தேடுதல்

Vatican News
சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் தாக்குதல்களை மேற்கொள்ளச் செல்லும் துருக்கி இராணுவம் சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் தாக்குதல்களை மேற்கொள்ளச் செல்லும் துருக்கி இராணுவம்  (ANSA)

சிரியா மக்கள், துன்பங்களால் வதைபடுவது அரக்கத்தனமான அநீதி

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் துருக்கி அரசு மேற்கொண்டுள்ள வெறித்தனமான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - கிறிஸ்தவ சபைகளின் உலக அவை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் துருக்கி அரசு மேற்கொண்டுள்ள வெறித்தனமான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்று, கிறிஸ்தவ சபைகளின் உலக அவை அழைப்பு விடுத்துள்ளது.

மோதல்களையும், இரத்தம் சிந்துதலையும், அழிவையும் பல ஆண்டுகளாக கண்டுள்ள சிரியா நாட்டு மக்கள், இன்னும் துன்பங்களால் வதைபடுவது அரக்கத்தனமான அநீதி என்றும், அப்பகுதியில், உரையாடல், நீதி ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த உலக அவையின் தலைவர், முனைவர் Olav Fykse Tveit அவர்கள் கூறியுள்ளார்.

தற்போது தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கும் பகுதியில் கிறிஸ்தவர்கள், யாஸிதி, குர்த் மற்றும் அரேபிய இனத்தவர் மிகக் கடுமையான துன்பங்களுக்கு உள்ளாகியிருப்பதாக கிறிஸ்தவ சபைகளின் உலக அவை தெரிவித்துள்ளது.

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள மக்களைக் குறித்து வெளியாகும் செய்திகள் கவலை தருகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 13, கடந்த ஞாயிறு புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நிகழ்த்திய திருப்பலியின் இறுதியில் கூறியது, குறிப்பிடத்தக்கது.

உலகின் பல்வேறு நாடுகள், இத்தாக்குதலை கண்டனம் செய்துள்ள போதிலும், துருக்கியின் அரசுத்தலைவர், Recep Tayyip Erdogan அவர்கள், தங்கள் இராணுவத் தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்று கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

17 October 2019, 14:49