காமரூன் ஆயர் Abraham Boualo Kome காமரூன் ஆயர் Abraham Boualo Kome  

காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக காமரூன் ஆயர்கள்

ஆப்ரிக்காவில், பொறுப்பற்றமுறையில் மரங்களை வெட்டுதல், கனிம வளங்களைச் சுரண்டுதல் போன்றவை, ஆயுத மோதல்களுக்கு வழியமைக்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்காவின் காமரூன் நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராக, தலத்திருஅவை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, காமரூன் ஆயர் பேரவை தலைவரான ஆயர் Abraham Boualo Kome அவர்கள், பெரிய பெரிய மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு, வாகனங்கள் வரிசை வரிசையாகச் செல்வதைக் காண்கையில், காடுகள் அழிக்கப்பட்டு வருவது தெளிவாக வெளிப்படுகின்றது என்று கூறினார்.

காங்கோ ஆற்றுப்படுகையின் திருஅவை பணிக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றும், ஆயர் Abraham Kome அவர்கள், இயற்கையை அழிப்பது, கடவுளைப் புண்படுத்துவதாகும் என்று கூறினார்.

ஆப்ரிக்காவில் பொறுப்பற்றமுறையில் மரங்களை வெட்டுதல், கனிம வளங்களைச் சுரண்டுதல் போன்றவை, அக்கண்டத்தின் காடுகளை அழிக்கின்றன, ஆயுத மோதல்களுக்கு வழியமைக்கின்றன, தண்ணீர் வளங்களை மாசுபடுத்துகின்றன மற்றும், நிலச்சரிவுகளுக்குக் காரணமாகின்றன என்று கவலை தெரிவித்தார், ஆயர் Abraham Kome.

மரம் வெட்டுதல் மற்றும், கனிமச் சுரங்கங்களால் உள்ளூர் மற்றும், பழங்குடிகள் மட்டுமின்றி,  சிலநேரங்களில், நாட்டின் ஒட்டுமொத்த சமுதாயமும் வறியநிலைக்கு உள்ளாகின்றது என்று கூறிய காமரூன் ஆயர், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கு சிறார்க்குக் கற்றுத் தருகிறோம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2019, 15:01