தேடுதல்

Vatican News
சிலே தலைநகரில் வைக்கப்பட்டுள்ள சிலுவை சிலே தலைநகரில் வைக்கப்பட்டுள்ள சிலுவை 

ஆலயங்கள் சூறையாடப்பட்டுள்ளதற்கு சிலே ஆயர்கள் கண்டனம்

கடவுள் மீதும், அவரை நம்பும் விசுவாசிகள் மீதும் எவ்வித மதிப்புமின்றி, ஆலயங்களையும், வழிபாட்டுத்தலங்களையும் தாக்கியிருப்பது வேதனை தருகின்றது –சிலே ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

சிலே நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, வழிபாட்டுத்தலங்கள் சூறையாடப்பட்ட நகரங்களில் வாழ்கின்ற விசுவாசிகளுக்கு, தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை.

சிலே நாட்டு தலைநகர் சந்தியாகோவில் பங்கு ஆலயம் ஒன்று சூறையாடப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், அந்தப் பங்குத்தள விசுவாசிகளுடன் தங்களின் தோழமையுணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம், வன்முறைப் போராட்டங்களில் குறிவைக்கப்பட்ட அந்நகரின் பிற வழிபாட்டுத்தலங்களைச் சார்ந்த குழுமங்கள் மற்றும், போதகர்களுடன் தங்களின் அருகாமையையும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று, சந்தியாகோ நகரின் விண்ணேற்பு கத்தோலிக்க ஆலயத்திற்கு அருகிலுள்ள வளாகத்தில், ஏறத்தாழ 75 ஆயிரம் பேர், சிலே நாட்டு தற்போதைய அரசுத்தலைவர் Sebastian Piñera அவர்களின் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது, ஆலயத்தையும் சூறையாடினர். கூட்டத்தினர் அந்த ஆலயத்தின் மீது கல்லெறிந்து, கோவில் இருக்கைகளை அகற்றினர், திருவுருவங்கள் மற்றும் ஏனைய சமய அடையாளங்கள் மீதும் தீ வைத்தனர். 

இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள சிலே ஆயர்கள், கடவுள் மீதும், அவரை நம்பும் விசுவாசிகள் மீதும் எவ்வித மதிப்புமின்றி, ஆலயங்களையும், வழிபாட்டுத்தலங்களையும் தாக்கியிருப்பது வேதனை தருகின்றது, இவ்விடங்கள் புனிதமானவை என்றும் கூறியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான சிலேயில், விலைவாசி உயர்வைக் கண்டித்து, 24 நாள்களாக வன்முறைப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. (Fides)

12 November 2019, 15:15