தேடுதல்

Vatican News
பொலிவியாவின் கலவரங்களை அடக்க நிறுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் பொலிவியாவின் கலவரங்களை அடக்க நிறுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் 

பொலிவியாவின் அமைதிக்காக ஆயர்களின் விண்ணப்பம்

வன்முறையிலும் சூறையாடுதலிலும் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் அநீதமான செயல்பாடுகளை நிறுத்தவேண்டும்; காவல்துறையும், இராணுவமும், மக்கள் மற்றும், அவர்களுடைய உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் - பொலிவியா ஆயர்களின் அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பொலிவியா நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர், ஈவோ மொராலெஸ் (Evo Morales) அவர்கள், கடந்த ஞாயிறன்று, தான் பதவி விலகுவதாக அறிவித்ததையடுத்து, அந்நாட்டில் நிலவிய வன்முறைகள், மற்றும், சூறையாடுதல் ஆகியவற்றை நிறுத்தும்படி, அந்நாட்டு ஆயர்கள் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

நவம்பர் 10, கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில், பொலிவியாவின் அமைதிக்காக விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அரசுத்தலைவர் மொராலெஸ் அவர்கள் பதவி விலகும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அந்நாட்டில் உருவான கொண்டாட்டங்கள், விரைவில் வன்முறையை உருவாக்கியதை, அந்நாட்டு ஆயர்கள், தங்கள் அறிக்கையில், கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வன்முறையிலும் சூறையாடுதலிலும் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் அநீதமான செயல்பாடுகளை நிறுத்தவேண்டும் என்றும், காவல்துறையும், இராணுவமும், மக்களின் பாதுகாப்பையும், அவர்களுடைய உடைமைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும் என்றும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

13 November 2019, 15:03