தேடுதல்

சர்வாதிகாரத்திலிருந்து ஹாங் காங்கை விடுவிக்க கோரி போராட்டம் சர்வாதிகாரத்திலிருந்து ஹாங் காங்கை விடுவிக்க கோரி போராட்டம் 

ஹாங் காங் மக்கள் நம்பிக்கையோடு போராடவேண்டும்

ஹாங் காங்கின் பிரச்சனைக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாக அமையாது என்றும், அது, சமுதாயக் காயங்களை இன்னும் ஆழமாக்கும் - கர்தினால் ஜான் டாங் ஹோன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹாங் காங்கில் நடைபெற்றுவரும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், அரசும், மக்களும் ஒருவர் மீது மற்றவர் நம்பிக்கை கொள்ளும் வழிகளைப் பின்பற்றவேண்டும் என்றும் கர்தினால் ஜான் டாங் ஹோன் (John Tong Hon) அவர்கள் கூறியுள்ளார்.

ஒரு திறந்த மடல் வழியே தன் விண்ணப்பத்தை வெளியிட்டுள்ள கர்தினால் ஹோன் அவர்கள், தான் ஒரு அரசியல் வாதி அல்ல, எனவே, ஹாங் காங்கின் பிரச்சனைக்கு தன்னால் தீர்வு வழங்கமுடியாது என்று கூறியுள்ள அதே வேளை, எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை ஒருபோதும் தீர்வாக அமையாது என்றும், அது, சமுதாயக் காயங்களை இன்னும் ஆழமாக்கும் என்றும் கூறியுள்ளார்.

அடக்கு முறை ஆட்சிகளுக்கு எதிராக வன்முறையற்ற அகிம்சை வழியில் போராடிய காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றி, மக்கள் நம்பிக்கையோடு, வன்முறையற்ற வழிகளில் போராடவேண்டும் என்று கர்தினால் ஹோன் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருப்போரில் பெரும்பான்மையானோர் இளையோர் என்பதை தன் திறந்த மடலில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் ஹோன் அவர்கள், இளையோர், நமது நிகழ்காலமாகவும், எதிர் காலமாகவும் திகழ்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2019, 14:53