தேடுதல்

புது டெல்லி மருத்துவமனையொன்றில் தாதியராகப் பணியாற்றும் பெண் புது டெல்லி மருத்துவமனையொன்றில் தாதியராகப் பணியாற்றும் பெண் 

கத்தோலிக்கத் தாதியர், வாழ்வின் தூதர்கள் – கர்தினால் கிரேசியஸ்

இன்றைய மருத்துவ உலகம் மனித உயிர்களைப் பறிக்கும் பல வழிகளை விளம்பரப்படுத்தி வரும் வேளையில், அச்சோதனைக்கு உட்பட்டு, கத்தோலிக்கத் தாதியர், மரணத்தின் தூதர்களாக மாறிவிடக்கூடாது – கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நலவாழ்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் கத்தோலிக்கத் தாதியர் மனித வாழ்வைப் பாதுக்காக்கும் பணிக்கென அழைக்கப்பட்டுள்ளனர் என்று, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் கத்தோலிக்க தாதியர்களிடம் கூறினார்.

மும்பை நகரில் நடைபெற்ற இந்திய கத்தோலிக்கத் தாதியர் கழகத்தின் 21வது தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய மும்பை பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இன்றைய மருத்துவ உலகம் மனித உயிர்களைப் பறிக்கும் பல வழிகளை விளம்பரப்படுத்தி வரும் வேளையில், அச்சோதனைக்கு உட்பட்டு, கத்தோலிக்கத் தாதியர், மரணத்தின் தூதர்களாக மாறிவிடக் கூடாது என்று எச்சரித்தார்.

வாழ்வுக்குப் பணியாற்றுவது, இறைவனுக்குப் பணியாற்றுவதற்குச் சமம் என்பதை, தன் உரையில் வலியுறுத்திய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நோயுற்றோருக்குப் பணியாற்றுவதும், இறக்கும் நிலையில் இருப்போரை மிகுந்த மரியாதையுடன் பேணுவதும், கத்தோலிக்கத் தாதியரின் சிறப்பான அழைப்பு என்று கூறினார்.

அற்பத்தனமான காரணங்களுக்காக உயிரைப் பறிக்கும் வன்முறைகள் பெருகியுள்ள இவ்வுலகில், உயிர்களைப் பேணி வளர்க்க, தன்னலமற்ற தியாகத்துடன், இரவு பகல் என்று பாராமல் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரையும் தான் பாராட்டுவதாக, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2019, 15:09