தேடுதல்

Vatican News
அமெரிக்காவில் கிறிஸ்தவம் அமெரிக்காவில் கிறிஸ்தவம் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: அமெரிக்காவில் கிறிஸ்தவம்-பகுதி-3

Pew ஆய்வு மையம் 2014ம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இலத்தீன் அமெரிக்க மக்களில் 69 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். மற்றும், 19 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இலத்தீன் அமெரிக்கா என்பது, வடக்கே மெக்சிகோவையும், தென் அமெரிக்காவின் தென்முனை வரை அமைந்துள்ள, இருபது நாடுகளையும், பதின்மூன்று சார்புநிலை நாடுகளையும் கரீபியன் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியாகும். இலத்தீன் அமெரிக்கா, 19 கோடியே 19 இலட்சத்து ஏழாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை, அதாவது இப்பூமியின் ஏறத்தாழ 13 விழுக்காட்டு நிலப்பகுதியைக் கொண்டுள்ளது. 1492ம் ஆண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் தலைமையிலான நாடுகாண் பயணியர் குழு, சாந்தோ தொமிங்கோவை கண்டுபிடித்ததிலிருந்து இலத்தீன் அமெரிக்கத் திருஅவை வரலாறு துவங்குகிறது. அந்த நாடுகாண் பயணத்தின்போது, பிந்தா, நீனா, சாந்தா மரியா ஆகிய மூன்று கப்பல்களில் சென்ற நூறு ஆண்களில் ஒருவர்கூட அருள்பணியாளர் இல்லை. ஆனால், இந்த இஸ்பானியர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள். 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இஸ்பானியர்களோ, போர்த்துக்கீசியர்களோ யாராக இருந்தாலும், அவர்கள் திருஅவை மீது ஆர்வம் கொண்டிருந்தவர்கள். புனித பூமியை இஸ்லாமியரிடமிருந்து காப்பதற்கு, சிலுவைப்போர் புரிந்தவர்கள். இந்தக் கண்டுபிடிப்புக்கு பத்து மாதங்களுக்கு முன்னர்தான், இஸ்பெயின் பேரரசு, கிரனாடாவிலிருந்து (Granada) மூர்ஸ் இனத்தவரை விரட்டியது. அத்துடன், எட்டு நூற்றாண்டுகளாக நடந்த விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. இந்தப் பின்னணியை வைத்து, புதிய உலகிற்கு மீட்பைக் கொணர்வதற்காக, இறைவன் இஸ்பானிய பேரரசை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்துள்ளார் என்ற நம்பிக்கை பிறந்தது. எனவே இஸ்பானிய பேரரசர்களான இசபெல், பெர்டினான்டு, பின்னாளில் பிலிப், ஆகிய மூவர் புதிய உலகை கைப்பற்றுவதை ஊக்குவித்தனர். அதனால் இஸ்பானிய பேரரசர்கள், 1493ம் ஆண்டில், இரண்டாவது நாடுகாண் பயணமாக, 17 கப்பல்களில் 15 ஆயிரம் ஆண்களை அனுப்பி வைத்தனர். இவர்களில் புகழ்பெற்ற பெனடிக்ட் சபை துறவி பெர்னார்ட் போயில் (Bernard Boyl) அவர்கள் தலைமையில், திருஅவை பிரதிநிதிகளும், பொதுநிலையினரும் இந்தக் குழுவில் இருந்தனர்.

இஸ்பானியர்கள், புதிய உலகில் நுழையத் துவங்கியபோது, அவர்களுடைய கலாச்சாரத்திற்கும், புதிய உலகில் வாழ்ந்த பழங்குடிகளின் கலாச்சாரங்களுக்கும் பாரதூர வேறுபாடு இருந்தது. சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, அந்தப் பழங்குடி மக்கள், எகிப்திய முதல் பரம்பரையினர் அளவுக்கு உயர்ந்திருந்தனர். Aztec, Maya, Inca போன்ற பழங்குடி இனங்கள், பயிர்த்தொழில் செய்யும் சமுதாயங்களாக இருந்தன. இவர்களில் சிலர், உயர்தர கலாச்சாரத் தாக்கத்தையும் கொண்டிருந்தனர். சிலர், கலாச்சாரத்திலும், மதத்திலும், நாடோடிகளாக, துவக்ககால பண்புகளைக் கொண்டிருந்தனர். இம்மக்கள்,  பகலையும், இரவையும், சூரியனையும், நிலவையும் என இயற்கையை வழிபட்டனர். ஆயினும், கிறிஸ்தவத்தைத் திணிப்பது, பழங்குடி மக்களின் நம்பிக்கைகளை  அழிப்பது, அம்மக்களின் வாழ்வோடு ஒத்துவராத ஒரு வாழ்வுமுறையைக் கொணர்வது ஆகியவற்றிற்காக,  இஸ்பானியர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பழங்குடி மக்களின் கலாச்சாரங்களை அழித்தன.

 13ம் நூற்றாண்டில் போர்த்துக்கல் நாடு கண்டுபிடித்த நாடுகள் மற்றும், கண்டுபிடிக்கவிருந்த நாடுகள் மீது, திருஅவை, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை திருத்தந்தையர், அந்நாட்டிற்கு அளித்தனர். அச்சமயத்தில் திருத்தந்தையர்க்கும், இஸ்பானிய கத்தோலிக்க அரசர்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. கிரானாடா மீண்டும் கைப்பற்றப்பட்டதையடுத்து, திருத்தந்தையர் இஸ்பானிய அரசர்களுக்கு அதிக அதிகாரங்களை அளித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில், பழங்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவித்தல், மறைமாவட்டங்களை நிறுவுதல், ஆயர்களை நியமனம் செய்தல், ஆலயங்கள் எழுப்புதல், துறவு இல்லங்களை அமைத்தல், அருள்பணியாளர்களை மறைப்பணித்தளங்களுக்கு அனுப்புதல் போன்ற அனைத்து உரிமைகளும் இஸ்பானிய அரசர்களுக்கு வழங்கப்பட்டன.

1492ம் ஆண்டில் சாந்தோ தொமிங்கோ கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த 25 ஆண்டுகளுக்கு, கரீபியன் பகுதிகளில் இஸ்பானிய காலனிகள் உருவாகின. இரண்டாவது நாடுகாண் பயணியர் குழுக்களோடு அருள்பணியாளர்களும் சென்றனர். பத்து ஆண்டுகளில்,  89 பிரான்சிஸ்கன் துறவியர், 32 தொமினிக்கன் துறவியர் உட்பட 125 அருள்பணியாளர்கள், மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்று, இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பழங்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கத் துவங்கினர். இவர்கள் ஆலயங்களையும், துறவு இல்லங்களையும் எழுப்பினர். பழங்குடி மக்களோடு தொடர்புகொள்ள நூல்களையும், குறைந்த மதிப்புள்ள சிறிய நகைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றனர். இம்மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட உரிமை மீறல்களை, மறைப்பணியாளர்கள், குறிப்பாக, அந்தோனியோ தெ மொந்தெசினோஸ் (1511), பர்த்தோலோமே தெ லாஸ்காசாஸ் (1514-1566)  ஆகிய இரு தொமினிக்கன் சபை அருள்பணியாளர்கள் விமர்சித்தனர். பழங்குடி மக்கள், ஆயுதக்குழுக்களால் அடக்கப்பட்டது, மற்றும், கடினமான வேலைகளில் உட்படுத்தப்பட்டது மறைப்பணிக்குப் பெரும் தடைகளாக இருந்தன.        

தற்போது இலத்தீன் அமெரிக்காவில் 90 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் உரோமன் கத்தோலிக்கர். 

27 November 2019, 13:47