தேடுதல்

Vatican News
புனித Junipero Serra புனித Junipero Serra 

சாம்பலில் பூத்த சரித்திரம்: அமெரிக்காவில் கிறிஸ்தவம்-பகுதி-1

பிரான்சிஸ்கன் துறவியாகிய புனித Juniper Serra , “கலிஃபோர்னியாவின் திருத்தூதர்”, “கலிஃபோர்னியாவை தோற்றுவித்தவர்” எனப் போற்றப்படுகிறார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

“கடவுளும், திருவிவிலியமும் இன்றி உலகை சரியாக நிர்வாகம் செய்வது இயலாது” என்று சொன்னவர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன். இறைபராமரிப்பு, அமெரிக்காவின் ஆரம்ப காலக்கட்டத்தை எவ்வாறு நடத்திச் சென்றுள்ளது என்பதைச் சிந்தித்தபோது இந்த அருமையான கூற்றை மொழிந்தார், ஜார்ஜ் வாஷிங்டன். வட அமெரிக்காவில், ஏறத்தாழ கி.பி. 34ம் ஆண்டிலேயே கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. ஆயினும், அப்பகுதியில் 16ம், 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் காலனிகளை அமைக்கத் தொடங்கியதிலிருந்தே கிறிஸ்தவம் உயிர்பெற ஆரம்பித்தது. இஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் பிரித்தானியப் பேரரசுகள், நியு இஸ்பெயின், நியு பிரான்ஸ் மற்றும் மேரிலாண்டில் காலனிகளை அமைத்ததுடன் உரோமன் கத்தோலிக்கத்தையும் அறிமுகப்படுத்தின. அதேநேரம், வட ஐரோப்பியர்கள், ஏனைய பகுதிகளில், ஆங்லிக்கன், மெத்தடிஸ்ட், பாப்பிடிஸ்ட், பிரிஸ்பிடேரியன், லூத்தரன் போன்ற பல பிரிந்த கிறிஸ்தவ சபைகளை அறிமுகம் செய்தனர். இந்நாட்டில் இப்போதும் வாழ்பவர்கள், பெரும்பாலும் பிரிந்த கிறிஸ்தவ சபையினர், மற்றும் உரோமன் கத்தோலிக்கர் ஆவர்.

இயேசு சபையினர், பிரான்சிஸ்கன், கப்புச்சின், பிரான்சிஸ்கன் சபையின் ஒரு பிரிவினராகிய Recollet மற்றும், ஏனைய மறைப்பணியாளர்களே, வட அமெரிக்காவில், கத்தோலிக்கத் திருஅவையை முதலில் வேரூன்றியவர்கள். அமெரிக்க பழங்குடி மக்கள், சித்ரவதை, கொலைகள் உட்பட கடினமான வாழ்வை எதிர்கொண்டதால், அம்மக்களின் ஆன்ம மீட்பில் மறைப்பணியாளர்கள் அளப்பரிய ஆர்வம் கொண்டிருந்தனர். இதனால் சிறிய ஆலயங்களை எழுப்பி, அம்மக்கள், ஒரு கத்தோலிக்க பங்கில் கூடும்படிச் செய்தனர். புளோரிடா முதல் கலிஃபோர்னியா வரை பரவியிருந்த இஸ்பானிய காலனிகளில், பழங்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவித்த நூற்றுக்கணக்கான மறைப்பணியாளர்களில், பிரான்சிஸ்கன் அருள்பணி ஹூனிபெரொ சேரா (Junipero Serra), இயேசு சபை அருள்பணி யுசேபியோ கினோ (Eusebio Kino) ஆகிய இருவரும் மிகவும் புகழ்பெற்றவர்கள். இவர்கள் அம்மக்களுக்கு பண்பாட்டுக் கலைகளையும் கற்றுக்கொடுத்தனர். அவர்களின் நினைவாக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் சான் பிரான்சிஸ்கோ, சான் அந்தோனியோ, லாஸ் ஆஞ்சலெஸ் நகரங்கள் அமைந்துள்ளதே, அவர்களின் தூதுரைப் பணிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. 

Junipero Serra

புனித சேரா (Junipero Serra- நவ.24,1713–ஆக.28,1784) அவர்கள், 1769ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் மறைப்பணித் தளத்தை நிறுவினார். அடுத்த 13 ஆண்டுகளில் கலிஃபோர்னியாவில் எட்டு மறைப்பணித்தளங்களை உருவாக்கினார். இஸ்பெயினின் Majorca தீவில், 1713ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்த Junipero Serra அவர்கள், பிரான்சிஸ்கன் துறவியரிடம் கல்வி கற்றார். தனது 15வது வயதில் அருள்பணியாளராக வேண்டும் என்ற ஆவலில், பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். Miguel Jose என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், சபையில் "Junipero" என்ற பெயரை ஏற்றார். 1742ம் ஆண்டில் Lullian பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார் புனித சேரா. இவர், புதிய உலகில் மறைப்பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால், 1749ம் ஆண்டில் அவரின் முன்னாள் மாணவர் Francisco Palóu என்பவருடன் முதலில் மெக்சிகோ நாட்டிற்குச் சென்றார். பின்னர், அவர், 250 மைல்கள் நடந்தே மெக்சிகோ நகரை அடைந்தார். அந்நகரில் மறைப்பணி பள்ளியில் பணியாற்றத் தொடங்கினார். ஆயினும், Pame பூர்வீக இன இந்தியர் வாழும் Sierra Gorda மறைப்பணித் தளத்தில் பணியாற்ற ஆர்வம் கொண்டு, 1751ம் ஆண்டில் அங்குச் சென்றார். பழங்குடி மக்களுக்குப் போதித்து, அவர்களின் பொருளாதாரம் பெருக உதவினார். பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் போதித்து, 1769ம் ஆண்டு மே மாதத்தில் San Fernando de Velicatá எனுமிடத்தில் தனது முதல் மறைப்பணி தளத்தை அமைத்தார். பின்னர், சான் தியெகோவிலும், மற்றுமொரு மறைப்பணி தளத்தை உருவாக்கினார். இவர் உருவாக்கிய ஒன்பது தளங்களில், அவ்வாண்டு ஜூலை மாதத்தில் முதலாவதாக ஏற்படுத்திய மறைப்பணி தளமே, தற்போதைய கலிஃபோர்னியாவாகும். இவர் தனது எஞ்சிய வாழ்வை அப்பகுதியிலேயே செலவழித்தார்.

சேரா அவர்கள், அமெரிக்க பழங்குடி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தபோது சிலவேளைகளில், தனது சொந்த இஸ்பானிய அரசிடமிருந்தே பிரச்சனைகளையும் சந்தித்தார். பழங்குடி மக்களை, இஸ்பானிய படைவீரர்கள் நடத்தும் முறை தொடர்பாக இஸ்பானிய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டார். பழங்குடி மக்கள் சார்பாக இவர் பேசுகையில், அம்மக்கள் விதிமுறைகளை மீறினால் அவர்களைத் திருத்தும் முறைகளையும் கையாண்டார். சேரா அவர்கள், 1784ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தனது 70வது வயதில் உயிர்துறந்தார். 1784ம் ஆண்டுக்குள், இவரது பணிகள் வழியாக, 6,700க்கும் அதிகமான அமெரிக்க பழங்குடி மக்கள் திருமுழுக்குப் பெற்றிருந்தனர். கலிஃபோர்னியாவில் கத்தோலிக்கத்தைப் பரப்பிய பெருமை இவரையே சாரும். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், சேரா அவர்களை, 1988ம் ஆண்டில் அருளாளராக அறிவித்தார். பிரான்சிஸ்கன் துறவியாகிய Juniper Serra அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ம் ஆண்டில் புனிதராக அறிவித்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மேற்குலக தூதுரைப்பணியாளர் என்று இப்புனிதரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார். இப்புனிதர் “கலிஃபோர்னியாவின் திருத்தூதர்”, “கலிஃபோர்னியாவை தோற்றுவித்தவர்” என போற்றப்படுகிறார்.

06 November 2019, 09:06