இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மடு மாதா திருத்தலம் இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மடு மாதா திருத்தலம் 

இலங்கையின் மடு மாதா திருத்தலம், 'புனிதப் பகுதி' என அறிவிப்பு

இலங்கை மன்னார் மறைமாவட்டத்தின் புகழ்பெற்ற மடு மாதா திருத்தலத்தையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியையும், 'புனிதப் பகுதி' என்று அறிவித்து, அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மடு மாதா திருத்தலத்தையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியையும், 'புனிதப் பகுதி' (Sacred Area) என்று அறிவித்து, அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளதற்கு, அந்நாட்டு கத்தோலிக்கர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

அரசுத்தலைவர் சிறிசேனா அவர்களின் பதவிக்காலம் நிறைவடையும் வேளையில், அவர் இந்த அரசாணையில் கையொப்பமிட்டதன் வழியே, நாட்டில் இன்னும் அதிக ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் உருவாக வழி செய்துள்ளார் என்று, தலத்திருஅவை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த அரசாணையில் அரசுத்தலைவர் கையொப்பமிட்ட தருணத்தில், அங்கு, மன்னார் ஆயர், எம்மானுவேல் ஃபெர்னாண்டோ, மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர், விக்டர் சூசை, மற்றும், கிறிஸ்தவ விவகாரங்கள் துறையின் அமைச்சர் ஜான் அமரத்துங்கா ஆகியோர் பங்கேற்றனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

மடு மாதா திருத்தலத்தையும், அதன் சுற்றுப்புறத்தையும் 'புனிதப் பகுதி' என்று அறிவித்ததன் விளைவாக, மதம், மொழி என்ற பல்வேறு பிரிவுகளைக் கடந்து, இத்திருத்தலம், இலங்கை மக்களின் பொதுவான சொத்து என்ற உணர்வை உருவாக்கியுள்ளது என்று, ஆயர் பெர்னாண்டோ அவர்கள் கூறினார்.

400 ஆண்டுகளுக்கும் முன்னர் எழுப்பப்பட்ட இந்தத் திருத்தலம், இலங்கை உள்நாட்டுப் போரின்போது, பெரும் சேதங்களை அடைந்ததென்றும், 2008ம் ஆண்டு, இப்பகுதியில் அதிக அளவு தாக்குதல்கள் நிகழ்ந்த வேளையில், மடு மாதா உருவச்சிலை, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, அன்னையின் உருவச்சிலை, மீண்டும் இத்திருத்தலத்திற்கு கொண்டுவரப்பட்ட வேளையில், இத்திருத்தலம், கத்தோலிக்கர்களை மட்டுமல்லாமல், புத்தர், இந்துக்கள், இஸ்லாமியர் அனைவரையும் ஈர்த்தது என்று, ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

அரசுத்தலைவர் சிறிசேனா அவர்கள் வழங்கியுள்ள இந்த அரசாணையின்படி, இத்திருத்தலத்தைச் சுற்றியுள்ள 300 ஏக்கர் நிலம், திருத்தலத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது என்றும், அதைச் சுற்றியுள்ள 5000 ஏக்கரில் அமைந்துள்ள காட்டுப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2019, 15:15