இந்தோனேசிய ஆயர்கள் இந்தோனேசிய ஆயர்கள்  

அமைதியான இந்தோனேசியாவிற்கு மனித உடன்பிறந்தநிலை

இந்தோனேசியாவிலுள்ள இரு முக்கிய மிதவாத இஸ்லாம் அமைப்புகளான, Nahdlatul Ulama (NU), Muhammadiyah ஆகிய இரண்டும், அந்நாட்டில், சிறுபான்மை இன மற்றும், மதங்கள் மீது சகிப்புத்தன்மையைக் காட்டி வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

‘அமைதியான இந்தோனேசியாவிற்கு மனித உடன்பிறந்தநிலை’ என்ற தலைப்பில், இந்தோனேசிய கத்தோலிக்க ஆயர்கள், தங்களின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நடத்தி வருகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.

நவம்பர் 4, இத்திங்களன்று இக்கூட்டத்தைத் துவங்கியுள்ள ஆயர்கள், கடந்த பிப்ரவரியில், அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் இஸ்லாம் தலைமை குரு Ahmed el-Tayeb அவர்களும் கையெழுத்திட்ட, ‘உலக அமைதி மற்றும், ஒன்றிணைந்து வாழ்வதற்கு மனித உடன்பிறந்தநிலை’ என்ற அறிக்கையின் உட்பொருளை, இந்தோனேசியச் சூழலில் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தோனேசிய ஆயர் பேரவைத் தலைவரான, கர்தினால், இக்னேஷியஸ் சுகார்யோ அவர்கள், அபு தாபியில் கையெழுத்திடப்பட்ட அந்த அறிக்கையின் கருத்துக்களைச் செயல்படுத்தும் வழிகளைக் காணுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார் என்று கூறினார்.

இந்தோனேசிய முஸ்லிம் நண்பர்கள் இந்த அறிக்கை பற்றி ஆழ்ந்து சிந்தித்து வருகின்றனர் என்றும், இதில் கத்தோலிக்கர் இன்னும் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறிய கர்தினால் சுகார்யோ அவர்கள், இதனாலேயே, இந்தக் கூட்டத்திற்கு, அமைதியான இந்தோனேசியாவிற்கு மனித உடன்பிறந்தநிலை என்ற தலைப்பை எடுத்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.  

உலகில் இஸ்லாமியரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் இந்தோனேசியாவில், உலகின் இரு முக்கிய மிதவாத இஸ்லாம் அமைப்புகள் உள்ளன என்பதும், இவ்விரு குழுக்களும், பல ஆண்டுகளாக, அந்நாட்டில் சிறுபான்மை இன மற்றும், மதங்கள் மீது சகிப்புத்தன்மையைக் காட்டி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்தோனேசியாவின் Bandung நகரில் நவம்பர் 4, இத்திங்களன்று துவங்கியுள்ள இக்கூட்டம், நவம்பர் 11, வருகிற திங்களன்று நிறைவடையும். (Fides/AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2019, 15:07