தேடுதல்

Vatican News
ஈராக் நாட்டின்  Tahrir சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் ஈராக் நாட்டின் Tahrir சதுக்கத்தில் போராட்டக்காரர்கள்  

ஈராக் போராட்ட வீரர்களுக்காக கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு

ஈராக் நாட்டில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளையோர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்ற பாகுபாடுகளை ஒதுக்கிவிட்டு, தங்கள் நாட்டின் நலனுக்காக போராட வீதிகளுக்கு வந்துள்ளனர் என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் பாராட்டினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் பிரிவினைச் சக்திகள் என்ற புற்றுநோயைக் குறித்து அரசியல்வாதிகளும், மக்களும் பேசி வருகின்றனர், ஆனால், யாரும் இந்த நோயை நீக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்று, அந்நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.

ஈராக்கில் கடந்த ஒரு மாதமாக நிகழ்ந்துவரும் போராட்டங்களில் ஈடுபட்டிருப்போருடன் தங்கள் ஒருமைப்பாட்டை வெளியிட்டுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், நவம்பர் 4, இத்திங்கள் மாலை, பாக்தாத் புனித யோசேப்பு பேராலயத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு ஒன்றை நடத்தினர்.

இந்த வழிபாட்டில் உரையாற்றிய கர்தினால் சாக்கோ அவர்கள், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளையோர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்ற பாகுபாடுகளை ஒதுக்கிவிட்டு, தங்கள் நாட்டின் நலனுக்காக போராட வீதிகளுக்கு வந்துள்ளனர் என்று பாராட்டினார்.

இந்த போராட்டத்தில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட வழிபாட்டில், மலைப்பொழிவில் இயேசு கூறிய 'பேறுபெற்றோர்' பகுதி வாசிக்கப்பட்டபின், நாட்டின் அமைதிக்காக, மௌன அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

நவம்பர் 2ம் தேதி, கர்தினால் சாக்கோ அவர்களும் ஏனைய கிறிஸ்தவத் தலைவர்களும், போராட்டம் நிகழ்ந்துவரும் Tahrir சதுக்கத்திற்கு சென்று, போராடுவோருக்கு ஆதரவு வழங்கியதோடு, போராட்டத்தில் காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. (AsiaNews)

06 November 2019, 15:24