தாய்லாந்து  நாட்டின் திருப்பீடத் தூதர், பேராயர் Paul Tschang In-nam தாய்லாந்து நாட்டின் திருப்பீடத் தூதர், பேராயர் Paul Tschang In-nam  

திருத்தந்தையின் தாய்லாந்து பயணம் குறித்து திருப்பீடத் தூதர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, உலகின் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவராக தாய் லாந்து மக்கள் கருதுவதால், அவரை வரவேற்கக் காத்திருக்கின்றனர் - பேராயர் இன்-னாம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாய்லாந்து நாட்டில், உண்மையான மனித விழுமியங்களுக்கு முதலிடம் கொடுத்து, நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப, திருத்தந்தையின் வருகை பெரும் உந்துசக்தியாக அமையும் என்று, அந்நாட்டின் திருப்பீடத் தூதர், பேராயர் Paul Tschang In-nam அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.

நவம்பர் 20ம் தேதி முதல், 23ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்தில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தைக் குறித்த செய்தி, நாட்டு மக்களிடையே, பெருமளவு நேர்மறையான உணர்வுகளை எழுப்பி வருகிறது என்று பேராயர் இன்-னாம் அவர்கள் கூறினார்.

1984ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட வேளையில், அவரை, கத்தோலிக்கர்களின் தலைவர் என்று மட்டும் கருதிய அடிப்படைவாத புத்த குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதை நினைவு கூர்ந்த பேராயர் இன்-னாம் அவர்கள், தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, உலகின் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவராக தாய்லாந்து மக்கள் கருதுவதால், அவரை வரவேற்கக் காத்திருக்கின்றனர் என்று எடுத்துரைத்தார்.

1669ம் ஆண்டு, சியாம் அப்போஸ்தலிக்க vicariate நிறுவப்பட்டதன் 350ம் ஆண்டு நிறைவடையும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்கு வருகை தருவது, வரலாற்று சிறப்பு மிக்கது என்று, பேராயர் இன்-னாம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கடந்த 350 ஆண்டுகால வரலாற்றில், தாய்லாந்து கத்தோலிக்கத் திருஅவை 11 மறைமாவட்டங்களாக வளர்ந்துள்ளது என்பதும், புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் அந்நாட்டில், ஏறத்தாழ 3,90,000 கத்தோலிக்கர் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

2018ம் ஆண்டு, மே மாதம், தாய்லாந்து நாட்டிலிருந்து வத்திக்கானுக்கு சென்ற 50 புத்த மதத் துறவிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்ததும், புத்த திருமறையின் மொழிபெயர்ப்பு அடங்கிய பழமை வாய்ந்த நூல் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கியதும், இந்த திருத்தூதுப் பயணத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2019, 15:07