தேடுதல்

பள்ளிகளில் மரம் நடுதல் பள்ளிகளில் மரம் நடுதல் 

பூமியில் புதுமை – மரம் வளர்ப்பில் “கிரீன் நீடா”

பள்ளிக்கூட வளாகங்கள், கோயில்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் நட்டதோடல்லாமல் வீடுகளுக்குப் பழமரங்கள் கொடுத்து தண்ணீர் ஊற்றி சிறப்பாகப் பராமரிக்கிறவர்களுக்குப் பரிசு கொடுத்துக் கெளரவிக்கிறார் நீடாமங்கலத்தைச் சேர்ந்த திரு. ராஜவேலு

விக்டர் தாஸ் - வத்திக்கான்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் திரு. ராஜவேலு. சென்னையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிபவர். “கிரீன் நீடா” என்ற பெயரில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி, மரம் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

தன்னைப் போலவே மரம் வளர்ப்பில்  ஆர்வமுள்ள இருபது பேர் கொண்ட உறுப்பினர்களுடன் மரம் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபடும் இவர், தன்னுடைய மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை இதற்காக செலவுசெய்கிறார் என்பது அவர் சுற்றுசூழல் மேல் கொண்டிருக்கும் அக்கறையை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

கிரீன் நீடாவின் தனிப்பட்ட முயற்சியில், வடுவூர் என்ற கிராமத்தில் பொது இடங்களில் 200 மகிழம் கன்றுகளை நடவு செய்து, கூண்டு அமைத்து பாதுகாக்கிறோம் என்றும், நீடாமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இயல்வாகை, புங்கன், மந்தாரை மரக்கன்றுகள் வைத்து பாதுகாக்கிறோம் என்றும், பள்ளிக்கூட வளாகங்கள், கோயில்களில்  நூற்றுக்கணக்கான மரங்கள் நட்டதோடல்லாமல் வீடுகளுக்குப் பழமரங்கள் கொடுத்து தண்ணீர் ஊற்றி சிறப்பாகப் பராமரிக்கிறவர்களுக்குப் பரிசு கொடுத்துக் கெளரவிக்கிறோம் என்றும் கூறுகிறார்.  

நீடாமங்கலம் இரயில் நிலையம் அருகில், பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் குறுங்காட்டை உருவாக்குவதற்காக ஆயிரம் கன்றுகள் நடவு செய்தும்,   நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள கானூரில் 2019-ம் ஆண்டை உணர்த்தும்விதமாக, 2019 பனை விதைகளை நூறு நாள் வேலையாட்களைப் பயன்படுத்தி வெற்றிக்கரமாக விதைத்தும், இயற்கையின் மீதும் சுற்றுசூழல் மீதும் தான் கொண்டிருக்கிற ஆழ்ந்த அக்கறையை காட்டுகிறார் திரு. ராஜவேலு அவர்கள்.

“தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற ஒளவைப் பாட்டியின் சொல்லிற்கிணக்க திரு. ராஜவேல் போன்ற சில நல்ல உள்ளங்களால்தான் இயற்கையும் சுற்றுசூழலும் இன்றும் நிலைத்திருக்கிறது என்று சொல்லலாம். (நன்றி: பசுமை விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2019, 15:47