தேடுதல்

Vatican News
பிலிப்பீன்சில் சிறார் தொழிலாளர் பிலிப்பீன்சில் சிறார் தொழிலாளர்  

பிலிப்பீன்சில் சிறார் தொழில்முறை ஒழிக்கப்பட வேண்டும்

பிலிப்பீன்சில் 20 இலட்சத்திற்கும் அதிகமான சிறார் தொழிலாளர் உள்ளனர். அந்நாட்டில் சிறார் தொழில்முறை பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, அரசு, திருஅவை மற்றும், சமுதாய அளவில் கூட்டுமுயற்சி அவசியம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் நிலவும் சிறார் தொழில்முறை ஒழிக்கப்படுவதற்கு, ஒன்றிணைந்த முயற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு ஆயர் ஒருவர்.

பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய இணைய பக்கத்தில் எழுதியுள்ள அந்நாட்டு சான் ஹோசே ஆயர் இராபர்ட் மல்லாரி அவர்கள், ஆபத்தான சூழல்களில் வேலைசெய்யும் சிறாரின் துன்பங்கள், அவர்களின் உரிமைகள் மற்றும், மாண்பு மறுக்கப்படல் போன்றவை, திருஅவைக்கும், சமுதாயம் முழுவதற்கும் மாபெரும் சவாலாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பீன்சில் 2022ம் ஆண்டுக்குள், வேலைசெய்யும் சிறாரின் எண்ணிக்கையை 30 விழுக்காடாகக் குறைப்பதற்கு, அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆயர் மல்லாரி அவர்கள், அந்நாட்டில் சிறார் தொழில்முறை சிக்கலான ஒன்று எனவும் கூறியுள்ளார்.

சிறார் தொழில்முறை பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, அரசு, திருஅவை மற்றும், சமுதாய அளவில் கூட்டுமுயற்சி அவசியம் என்று குறிப்பிட்டுள்ள ஆயர், இத்தொழில்முறைக்கு அடிப்படை காரணம், வறுமை என்று கூறியுள்ளார்.

பிலிப்பீன்சில் 20 இலட்சத்திற்கும் அதிகமான சிறார் தொழிலாளர் உள்ளனர். உலக தொழில் நிறுவனம் 2011ம் ஆண்டில் எடுத்த ஆய்வின்படி, ஏறத்தாழ 95 விழுக்காட்டு சிறார் தொழிலாளர், ஆபத்தான வேலைகளைச் செய்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது. (CNA)

09 November 2019, 15:00