தமிழர் திருவிழா தமிழர் திருவிழா 

சாம்பலில் பூத்த சரித்திரம்: தத்துவ போதகர்-தெ நொபிலி-பகுதி-2

அருள்பணி இராபர்ட் தெ நொபிலி சே.ச. அவர்கள், உயர் சாதி இந்துக்கள் சொல்ல விரும்பியவற்றிற்கும் கவனமுடனும், ஆர்வமுடனும் செவிமடுத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

17ம் நூற்றாண்டில் மதுரையில் இறைப்பணியாற்றவந்த இத்தாலிய இயேசு சபை அருள்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி அவர்கள், மதுரையில் உயர் சாதி இந்துக்களை அணுகுவதற்காக, புதிய யுக்திகளைக் கையாண்டார். வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றை ஆய்ந்தறிய சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார் அவர். தெ நொபிலி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள, வின்சென்ட் குரோனின் அவர்கள் கூற்றுப்படி, நொபிலி அவர்களின் மரியாதையும், கனிவும் கொண்ட அணுகுமுறையும், பண்புகளும் உயர்குலத்தவரை எளிதில் அணுகச் செய்தன. அவர், போர்த்துக்கீசிய கலப்படம் இல்லாமல், தமிழ் மொழியை நன்றாகப் பேசினார். அவர் பேசிய கருத்துக்கள், கேட்பதற்கு தகுதியுடையனவாக இருந்தன. அதேநேரம், உயர் சாதி இந்துக்கள் சொல்ல விரும்பியவற்றிற்கும் கவனமுடனும், ஆர்வமுடனும் செவிமடுத்தார். அவர்கள் தங்களின் புராணக் கதைகளைக் கூறுகையில், அவை “அறிவற்ற கதைகள்” என்று அவர் ஒருபோதும் வெறுப்பைக் காட்டியதில்லை, அதற்கு மாறாக, அவர்களின் ஆழ்ந்த சமயப் பற்றைக் கண்டு அவர் வியந்தார். அம்மக்களின் வாழ்விலும், எண்ணங்களிலும், சிந்தனைகளிலும், சொற்களிலும். செயல்களிலும், மதம் ஒன்றாகக் கலந்திருந்ததை உணர்ந்தார். 

நொபிலி அவர்கள், இத்தாலியில் உயர் குலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அவரும், தமிழக உயர் குலத்தவரிடம், தன்னை உரோமானிய அரசராக காட்டினார். இதனால் இந்தியர்கள் அவரை நன்றாகப் புரிந்துகொண்டனர் என, குரோனின் அவர்கள் எழுதியுள்ளார். நொபிலி அவர்களின் இந்து மத நண்பர்கள் அவரை உண்மையிலேயே அரசர் எனக் கேள்விப்பட்டபோது, அவரை ஏற்பதற்கு அவர்கள் புதிதாக ஆர்வம் காட்டினர். நொபிலி அவர்களும், பரங்கி என்ற குழுவிலிருந்து பிரித்துப் பார்க்கப்பட்டார். அரச குல விதிமுறைகளைப் பின்பற்றினார். சில காலம் வரை எந்த மத மாற்றமும் நிகழவில்லை. பின்னர், மதுரையில் கல்வியில் சிறந்திருந்த, உயர் குலத்தைச் சேர்ந்த மூவர், மெல்ல மெல்ல நொபிலி அவர்களை அணுகி பேசத் துவங்கினர். முதலில் ஒருவர், பின் இருவர், பின்னர் குழுவாக என அவரிடம் பேசத் துவங்கினர். அவரை முதலில் வெறுத்து ஒதுக்கியவர்கள், நட்புணர்வோடு பேச வந்தனர். இவ்வாறு நொபிலி அவர்களின் இறைப்பணி, ஏனைய மறைப்பணியாளர்களின் பணி போலன்றி, முழுவதும் புதிய உரு எடுத்தது. நொபிலி அவர்களின் அரசர் என்ற உயர்குலம், தான் அணுக விரும்பிய பிராமணர்களிடமிருந்து தன்னைப் பிரித்ததையும் உணரத் துவங்கினார். எனவே அவருக்கு மேலும் ஒரு முயற்சி தேவைப்பட்டது. இதற்காக இந்துக்களின் ஆலோசனையைக் கேட்டார். அதன்படி இந்து மத சந்நியாசியாக வாழ்வை மாற்றி வாழ ஆவல்கொண்டார்.

ஆனால் அதற்கு போர்த்துக்கீசியர்களும், அப்போது கோவாவின் ஆயராகப் பணியாற்றிய ஆயர் கிறிஸ்தவோ அவர்களும், சில இயேசு சபையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி அவர்களிடம் முறையிடப்பட்டது. அவர் 1623ம் ஆண்டு சனவரி மாதம் 31ம் தேதி வெளியிட்ட Romanæ Sedis Antistes எனப்படும் திருத்தூது கொள்கை அறிக்கையில், இவ்வழக்கங்கள் மூடத்தனமாக பிற மதங்களை பிரதிபலிக்காதவரை எத்தடையும் இல்லை என அறிவித்தார். மேலும், திருத்தந்தை, அக்கொள்கை அறிக்கையில், இந்திய குருத்துவ கல்லூரியில் பயிற்சி பெறுபவர்களிடம் இருந்த சாதி வெறி கைவிடப்படுமாறும்  வலியுறுத்தியிருந்தார். இந்த அனுமதியாலும், தனது சபை தலைவர்களின் ஆதரவாலும், கிறிஸ்தவ சந்நியாசியாக, தமிழ்த் துறவியாக மாறி இறைப்பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அந்த வாழ்வின் ஆபத்துக்களையும் சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டார். இந்தியர்களோடும், அவர்களின் சாதி அமைப்போடும் நெருங்க வைக்கும் வழிகளைத் தீவிரமாகத் தேடினார். பரங்கியாக மாறுவதைக் குறைத்து, சில உயர்குல இந்து மதத்தவரோடு தொடர்பு வைக்கும் வழிகளைத் துவக்கினார்.

இயேசு சபை அருள்பணி இராபர்ட் தெ நொபிலி அவர்கள் காவியுடையும் பூணூலும் அணிந்தார். புறத்தோற்றத்தில் தமிழ்த் துறவியாக மாற்றம் கொண்டாலும் அகவுணர்வில் சமயக் கோட்பாடுகளினின்று சிறிதும் அவர் வழுவவில்லை. தான் அணிந்திருந்த ஐம்புரிகள் தமதிரித்துவத்தையும், இரண்டு வெள்ளிப் புரிகள் கிறிஸ்துவின் உடலையும் உயிரையும் குறிப்பன என்று அவர் கூறினார். சந்நியாசியாக மாறியபின், பிராமணர்களுடன் உண்மைகள் பற்றிப் பகிர்ந்துகொள்வதற்கு அவருக்கு எளிதாக இருந்தது. ஏனெனில் பிராமணர்கள், ஆளும் வர்க்கத்தைவிட வல்லமை மிக்கவர்களாக இருந்ததை அவர் கண்டார்.

அருள்பணி இராபர்ட் தெ நொபிலி அவர்கள், நீண்ட காவி அங்கி, மரத்தாலான காலணிகள், கைத்தடி, கையில் கமண்டலம் என இந்து சந்நியாசி போலவே இருந்தார். நொபிலி அவர்களின் சந்நியாச ஆடை அணிந்த வாழ்வை போர்த்துக்கீசியர்கள் ஏற்கவில்லை. எனவே இவர் தனது மறைப்பணி தளத்தைவிட்டு வெளியேறி துறவியாக குடிசையில் வாழச் சென்றார். சில இயேசு சபை அருள்பணியாளர்களும் அவரைக் கேலி செய்தனர். ஆயினும், நொபிலி அவர்கள், தனது சபை தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். தத்துவ போதக சுவாமிகள் என அழைக்கப்பட்ட இவர் எழுதியவற்றில் ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிர்ணயம், தத்துவக் கண்ணாடி, சேசுநாதர் சரித்திரம், ஞான தீபிகை, நீதிச்சொல், புனர்ஜென்ம ஆக்ஷேபம், தூஷண திக்காரம், நித்திய சீவன சல்லாபம், கடவுள் நிர்ணயம், அர்ச்.தேவமாதா சரித்திரம், ஞானோபதேசக் குறிப்பிடம், ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றைவிட சமஸ்கிருதத்தில் எட்டு நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றுக்குப் பெயர் 'கிறிஸ்து கீதை' என்பதாகும். மேலும், தெலுங்கு மொழியில் நான்கு நூல்களையும் அவர் எழுதினார். இவா் ஒருமுறை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமியுடன் சமய வாதம் செய்தார் என்று கூறுவா். இவர், மயிலையில் 1656ம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2019, 12:51