"நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர், உரத்தக் குரலில் கடவுளைப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர்" (லூக்கா 17: 15) "நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர், உரத்தக் குரலில் கடவுளைப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர்" (லூக்கா 17: 15) 

பொதுக்காலம் - 28ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமுதாயமும், சமாரிய சமுதாயமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்தப் புறக்கணிப்பு, அவர்களை இணைத்தது!

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 28ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் நிகழ்வுகள், இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் வழங்கப்பட்டுள்ளன. இவ்விரு வாசகங்களும் நம் வாழ்வுக்குத் தேவையான ஒரு சில பாடங்களைச் சொல்லித்தருகின்றன.

தொழுநோயால் துன்புற்ற,  சிரியா நாட்டுப் படைத்தலைவன் நாமான், இஸ்ரயேல் நாட்டில் வாழும், கடவுளின் அடியவரான, எலிசாவைத் தேடிச் செல்கிறார். "அந்நாட்களில், நாமான் புறப்பட்டுச் சென்று, கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க, யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார்" (2 அரசர்கள் 5: 14) என்று இன்றைய முதல் வாசகம் ஆரம்பமாகிறது. இவ்வரிகளை வாசிக்கும்போது, மிக எளிதாக, சுமுகமாக இப்புதுமை நிகழ்ந்ததைப்போல் உணர வாய்ப்புண்டு. ஆனால், உண்மையில் அங்கு நிகழ்ந்தது வேறு.

படைத்தலைவன் நாமான், உடலளவில் நலம் பெறுவதற்குமுன், ஆணவம், கோபம் என்ற மன நோய்களிலிருந்து அவர் நலம்பெற வேண்டியிருந்தது. பணபலத்தைப் பயன்படுத்தி, தன் உடல் நலனை வாங்கிவிட முடியும் என்ற மமதையோடு சிரியா நாட்டிலிருந்து, இஸ்ரயேல் நாட்டிற்குச் சென்ற நாமான், முற்றிலும் மாறவேண்டியிருந்தது. ஏறத்தாழ, அவர் மறுபடியும் பிறக்க வேண்டியிருந்தது. இதைத்தான், இன்றைய முதல் வாசகம் அழகாகச் சித்திரிக்கிறது. யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழுந்த நாமானின் "உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது" (2 அர. 5:14) என்று வாசிக்கிறோம்.

அவர் யோர்தானுக்குச் செல்லும் முன்னரே, தன் பணியாளர்களின் ஆலோசனைகளுக்குச் செவிமடுத்து, ஒரு குழந்தையைப்போல் தன் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டதால், ஒரு சிறு பிள்ளையைப் போன்ற உடலையும் அவரால் பெறமுடிந்தது. நம் மனநலனைப் பாதிக்கும் ஆணவம் போன்ற நோய்களை அகற்றுவது, நம் உடலுக்கும் நலன் தரும் என்பதை, நாமான் நமக்குச் சொல்லித் தருகிறார்.

ஆணவத்தோடு, படைத்தலைவனாக, தன் வீட்டுக்கு முன் வந்து நின்ற நாமானைச் சந்திக்க மறுத்த இறைவாக்கினர் எலிசா, குழந்தை மனதோடும், சிறு பிள்ளையையொத்த உடலோடும் யோர்தானிலிருந்து திரும்பி வந்த நாமானைச் சந்திக்கிறார். நாமானிடம் உருவான மாற்றங்கள் அழகானவை!

சிரியாவிலிருந்து நாமான் புறப்பட்டபோது, உடலில் தொழுநோயையும், உள்ளத்தில் ஆணவத்தையும், உடன் வந்தவர்கள் வழியே தன் செல்வச் செருக்கையும் சுமந்து சென்றார். அவர் சிரியாவுக்குத் திரும்பிச் சென்றபோது, உடலிலும், உள்ளத்திலும் முழு நலம் பெற்று, இஸ்ரயேல் நாட்டின் மண்ணைச் சுமந்து சென்றார். தான் கொண்டு செல்லும் செல்வத்தைக்கொண்டு இறைவனையே விலைபேச முடியும் என்ற மமதையுடன் சென்ற நாமான், விலைமதிப்பற்ற விசுவாசம் என்ற கொடையைப் பெற்றுத் திரும்பினார். தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம், அவர், உண்மையான நன்றி உணர்வுடன் வாழ்ந்திருப்பார் என்று நம்பலாம்.

நற்செய்தியில் நாம் சந்திக்கும் மற்றொரு தொழுநோயாளர், நன்றி உணர்வு கொண்டவர் என்று, இயேசுவிடம் பாராட்டு பெறுகிறார். நன்றியுணர்வைப்பற்றி சொல்லித்தருவது, இப்பகுதியின் முக்கிய நோக்கம் எனினும், மற்றும் சில முக்கியமான பாடங்களும் இன்றைய நற்செய்தியின் வழியே நம்மை வந்தடைகின்றன. இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளிலேயே நம் பாடங்கள் ஆரம்பமாகின்றன. இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். (லூக்கா 17:11) என்ற கூற்றுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.

புனித நகரான எருசலேம் நோக்கிச் செல்வது, இஸ்ரயேல் மக்களின் இலக்காக இருந்தது. இந்தப் புனிதப் பயணத்தில் சமாரியர்கள் வாழும் பகுதி குறுக்கிடும் வேளையில், அப்பகுதியில் காலடி பதித்து, தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாமல், அதைச் சுற்றிச் செல்வது இஸ்ரயேல் மக்களின் வழக்கம். இயேசுவோ, கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார் என்று இன்றைய நற்செய்தி தெளிவாகக் கூறுகிறது.

அர்த்தமற்ற பாகுபாடுகளுடன் வாழும் யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று சேர்க்கமாட்டோமா என்ற ஏக்கத்துடன் இயேசு அவ்வழியே சென்றிருக்கவேண்டும். அந்நேரம், பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதரா? சமாரியரா? தெரியவில்லை. அவர்கள் அனைவரும்  தொழுநோயாளர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமுதாயமும், சமாரிய சமுதாயமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்தப் புறக்கணிப்பு, அவர்களை இணைத்தது!

நோய், நொடி, துன்பம், பேரழிவு என்று வரும்போது, மனித சமுதாயம் பலவழிகளில் இணைந்துவிடுகிறது. 2001ம் ஆண்டு, சனவரி 26, இந்தியக் குடியரசு நாளன்று, குஜராத் மாநிலத்தில், புஜ் என்ற ஊரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி மனிதர்கள் ஒருவருக்கொருவர் இரத்ததானம் செய்தனர். இந்துக்கள் உடலில், முஸ்லிம்கள் இரத்தமும், முஸ்லிம்கள் உடலில் இந்துக்கள் இரத்தமும் ஓடியது. ஆனால், அதே குஜராத்தில், அடுத்த ஆண்டு, 2002, பிப்ரவரி மாதம் உருவான கலவரங்களில், ஒருவர் மற்றவரின் இரத்தத்தை வீதிகளில் ஓடவிட்டனர்.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, நியூயார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு பெரும் கோபுரங்கள் விமானங்கள் கொண்டு தாக்கப்பட்டதால் இடிந்து விழுந்த நிகழ்வு, அனைவரின் நினைவிலும் பதிந்திருக்கும். அந்த அழிவைப்பற்றி, 'One' - அதாவது, 'ஒன்றாக' என்ற தலைப்பில், Cheryl Sawyer என்ற பேராசிரியர் எழுதியிருந்த ஒரு கவிதையின் சில வரிகள் இதோ:

கரும்புகையும், புழுதியும், சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது,

நாம் ஒரே நிறத்தவரானோம்.

எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது,

நாம் ஒரே இனத்தவரானோம்.

சக்தி வேண்டி, முழந்தாள்படியிட்டபோது,

நாம் ஒரே மதத்தவரானோம்.

இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது,

நாம் ஒரே உடலானோம்.

இந்தப் பெரும் அழிவை எண்ணி, கூடிவந்து அழுதபோது,

நாம் ஒரே குடும்பமானோம்.

ஒரு கொடூரமான நிகழ்வு, சூழ இருந்த மக்கள் அனைவரையும் ஒரே நிறமாக்கியது. வெள்ளையர், கறுப்பர் என்ற நிற வேறுபாடுகள் இல்லாமல் போயின. பல நூறு ஆண்டுகள், அமெரிக்க மக்கள் காண விழையும், சமத்துவம் என்ற கனவு, அந்த அழிவு நேரத்தில், நனவாகியது. ஆனால், பாவம், அந்த அழிவிலிருந்து அவர்கள் மீண்டதும், பழைய பாகுபாடுகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன என்பது, கசப்பான உண்மை.

தொழுநோய் என்ற துன்பம், பாகுபாடுகளை மறந்து, பத்து நோயாளிகளை சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும், என்ன நடந்திருக்கும் என்பதை, நாம் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். "அவர்கள் புறப்பட்டு போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று. நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர், உரத்தக் குரலில் கடவுளைப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர்" (லூக்கா 17: 15) என்று நற்செய்தி கூறுகிறது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தால், ஒரே குலமாய் இருந்த பத்து பேரும், நோய் நீங்கியதும், யூதர் என்றும், சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" (லூக்கா 17: 15) என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார்த்தனர். குருக்களிடம் தாங்கள் போகும்போது, இந்தச் சமாரியரோடு போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை வாட்டி வதைத்த தொழுநோய் என்ற தீட்டு போதாதென்று, ஒரு சமாரியரோடு அவர்கள் சேர்ந்திருந்தது, மற்றொரு தீட்டாக மாறுமே என்ற பாகுபாட்டு எண்ணங்கள் உதித்தன.  

தொழுநோயுற்றபோது தன்னுடன் துன்பத்தில் இணைந்தவர்கள் மனதில், இப்போது வேற்றுமை எண்ணங்கள் புகுந்துவிட்டன என்பதை, அவர்களின் வெப்பப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்கவேண்டும். எனவே, அவராகவே அவர்களை விட்டு விலகினார். அனால், அவருக்குள் ஒரு சின்ன கலக்கம். தன்னை இவ்வளவு அன்போடு குணமாக்கியவர், "குருக்களிடம் காட்டுங்கள்" என்று கட்டளையிட்டாரே, என்ன செய்யலாம்? என்ற கலக்கம் அது. அவரது மனதில் ஒரு தெளிவு பிறந்தது. தன்னை குணமாக்கியவரே ஒரு பெரும் குரு. தெய்வம். அவரிடமே சரண் அடைவோம் என்ற தெளிவோடு, அந்தச் சமாரியர், இயேசுவிடம் திரும்பி வந்தார்.

திரும்பி வந்த சமாரியரைப் பார்த்து, இயேசுவுக்கு ஒருபுறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக்கடன் செலுத்தவந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டது, ஒதுக்கப்பட்டது குறித்து, இயேசுவுக்கு வேதனை. அந்த வேதனை, "மற்ற ஒன்பது பேர் எங்கே?" (லூக்கா 17:17) என்ற கேள்வியாக வெளிவருகின்றது.

இந்தக் கேள்வியில் இயேசுவின் ஏக்கம் தெளிவாகிறது. அவர்கள் அனைவரும் தன்னிடம் திரும்பிவந்து நன்றி சொல்லவேண்டும் என்ற ஏக்கம் அல்ல அது. நோயுற்றிருந்தபோது பத்துபேரும் ஒருசேர வந்ததைக் கண்ட இயேசு, நிச்சயம் மகிழ்ந்திருப்பார். அவர்களிடம் அவர் கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்ற ஏக்கத்தை இயேசு இந்தக் கேள்வியில் வெளிப்படுத்தினார்.

இயேசுவின் வேதனை நிறைந்த இக்கேள்விக்கு நாம் இன்றும் பதில் சொல்லமுடியாமல் தடுமாறுகிறோம். நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போதும், கலவரங்கள், போர்கள் என்று மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளின்போதும் ஒருங்கிணையும் நாம், இத்துன்பங்கள் விலகியதும், மீண்டும், நம் சுயநலத்தால், பிரிவுச் சுவர்களை எழுப்பிவிடுகிறோமே, இது ஏன்? இன்றைய நற்செய்தி, இக்கேள்வியை நமக்கு முன் வைக்கிறது. நமது பதில் என்ன?

இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்லித்தரும் முக்கியப் பாடமான நன்றி உணர்வின் மீது நம் கவனத்தைத் திருப்புவோம். உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். இவ்விரு குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டது போல, ஒன்றுக்கு ஒன்பது என்பதுதான் அந்த கணக்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நம்முடைய சொந்த வாழ்விலும் இதே கணக்கு நிலவுகிறதா என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக இன்று மேற்கொள்ளலாம். நம்மில் பலருக்கு, நன்றி உணர்வு ஒன்று எழுந்தால், அதை அழுத்தி, புதைத்துவிட ஒன்பது பிற எண்ணங்கள் எழுந்துவரும். இதனால், நாம் நன்றி சொல்லும் நேரங்களைவிட, கவலைகளையும், கோபதாபங்களையும் சொல்லும் நேரங்கள்தாம் அதிகமாகின்றன. நமது செபங்களைச் சிறிது ஆய்வு செய்தால், அவற்றில், பத்தில் ஒன்பது பகுதி குறைகளை வெளியிடும் விண்ணப்பச் செபங்களாகவும், பத்தில் ஒரு பகுதி மட்டுமே, நிறைகளைக் கூறும் நன்றி செபங்களாகவும் இருக்கலாம்.

முதியோர் இல்லம் ஒன்றில், இடம்பெற்ற ஒரு நிகழ்வோடு நம் ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்வோம். அந்த முதியோர் இல்லத்தில் நோயுற்று படுத்திருந்த, ரோசி என்ற வயதான பெண்மணியின் உடலில், ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து வந்தது. அவ்வில்லத்தில் பணியாற்றச் சென்ற ஓர் இளைஞர், ரோசி அவர்களிடம் காணப்பட்ட மகிழ்வைக்கண்டு ஆச்சரியமடைந்தார். நேரம் கிடைத்தபோதெல்லாம், அந்த இளைஞர், ரோசி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

நாளடைவில், ரோசியால் தன் கைகளையும், கால்களையும் அசைக்கமுடியாமல் போனது. "என் கழுத்தை அசைக்க முடிகிறதே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அவர் கூறிவந்தார். ஒருவாரம் சென்று, ரோசியால் தன் கழுத்தையும் அசைக்க முடியவில்லை. "என்னால் பார்க்கவும், கேட்கவும் முடிகிறதே...  அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று ரோஸி புன்சிரிப்புடன் கூறிவந்தது, இளையவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"உங்களால் பார்க்கவும், கேட்கவும் முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?" என்று அந்த இளைஞர் ரோஸியிடம் கேட்டார். அதற்கு அவர், "நீ என்னை தினமும் பார்க்க வருகிறாயே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அமைதியாகச் சொன்னார். இல்லாததை எண்ணி, ஏக்கத்தில் வாழ்வதைவிட, உள்ளதை எண்ணி, நன்றியுடன் வாழ்வது, உன்னத நிலை!

இறுதியாக ஓர் எண்ணம். அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐந்து அருளாளர்களை, புனிதர்களாக அறிவிக்கும் திருப்பலியை தலைமையேற்று நடத்துகிறார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கர்தினால் ஜான் ஹென்றி நியூமன், (Cardinal John Henry Newman) கேரளாவில் திருக்குடும்ப அருள் சகோதரிகள் சபையை நிறுவிய அருள் சகோதரி மரிய தெரேசா சிராமல் மங்கிடியான் (Maria Teresa Chiramel Mankidiyan), புனித கமில்லஸ் புதல்வியர் என்ற துறவு சபையை நிறுவிய அருள் சகோதரி ஜியூசப்பீனா வன்னீனி (Giuseppina Vannini), இறை அன்னையின் அமல உற்பவ மறைபரப்புப் பணி அருள் சகோதரிகள் சபையை நிறுவிய அருள் சகோதரி துல்ச்சே லோப்பஸ் போன்தெஸ் (Dulce Lopes Pontes), அசிசி நகர் புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்த அருள் சகோதரி மார்கரீத்தா பேய்ஸ் (Margarita Bays) ஆகிய ஐந்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படுகின்றனர். இப்புனிதர்களின் பரிந்துரையால், நாம், உடலிலும், உள்ளத்திலும் நலன்பெற்று, நன்றியுள்ளவர்களாக வாழும் வரத்திற்காக செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2019, 14:05