைவுகூர்ந்துள்ளனர்.

சுதந்திரமான, ஒருங்கிணைந்த ஐரோப்பாவை உருவாக்க, அனைத்து கிறிஸ்தவர்களும், ஐரோப்பிய குடிமக்களும் உழைக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆயர் பேரவைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆயர்கள் விடுத்துள்ளனர்.

06 November 2019, 15:43