தேடுதல்

Vatican News
இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார் (மாற்கு 10:51) இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார் (மாற்கு 10:51) 

விவிலியத்தேடல்: பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் - பகுதி 2

எந்தவொரு செயலையும் நம்பிக்கையோடு துவங்கி விடாமுயற்சியோடு தொடர்ந்தால், நாம் வேண்டுவதையும், விரும்புவதையும், பெற்றுக்கொள்ளமுடியும் என்பதை, பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் நிகழ்வு, நமக்கு நினைவுபடுத்துகிறது.

விக்டர் தாஸ் - வத்திக்கான்

பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் - பகுதி 2

பார்வையற்ற பர்த்திமேயு பரமன் இயேசுவை மெசியாவாக கண்டுகொண்டதும் பார்வைத்தெளிவுடைய பரிசேயர்கள் பாராமுகமாய் இருந்து இயேசுவை கண்டுகொள்ளாததும் விந்தையாகவே இருக்கிறது என்று, பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் பகுதி-1ல் சிந்தித்த நாம், வியப்பூட்டும் இன்னும் சில தகவல்களை தெரிந்துகொள்ள, நம்முடைய தேடுதல் பயணத்தை தொடருவோம்.

பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் நிகழ்வை நம் மனக்கண்முன் ஒரு கற்பனைக்காட்சியாக சித்தரித்து பார்த்தோமென்று சொன்னால் இந்நிகழ்வில் இழையோடியிருக்கும்  தெய்வீகமான செயல்பாடுகளை நாம் ஆய்ந்துணரமுடியும். இந்த நிகழ்வின் கதாபாத்திரங்கள்  மற்றும் சூழலை கற்பனை செய்யும்போது இயேசு கிறிஸ்து, அப்போஸ்தலர்கள், குறைகாணும் நோக்குடன் இயேசுவைத் தொடரும் பரிசேயர்கள், பார்வையிழந்ததால் ஓரங்கட்டப்பட்டு பாதையோரம் அமர்ந்து இரந்துண்ணும் (பிச்சையெடுக்கும்) பர்த்திமேயு, உடற்குறைபாட்டினால் உழைக்கமுடியாமல் உறவுகளால் ஒதுக்கப்பட்டு வழியோரம் அமர்ந்து இரந்துண்ணும் கூட்டம், மற்றும் எரிக்கோவிற்கு வந்து செல்லும் மக்கள் கூட்டம் என  ஒரு பரபரப்பான, கூச்சலும் ஓசையும் ஒருங்கிணைந்த சந்தைக்கடை போன்ற  ஒரு சூழலை நாம் கணித்துக்காணமுடிகிறது.  

நமது பார்வையை இயேசுவின் மீது மட்டும் பதித்து நமது சிந்தனையை தொடரும்போது, இயேசுவின் நான்கு விதமான செயல்பாடுகளை, நாம் கண்டுகொள்ள முடிகிறது.

முதலாவதாக, மக்கள் கூட்டம் மற்றும் சீடர்களுடன் உரையாடியவண்ணம் சென்றுகொண்டிருந்த இயேசு, தன்னை அழைத்த பர்த்திமேயுவின் குரலைக்கேட்டு நிற்கிறார்.

அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, "அவரைக் கூப்பிடுங்கள்" என்று கூறினார்” (மாற்கு 10:48,49) என்று நற்செய்தியாளர் மாற்கு மிகத்தெளிவாக இதை பதிவுசெய்துள்ளார்.

மக்களின் பேச்சுக்குரலும், வழியோரம் அமர்ந்து மக்களிடம் உதவி கேட்டு, இரந்துண்பவர்களின் கூச்சலும் என, ஆரவாரம் நிறைந்த அந்தச் சூழலில், இயேசு, பர்த்திமேயுவின் குரல் கேட்டு நின்றது, அல்லது, அந்த கூச்சலும் ஓசையும் நிறைந்த வேளையில், பர்த்திமேயுவின் குரல் மட்டும் இயேசுவின் காதில் விழுந்தது, ஓர் உன்னதமான உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, துன்பத்தில், துயரத்தில், தூரநின்று வேடிக்கைப்பார்ப்பவர் அல்ல நம் இறைவன்; மாறாக, துயர்துடைக்க, நமது குரலுக்கு செவிசாய்த்து நமக்கு துணைநிற்பவர் நம் இறைவன் என்பதுதான் அந்த உன்னதமான உண்மை.

நம் எண்ண ஓட்டத்தை சற்று பின்னோக்கி செலுத்தினோமென்று சொன்னால், பர்த்திமேயுவின் குரலை கேட்ட இயேசுவின் இந்த செயல்பாடு, பழைய ஏற்பாட்டில் இறைவன் இஸ்ரயேல் மக்களைப்பற்றி மோசேயிடம் கூறிய வார்த்தைகளோடு ஒன்றிவருவதை நாம் அறியமுடியும்.

அப்போது ஆண்டவர் கூறியது; எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; ….. அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்” (விடுதலைப் பயணம் 3:7) என்று சொன்ன இறைவன், நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்; தன் பிள்ளைகளாகிய நம்மேல் என்றும் அன்பு கூர்பவர்; துன்பத்தில் நாம் துவளும்போதும், துயர்க்கண்டு துடிக்கும்போதும், துணைநிற்பவர்; நமது குரலைக் கேட்டு, நம் தேவையை நிறைவுசெய்பவர் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது.

மேலும், தன் மந்தையிலுள்ள ஆடுகளின் குரலை நன்கறிந்த நல்லாயனாக இயேசு இருக்கிறார் என்பதையும் நாம் சிந்திக்க முடிகிறது. “நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன.” (யோவான் 10:14-15) என்று யோவான் நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். எனவே இதிலிருந்து ஆடுகளின் குரலை இனம் கண்டுகொள்வதோடு அந்த குரலின் அர்த்தம் அறிந்து செயல்படும் நல்லாயனாக இயேசு பர்த்திமேயுவின் குரலுக்கு செவிமெடுத்து அவரது தேவையை நிறைவுசெய்கிறார் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது.

இரண்டாவதாக, தன்னை அழைத்த பர்த்திமேயுவை  இயேசு கூப்பிடச்சொல்கிறார். இதை சிந்திக்கும்போது பார்வையற்றவரை தன்னிடம் வரச்சொல்லி அழைப்பதைவிட இயேசுவே அந்த கூட்ட  நெரிசலில் பார்த்திமேயுவிடம் சென்றிருக்கலாம் என்று நாம் எண்ணத்தோன்றுகிறது. ஆனால், இங்கே இயேசு பர்த்திமேயுவுக்கு ஒரு மறைமுகச் செய்தியை சொல்கிறார் அதாவது ‘நீ இருக்க வேண்டிய இடம் இனி பாதையோரமல்ல, எல்லாரையும் போல நீயும் ஒருவனாக நடுவில் நிற்கவேண்டும்’ என்பதை இலைமறைக்காயாக சொல்கிறார்.

 அன்பார்ந்தவர்களே, ஓரம் மையமாவதும் மையம் ஓரங்கட்டப்படுதலும் இறைவனின் வியத்தகு செயல்களில் ஒன்று என்று அறியமுடிகிறது. இதையொத்த நிகழ்வான நோயினால் பீடிக்கப்பட்டு, கூட்டத்தில் ஒருத்தியாக யாருக்கும் தெரியாமல் இயேசுவின் மேலுடையை தொட்டு குணம்பெற்ற, பன்னிரண்டு ஆண்டுகள் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணை எல்லார்முன்நிலையிலும் இயேசு வெளிப்படுத்திய நிகழ்வை (மாற்கு 5:21-34)  நாம் இங்கு நினைவுக்கூரல் சாலச்சிறந்தது என எண்ணுகிறேன். ஒடுக்கப்பட்டோர்க்கு விடுதலை கொடுத்தலும் (லூக்கா 4:18) இயேசுவின் இறையரசு பணியின் அங்கமாகும் என்பதை நாம் கருத்தில்கொள்ளல் நன்று.

 மூன்றாவதாக, இயேசு பர்த்திமேயுவிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார் (மாற்கு 10:51) என்று நாம் நற்செய்தியில் வாசிக்கின்றோம். பெரும்பாலும், இயேசுவின் அற்புதங்களில் இயேசு தன்னிடம் நலம்வேண்டுபவரிடம் அவர்களுடைய நம்பிக்கையை சோதித்துப்பார்ப்பது அல்லது அவர்களின் நம்பிக்கை மனநிலையை அறிந்துகொள்ள விரும்புவது வழக்கமானது என்பதை நாம் நற்செய்தி பதிவுகளிலிருந்து அறிகிறோம். இங்கே, இயேசு பர்த்திமேயுவின் நம்பிக்கையை வெளிக்கொணரும் விதமாக இந்த கேள்வியை கேட்கிறார். அதோடுமட்டுமல்லாமல், இந்த கேள்வியின் வழியாக இயேசு பர்த்திமேயுவின் உள்மனதையும் சோதித்துப்பார்க்கிறார்.  ‘இயேசுவே தாவீதின் மகனே’ என்று பர்த்திமேயு இயேசுவை அழைத்தது வெறும் உதட்டளவு வார்த்தைகளா? இல்லை இவர் உண்மையில் எல்லாம்வல்ல இறைவன், இவரால் எல்லாம் கூடும் என்ற அசைக்கமுடியா நம்பிக்கையின் வார்த்தைகளா? என்பதை உணர்ந்துகொள்ளுமுகத்தான் இயேசு இந்த கேள்வியை கேட்டிருக்கிறார் எனபதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நான்காவதாக, இயேசு பர்த்திமேயுவுக்கு பார்வை கொடுக்கின்றார்.  அதாவது, இயேசு பர்த்திமேயுவின் குரலைக்கேட்டு, அவரை தன்னிடம் கூப்பிட்டு, அவரின் விருப்பம் என்னவென்று கேட்டு இறுதியாக பர்த்திமேயுவின் விருப்பத்தை செயலில் நிறைவேற்றுகின்றார். இயேசு அவரிடம், "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். (மாற்கு 10:52)

நற்செய்திகளில் நாம் காண்பது என்னவென்றால், இயேசுவிடம் நலம் வேண்டி வருவோரின் நம்பிக்கையின் பொருட்டு அவர்கள் நலம்பெற்று செல்வார்கள். அதேபோல், பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் நிகழ்வை உற்றுநோக்கும்போது, பர்த்திமேயுவின் நம்பிக்கை அறிந்து இயேசு அவருக்கு மீண்டும் பார்வையை கொடுத்து வழியனுப்புகின்றார்.   பர்த்திமேயுவின் நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்பதை, இயேசு தன்னை கூப்பிடுகிறார் என்றதும், தன் பார்வையற்றத்தன்மையை மறந்து, தன்னுடைய மேலுடையை எறிந்துவிட்டு குதித்தெழுந்து ஓடியது, நமக்கு வெளிப்படுத்துகிறது.

எந்தவொரு செயலையும் நம்பிக்கையோடு துவங்கி விடாமுயற்சியோடு தொடர்ந்தால், நாம் வேண்டுவதையும், விரும்புவதையும், பெற்றுக்கொள்ளமுடியும் என்பதை, பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் நிகழ்வு, நமக்கு நினைவுபடுத்துகிறது.  நம்முடைய வாழ்வில், நம் சமூதாயமும், உறவுகளும், நம்மை வெறுத்து ஒதுக்கினாலும், அல்லது, நாம் ஓரங்கட்டப்பட்டாலும், துயரத்தில் நாம் இறைவனை நோக்கி கூக்குரல் எழுப்பினால், நமது குரலுக்கு செவிமெடுத்து, நமது தேவையறிந்து, நமக்கு நிறைவைத் தரவல்லவர் நம் ஆண்டவர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

15 October 2019, 12:35