Vatican News
இயேசு சபை மறைப்பணியாளர்  யுசேபியோ பிரான்செஸ்கோ கீனி இயேசு சபை மறைப்பணியாளர் யுசேபியோ பிரான்செஸ்கோ கீனி  

சாம்பலில் பூத்த சரித்திரம்: அமெரிக்காவில் கிறிஸ்தவம்-பகுதி-2

இயேசு சபை அருள்பணி கீனோ அவர்கள், தன் மறைப்பணித்தளங்களில், பழங்குடி மக்களுக்கு கிறிஸ்தவ கோட்பாடுகளை மட்டுமல்லாமல், கால்நடைகள் வளர்த்தல், கோதுமை போன்ற புதிய வேளாண்மை உற்பத்தி ஆகியவற்றைக் கற்பித்து, பொருளாதாரத்தில் மக்களை உயர்த்தினார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

வட அமெரிக்காவில், 16ம், 17ம் நூற்றாண்டுகளில், புளோரிடா முதல், கலிஃபோர்னியா வரை பரவியிருந்த இஸ்பானிய காலனிகளில், பழங்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவித்த நூற்றுக்கணக்கான மறைப்பணியாளர்களில், இருவர் மிகவும் போற்றப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் பிரான்சிஸ்கன் அருள்பணி புனித ஹூனிபெரொ சேரா (Junipero Serra). மற்றொருவர், இயேசு சபை அருள்பணி யுசேபியோ பிரான்செஸ்கோ கீனி (Eusebio Francesco Chini, 1645-1711). யுசேபியோ கீனோ (Eusebio Francisco Kino) என இஸ்பானியத்தில் அழைக்கப்படும் இவர், இஸ்பானிய மறைப்பணியாளர், நாடுகாண் பயணி, அளவிலும், பொருளிலும் வியத்தகு செய்திகள் கொண்ட கடிதங்கள் எழுதுவதில் வல்லவர் மற்றும், நாடுகளின் புவியியல் அமைப்பை, இரட்டை பரிமாணத்தில், முப்பரிணாமத்தில், அடுக்கடுக்காய் காணும்முறையில் அமைத்தவர். இவர், Favores celestiales (Kino's Historical Memoir of Pimeria Alta, 1919) என்ற சுயசரிதையை எழுதியவர். இவர், மெக்சிகோ நாட்டின் Baja California, Sonora மற்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரிசோனா (Arizona) பகுதிகளில் மறைப்பணியாற்றியவர்களில் முதலும், முக்கியமுமானவர். இவர், இந்தப் பெரிய பகுதிகளின் புவியியல் அமைப்பு மற்றும், அதன் பல்வேறு நுணுக்கங்களை, துல்லியமாக ஆராய்ந்து வரைபடம் அமைத்தவர். Baja California என்ற பகுதி, தற்போது மெக்சிகோ நாட்டின் 32 மாநிலங்களில் வடகோடியில் அமைந்துள்ள, சுதந்திர மற்றும், தன்னாட்சியுரிமையுடைய மாநிலமாகும். இதன் மேற்கே பசிபிக் பெருங்கடலும், கிழக்கே Sonora, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரிசோனா மாநிலம் மற்றும், கலிஃபோர்னியா வளைகுடாவும் உள்ளன. Baja Californiaவின் (Lower California) வாழ்க்கைத் தரத்தால், பலர், அப்பகுதிக்குப் புலம்பெயர்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.  

இயேசு சபையில் அருள்பணி கீனோ

யுசேபியோ கீனோ அவர்கள், அக்கால புனித உரோமன் பேரரசைச் சேர்ந்த, இத்தாலியின் செஞ்ஞோ என்ற ஊரில் 1645ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பிறந்தார். இயேசு சபை பள்ளியில் கல்வி பயின்ற இவர், 1663ம் ஆண்டில் கடும் நோயால் தாக்கப்பட்டார். இந்நோயிலிருந்து குணமானால், இயேசு சபையில் சேர்ந்து, வெளிநாட்டில் மறைப்பணியாற்ற தன்னை அர்ப்பணிப்பதாக இறைவனுக்கு வாக்குறுதி அளித்தார். நோயிலிருந்து அவரும் குணமானார். 1665ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்தார். இயேசு சபை பள்ளிகளில் மேலும் 13 ஆண்டுகள் கல்வி பயின்றார். அச்சமயத்தில், கணிதம் மற்றும், புவியியல் பாடங்கள் மீது அதிக ஆர்வம் காட்டினார் மற்றும், அவற்றில் சிறந்தும் விளங்கினார். யுசேபியோ கீனோ அவர்கள், இயேசு சபை தலைவர்களிடம் தனது வெளிநாட்டு மறைப்பணி ஆர்வத்தை பலமுறை வெளிப்படுத்தினார். பலமுறை அது புறக்கணிக்கப்பட்டாலும், ஒருநாள், கீனோ அவர்களும், அவரோடு படித்த ஜெர்மானியர் ஒருவரும், வெளிநாட்டில் மறைப்பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் பிலிப்பீன்ஸூக்கும், மற்றொருவர் மெக்சிகோவுக்கும் செல்ல வேண்டுமெனக் கூறப்பட்டது. இதில் எந்த நாட்டைத் தேர்ந்துகொள்வது என்பதை அறிவதற்கு, திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்தனர். அதில் கீனோ அவர்கள் மெக்சிகோவுக்குச் செல்வதற்குச் சீட்டு விழுந்தது. எனினும், எதிர்பாராத பல இடையூறுகளால், 1681ம் ஆண்டு மே மாதம் வரை, அவர் மெக்சிகோவுக்குச் செல்ல முடியவில்லை.

நாடுகாண் பயணி அருள்பணி கீனோ

இயேசு சபை அருள்பணி யுசேபியோ கீனோ அவர்கள், மெக்சிகோவில் தங்கியிருந்த காலத்தில், 1680ம் ஆண்டில் தோன்றிய வால்வீண்மீனின் வியத்தகு பண்புகளை விளக்கி, கையேடுகளை வெளியிட்டார். இது, இந்த விண்மீன், முற்றிலும் இயற்கையாக நிகழக்கூடியது என்று கூறியிருந்த, மெக்சிகோ நாட்டு வானயியல் நிபுணர் Carlos Sigüenza y Góngora அவர்களின் கோபத்தைத் தூண்டியது. அதேநேரம், புவியியல் அமைப்பை வரைவதில் வல்லுனராகிய கீனோ அவர்கள், மெக்சிகோ நகரைவிட்டு, Baja Californiaவுக்குச் சென்றார். ஏனெனில், இஸ்பானிய கடற்படை அதிகாரி Isidro de Atondo y Antillón அவர்கள், 1683ம் ஆண்டு முதல், 1685ம் ஆண்டு வரை, Baja California தீபகற்பத்தில் இஸ்பானிய காலனிகளை அமைப்பதில் பலமுறை முயற்சித்தும், உணவுப் பற்றாக்குறை மற்றும், பழங்குடி மக்களின் கடும் தாக்குதலால் தோல்வி கண்டிருந்தார். எனவே, மறைப்பணியாளர் கீனோ அவர்கள், Baja California சென்று, Atondo அவர்களின் முயற்சிகளை முன்னெடுத்தார். கீனோ அவர்கள், 1687ம் ஆண்டில், தற்போதைய Sonoraவின் வடபகுதி மற்றும், அரிசோனாவின் தென்பகுதியாகிய, Pimerìa Alta என்ற பகுதியை, அமைதியான முறையில் வெற்றி கண்டார். பாலைநிலங்களும், மலைகளும் நிறைந்த இப்பகுதியில், Pima இந்திய பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வந்தனர். இவர், இப்பகுதியின் தெற்கிலுள்ள Doloresல், மறைப்பணித்தளத்தை அமைத்துக்கொண்டு, அங்கிருந்து, அரிசோனா, கொலோராடோ, மற்றும், Gila ஆறுகள் வரை, மறைப்பணித்தளங்களை விரிவுபடுத்தினார். அருள்பணி கீனோ அவர்கள் மட்டுமே ஏறத்தாழ 4,500 பழங்குடி மக்களுக்குத் திருமுழுக்கு அளித்திருந்தார். அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன், அவரும், அவரோடு சேர்ந்தவர்களும், முப்பதாயிரத்திற்கு அதிகமான மக்களை திருஅவையில் இணைத்திருந்தனர்.

மறைப்பணி

திட்டமிடுதல், நிர்வாகம் செய்தல் போன்றவற்றில் இயல்பிலே அசாத்திய திறமைகளைக் கொண்டிருந்த இயேசு சபை அருள்பணி கீனோ அவர்கள், தன் மறைப்பணித்தளங்களில், பழங்குடி மக்களுக்கு கிறிஸ்தவ கோட்பாடுகளை மட்டுமல்லாமல், கால்நடைகள் வளர்த்தல், கோதுமை போன்ற புதிய வேளாண்மை உற்பத்தி ஆகியவற்றைச் சொல்லிக்கொடுத்து, பொருளாதாரத்தில் மக்களை உயர்த்தினார். கீனோ அவர்களே, கால்நடை வளர்ப்புப் பண்ணைகளை அமைத்து, தன் மறைப்பணித்தளங்களுக்கும், Baja Californiaவுக்கும், அதிக அளவில் விநியோகித்தார். இதனால், இயேசு சபையினர் 1697ம் ஆண்டில் இத்தளங்களுக்குப் பணியாற்றச் சென்றனர். கீனோ அவர்களின் பலன்தரும் பொருளாதார திட்டங்கள், பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள் மீது காட்டிய சகிப்புத்தன்மை ஆகியவையே, இவர் தன் மறைப்பணியை அமைதியாக ஆற்றி அதில் வெற்றி காண உதவின. கீனோ அவர்கள், இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் தூதுரைப் பணிகளுக்கு மத்தியில், அரிசோனா பகுதியைக் கண்டுபிடிப்பதிலும் வெற்றியடைந்தார். வடக்கே காசா கிராந்தே நகர் மற்றும்,  ஜீலா ஆறு வரையும், மேற்கே தற்போதைய யூமா மற்றும்,  கொலொராடோ ஆறு வரையிலும் சென்றார். கலிஃபோர்னியா, ஒரு தீவு என்ற எண்ணம் நிலவிய அக்காலத்தில், இவர் மேற்கு நோக்கி மேற்கொண்ட பயணம், அது தீவு அல்ல என்பதை உணர்த்தியது. கீனோ அவர்கள் வரைந்த புவியியல் வரைபடத்தில், மெக்சிகோவிலிருந்து தரை வழியாக கலிஃபோர்னியா செல்லலாம் என்றிருந்தது. இதுவே, 18ம் நூற்றாண்டில், அப்பகுதியில் இஸ்பானியர்கள் காலனிகளை அமைக்க உதவியது.  

13 November 2019, 14:18