காலணிகளை கழற்றிய வண்ணம் திருப்பலியில் பங்கேற்கும் கென்ய ஆயர்கள் காலணிகளை கழற்றிய வண்ணம் திருப்பலியில் பங்கேற்கும் கென்ய ஆயர்கள் 

ஊழலுக்கு எதிராக கென்யா ஆயர்களின் முயற்சி

தங்கத்தால் செய்த கன்றை வழிபட்ட இஸ்ரயேல் மக்களை மனம் திருப்ப முயன்ற மோசேயைப் போல, ஊழல் என்ற தங்கக் கன்றை வணங்கிவரும் கென்ய மக்களை மனம் திருப்ப, ஆறு மாத முயற்சியொன்று மேற்கொள்ளப்படுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஊழலுக்கு எதிரான கொள்கைப் பரப்பு முயற்சியில், கென்யாவின் ஆயர் பேரவை அடுத்த ஆறு மாதங்கள் முழு வீச்சுடன் செயல்படும் என்று அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தக் கொள்கைப் பரப்பு முயற்சியைத் துவக்கும் ஓர் அடையாளமாக, அனைத்து ஆயர்களும், நிகழ்த்திய ஒரு கூட்டுத்திருப்பலியின் துவக்கத்தில், தங்கள் காலணிகளை அகற்றியதோடு, ஒவ்வொரு ஆயரும், ஒரு சிறு சிலுவையைச் சுமந்து பீடத்திற்குச் சென்றனர் என்று, நைரோபியிலிருந்து வெளியாகும் Catholic Mirror என்ற கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

கென்யாவில் நடைபெறும் குற்றங்களுக்கு, குறிப்பாக, வறியோரின் உயிர் வெகு எளிதாக விலை பேசப்படும் குற்றத்திற்கு முக்கிய காரணம் ஊழல் என்று, கென்யா ஆயர் பேரவையின் தலைவர், பேராயர், Anthony Muheria அவர்கள் கூறினார்.

தங்கத்தால் செய்த கன்றை வழிபட்ட இஸ்ரயேல் மக்களை மனம் திருப்ப முயன்ற மோசேயைப் போல, ஊழல் என்ற தங்கக் கன்றை வணங்கிவரும் கென்ய மக்களை மனம் திருப்ப, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

"ஊழல் தளைகளை உடைத்தெறிய" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்தக் கொள்கை பரப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, கென்யா தலத்திருஅவை, பெருமளவில் வரும் பணத்தை, நன்கொடையாகப் பெறப்போவதில்லை என்றும், அனைத்து பண பரிமாற்றங்களும், சட்டத்திற்கு உட்பட்டு, வெளிப்படையான முறையில் நடைபெறும் என்றும், கென்யா ஆயர் அவை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2019, 15:01