தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்து தாய்லாந்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்து தாய்லாந்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு  (ANSA)

தாய்லாந்து, ஜப்பான் திருத்தூதுப் பயண கருப்பொருள் பாடல்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 20ம் தேதி முதல், 26ம் தேதி வரை, தாய்லாந்து மற்றும், ஜப்பானில் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை, தாய்லாந்து மற்றும், ஜப்பானில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணங்களின் கருப்பொருளை மையப்படுத்தி, அந்நாடுகளின் கத்தோலிக்கர் பாடல்களை இயற்றி, சமுதாய ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

திருத்தந்தை, நவம்பர் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் தாய்லாந்து நாட்டு கத்தோலிக்கர், “அன்பு பாலமாக அமையட்டும்” என்ற தலைப்பில் காணொளிப் பாடல் ஒன்றை, முகநூல், யுடியூப் போன்ற, சமுதாய ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். 

Chawalwit Yingyotsenee என்பவர் இப்பாடலை எழுதியுள்ளார். அதற்கு அந்நாட்டு மரபில் இசை அமைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து திருத்தூதுப் பயணத்தில், அந்நாட்டு அரசர் Vajiralongkorn, புத்தமதத் தலைவர் ஆகியோரைச் சந்திக்கும் திருத்தந்தை, தேசிய அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றுவார் மற்றும், விண்ணேற்பு பேராலயத்தில் இளையோரைச் சந்திப்பார். 1984ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தாய்லாந்திற்குச் சென்றபின், தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்குச் செல்லவிருப்பதை கத்தோலிக்கர், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. தாய்லாந்து மக்கள் தொகையில், கத்தோலிக்கர், 1 விழுக்காட்டிற்கும் குறைவே.  

ஜப்பான்

மேலும், நவம்பர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஜப்பானில் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளவேளை, “அனைத்து வாழ்வையும் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் ஜப்பான் கத்தோலிக்கர் பாடல் இயற்றி, காணொளியாக வெளியிட்டுள்ளனர் என்று, யூக்கா செய்தி கூறுகிறது.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது பற்றிய திருத்தந்தையின் இறைவா உமக்கே புகழ் (Laudato Si’) என்ற திருமடலின் இரண்டாவது பகுதியின் இறுதியிலுள்ள, “படைப்போடு ஒன்றித்திருத்தலில் ஒரு கிறிஸ்தவ செபம்” என்ற தலைப்பிலிருந்து இப்பாடலுக்கு தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் புகழ்பெற்ற பாடகர், நடிகர் மற்றும், நகைச்சுவை நடிகரான Jun Inoue என்பவரால் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. (UCAN)

08 November 2019, 14:57