தேடுதல்

பகிரும்போது குறைவதில்லை, மாறாக, பெருகிக்கொண்டே செல்வது விசுவாசம் பகிரும்போது குறைவதில்லை, மாறாக, பெருகிக்கொண்டே செல்வது விசுவாசம் 

பொதுக்காலம் 27ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

உலகெங்கும் பல கோடிக் குழந்தைகள், பிறந்தது முதல், வன்முறைகளையே கண்டு வளர்வதால், இவ்வுலகம் எவ்வகையில் மாறப்போகிறதோ என்று நாம் கவலைப்படவேண்டிய நேரம் இது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

ஞாயிறு சிந்தனை 061019

சில ஆண்டுகளுக்கு முன் CNS என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் சிரியாவைப்பற்றி வெளியிட்ட ஒரு செய்தி, நம் ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கிறது.

இளவயது தந்தை ஒருவரும் அவரது சிறு வயது மகனும் இரவில் நடந்து சென்றபோது, திடீரென அச்சிறுவன் தந்தையைப் பார்த்து, “அப்பா, அவர்கள் மீண்டும் குண்டுபோட வருகிறார்களா?” என்று கேட்டான். தந்தைக்கு ஒன்றும் விளங்காமல், வானத்தைப் பார்த்தார். அங்கு வானத்தில் மின்னிய விண்மீன்களை அக்குழந்தை பார்த்து, அந்தக் கேள்வியைக் கேட்டான் என்பதைப் புரிந்துகொண்டார் தந்தை. அக்கேள்வி தன் மனதில் ஆழமான காயங்களை உருவாக்கின என்றும், விண்மீன்களைக் கண்டு தன் மகன் பயப்படத் தேவையில்லை என்பதை எப்படி தன் மகனுக்குப் புரியவைப்பது என அறியாமல் தான் கலங்கி நின்றதாகவும் தந்தை இச்செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவிலிருந்து துருக்கிக்குத் தப்பித்து வந்துள்ள Ali Ahmad என்ற அந்த இளவயது தந்தை, ஒரு மருத்துவப் பணியாளர். அவரது மகன், விவரம் தெரிந்த நாள்முதல், வானில் ஒளியைக் கண்டபோதெல்லாம் பயந்து நடுங்கி வாழ்பவன் என்பதை, CNS என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறும் Ahmad அவர்கள், சிரியா மக்களுக்கு தற்போது மிக அதிகமாகத் தேவைப்படுவது, மன நல மருத்துவர்களே என்று கூறுகிறார்.

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இந்தத் தேவை மிக அதிகம் உள்ளது என்று சிரியாவில் ஆசிரியராகப் பணியாற்றும் Ole Nasser என்பவர், மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். Ali Ahmadன் மகன் மட்டுமல்ல, உலகெங்கும் பல கோடிக் குழந்தைகள், பிறந்தது முதல், வன்முறைகளையே கண்டு வளர்வதால், இவ்வுலகம் எவ்வகையில் மாறப்போகிறதோ என்று நாம் கவலைப்படவேண்டிய நேரம் இது.

வன்முறையைப் பற்றி இன்று நாம் சிந்திப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதல் காரணம்... சில நாள்களுக்குமுன், அக்டோபர் 2ம் தேதி, நாம் சிறப்பித்த காந்தி ஜெயந்தி. 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்ததையடுத்து, இவ்வாண்டு அவரது பிறப்பின் 150ம் ஆண்டைச் சிறப்பிக்கிறோம்.

காந்தி பிறந்தபோது, அகிம்சையும் அவருடன் இணைந்து இரட்டைப் பிறவியாகப் பிறந்ததோ என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. எனவே, 2007ம் ஆண்டு ஐ.நா.அவை, அக்டோபர் 2ம் தேதியை அகில உலக வன்முறையற்ற நாள் என்று அறிவித்துள்ளது. இந்த வன்முறையற்ற உலக நாளை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நாளாக உருவாக்க இந்தியத் தலைவர்கள் அரும்பாடுபட்டனர் என்று சொல்லப்படுகிறது. வன்முறையற்ற உலக நாளை உருவாக்கிவிட்டு, அதனை இந்திய மண்ணில் நிஜமாக்க முடியாமல் நாம் தவிக்கிறோம். வன்முறையைப்பற்றி இன்று நாம் எண்ணிப்பார்க்க வன்முறையற்ற உலக நாளான அக்டோபர் 2ம் தேதி, முதல் காரணம்.

வன்முறையைப்பற்றி இன்று எண்ணிப்பார்க்க மற்றொரு காரணம், நமக்கு இன்று தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள். குறிப்பாக, இறைவாக்கினர் அபக்கூக்கு கூறும் சொற்கள் - அபக்கூக்கு 1 : 2-3, 2 : 2-4

மனித வரலாற்றின் பக்கங்கள் பல, வன்முறையால் காயமுற்ற பக்கங்களாகவே உள்ளன. இந்த வன்முறைகளுக்கு, பல வழிகளில் பதில் சொல்லப்பட்டுள்ளன. இன்றும் பதில்கள் சொல்லி வருகிறோம். வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் மூன்று வழிகளைச் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். வன்முறைகளுக்கு வன்முறைகளையே பதிலாகச் சொல்வது முதல் வழி. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற இந்த வழியை நியாயப்படுத்த, ‘முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்’ என்ற சமாதானமும் சொல்லப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன், Ali al-Khawahir என்ற 14 வயது இளைஞருக்கும் அவரது நண்பர் Mohammed al-Hazimக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதலில், Ali al-Khawahir, Mohammedன் முதுகில் கத்தியால் குத்திவிட்டார். இதனால், Mohammed, தன் இடுப்புக்குக் கீழ் செயல்கள் இழந்துவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவர், 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்பு, அதிர்ச்சியைத் தந்தது. Mohammedஐக் கத்தியால் குத்திய Ali al-Khawahirன் தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சை செய்து, அவரும் இடுப்புக்குக் கீழ் செயலிழந்து வாழவேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு. இத்தீர்ப்பைக் கேள்விப்பட்ட மனித உரிமை அமைப்புக்கள் எழுப்பியக் கண்டனக்குரல்களால், இத்தண்டனை உடனே நிறைவேற்றப் படவில்லை. இது போன்ற தண்டனையை மருத்துவ முறையில் எப்படி செய்யமுடியும் என்று அந்த நீதிபதி பல மருத்துவமனைகளிடம் கேட்டதாகவும், அதற்கு ஒரு மருத்துவமனை ஆலோசனைகள் தந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

தீர்ப்பு வழங்கிய நீதிபதியாகிலும் தனி மனிதர், அவர் ஏதோ மதியிழந்து, இத்தகையத் தீர்ப்பை வழங்கியுள்ளார் என்று காரணம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், இதனை எப்படி செய்வது என்று மருத்துவமனை ஒன்று ஆலோசனை வழங்கியுள்ளது என்பதைக் கேட்கும்போது, நாம் உண்மையிலேயே அதிர்ச்சி அடைகிறோம், அச்சம் கொள்கிறோம். வன்முறைகள் ஒரு நிறுவனத்தைப் போல தொழில்மயமாக்கப்பட்டு வருகிறதோ என்று கவலைப்படுகிறோம். வன்முறைகளுக்கு வன்முறைகளால் பதில் சொல்வது முதல் வழி. கண்ணுக்குக் கண் என்று இவ்வுலகம் வாழ்ந்தால், அனைவருமே பார்வையிழந்து அலையவேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையை விடுத்தவர், மகாத்மா காந்தி.

தாங்கமுடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட வன்முறைகளுக்கு மனித நீதி மன்றங்களில் நீதி கிடைக்காது என்று கடவுளிடம் முறையிடுவது, வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் இரண்டாவது வழி.... அபக்கூக்கு என்ற இறைவாக்கினர் எழுப்பும் முறையீட்டை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது:

இறைவாக்கினர் அபக்கூக்கு 1 : 2-3

ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்: நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்: நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன: வழக்கும் வாதும் எழும்புகின்றன.

ஒவ்வொரு நாளும் நமது பத்திரிக்கைகளைப் பிரிக்கும்போது, அல்லது தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும்போது, இறைவாக்கினரின் வேதனை வார்த்தைகள் தாமே நமது மனதிலும் ஒலிக்கின்றன.

மனித வரலாற்றைப் பல்வேறு யுகங்களாக நாம் பிரித்துள்ளோம். நாம் வாழும் இக்காலத்தை, வன்முறையின் யுகம் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. நம்பிக்கையைக் குழிதோண்டி புதைக்கும் வன்முறைகளுக்கு விடைதேடிய இறைவாக்கினருக்கு, இறைவன் தந்த பதில் இது:

இறைவாக்கினர் அபக்கூக்கு 2 : 2-4

ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது: முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு: அது நிறைவேறியே தீரும்: காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்: நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

இறைவனிடம் முறையிட்டு, அவரது நீதிக்காகக் காத்திருப்பது; காலம் தாழ்த்தினாலும் இந்த நீதி கட்டாயம் வரும் என்று நம்பிக்கை கொள்வது வன்முறைக்கு நாம் பதில் தரும் இரண்டாவது வழி. இப்படிப்பட்ட நம்பிக்கையின் விளைவுகளை இயேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்:

லூக்கா நற்செய்தி  17 : 5-10

அக்காலத்தில், திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.”

வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் மூன்றாவது வழி, திருவள்ளுவர் உட்பட, பல உயர்ந்த உள்ளங்கள் சொன்ன வழி. தன் வார்த்தைகளாலும், வாழ்வாலும் இயேசு காட்டிய வழி: “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”.

அகிம்சை என்ற அற்புத வழியை இவ்வுலகிற்குச் சொல்லித்தந்த காந்தி அடிகளின் கூற்றுக்களில் பல, வன்முறைக்கு அன்பை, பொறுமையை பதிலாகத் தரக்கூடிய மூன்றாம் வழியை வலியுறுத்துகின்றன.

"வன்முறையற்ற அகிம்சை என்பது நாம் உடுத்தும் சட்டையைப் போல வேண்டும்போது பயன் படுத்தும் கொள்கை அன்று. நம் வாழ்வின் அடித்தளமாய் இருப்பது அது."

“தற்காலிகமாய் நன்மை விளைவிப்பதைப் போல் தெரிந்தாலும், வன்முறை, நிரந்தரமாய் தீமையை மட்டுமே விளைவிக்கும். எனவே, அதை நான் வன்மையாய் எதிர்க்கிறேன்.”

வன்முறைகளைப் பற்றி நினைக்கும்போது, அரசியல் மற்றும் பொது வாழ்வின் வன்முறைகள் மட்டுமே நம் கண்களில் அதிகம் தெரிகின்றன. நமது செய்திகளிலும் இவை அதிகம் பேசப்படுகின்றன. ஆனால், நமது இல்லங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் வன்முறைகள் மிகவும் கொடுமையானவை. நமது இல்லங்களில் பணி புரியும் பணியாளர்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், குழந்தைகள் மீது காட்டப்படும் வன்முறைகள், பெண்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், வயது முதிர்ந்தோர் மீது காட்டப்படும் வன்முறைகள், வெகு ஆழமானவை. இவை பெரும்பாலும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் மெளனமாக சகித்துக் கொள்ளப்படும் வன்முறைகள். இவை செய்திகளாக வெளிவராததால், ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகின்றன.

வன்முறையற்ற அகிம்சை வழிகள் இறுதியில் வெல்லும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய காந்தியடிகளின் பிறந்த நாளைத் தொடர்ந்து, "அமைதியின் தூதனாய் என்னை மாற்றும்" என்ற உன்னத செபத்தை இவ்வுலகிற்குத் தந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாள், அக்டோபர் 4ம் தேதி சிறப்பிக்கப்பட்டது. அர்த்தமுள்ள இவ்விரு நாட்களையும் சிறப்பித்திருக்கும் நாம், வன்முறையின் பல வடிவங்களுக்கு மத்தியில் நம்பிக்கையைக் கைவிடாமல், நன்மையை, உண்மையைப் பின்பற்ற இறையருளை வேண்டுவோம். இந்த நம்பிக்கை நம்மிடம் கடுகளவே இருந்தாலும் போதும்... மலைகளையும் பெயர்த்துவிடமுடியும். வெறுப்பு எனும் கோட்டையை தகர்த்துவிட முடியும். அன்பு அனைத்தையும் வெல்லும். தொடர்ந்து நம்புவோம். வன்முறைக்கு அன்பை பதிலாக வழங்கி, வாழ்ந்து காட்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2019, 12:18