தேடுதல்

Vatican News
வட அயர்லாந்தில் கருக்கலைத்தலை எதிர்த்து போராட்டம் வட அயர்லாந்தில் கருக்கலைத்தலை எதிர்த்து போராட்டம்  (AFP or licensors)

கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக வட அயர்லாந்து ஆயர்கள்

அக்டோபர் 21ம் தேதி, வட அயர்லாந்து நாட்டில் துயரம் நிறைந்த நாள் என்றும், பிறக்கும் குழந்தைகள் கொணரும் ஆசீர், இனிமேல் இந்நாட்டிற்கு கிட்டாது என்றும் கூறும் ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாயின் வயிற்றில் வளரும் கருவை, 28 வாரங்கள் வரை கலைப்பதற்கு அனுமதிக்கும் புதிய சட்டம், வட அயர்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அக்டோபர் 21ம் தேதியை, துயரம் நிறைந்த நாள் என்று அறிவித்துள்ள ஆயர்கள், பிறக்கும் குழந்தைகள் கொணரும் ஆசீர், இனிமேல் வட அயர்லாந்து நாட்டிற்கு கிட்டாது என்று கூறியுள்ளனர்.

வாழ்வதற்குரிய உரிமையைத் தடுப்பதற்கு எந்த அரசாலும், சட்டத்தாலும் முடியாது என்றும், அவ்வுரிமையை அகற்றுவது அநீதியான செயல் என்றும், ஆயர்கள் தங்கள் அறிக்கையில், வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

பிறக்கவிருக்கும் குழந்தைகளின் வாழ்வதற்குரிய உரிமையைப் பாதுகாக்க, மக்களின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும், மீண்டும் தங்கள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ள வட அயர்லாந்து ஆயர்கள், குடிமக்களின் ஜனநாயக உரிமையின் வெளிப்பாடுகள் மதிக்கப்படவேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளனர்.

22 October 2019, 16:01