தேடுதல்

Vatican News
மறைசாட்சியான அருளாளர் கிரேமோனேசி மறைசாட்சியான அருளாளர் கிரேமோனேசி 

மியான்மாரில் மறைசாட்சியான அருளாளர் கிரேமோனேசி

அருளாளர் கிரேமோனேசி அவர்கள், மியான்மாரில், மிக வறிய நிலையில் இருந்த மற்றும், மிகவும் ஒதுக்கப்பட்ட பகுதியில் மறைப்பணியாற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில், 28 ஆண்டுகள் மறைப்பணியாற்றி, மறைசாட்சியாக உயிர்துறந்த பாப்பிறை மறைப்பணி சபையின் (PIME) அருள்பணி Alfredo Cremonesi அவர்கள், அக்டோபர் 19, இச்சனிக்கிழமை மாலையில் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.

புனிதர்நிலைக்கு உயர்த்தும் பணிகளை மேற்கொள்ளும் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், அருள்பணி லூயிஜி கிரேமோனேசி அவர்கள் பிறந்த, இத்தாலியின் கிரேமா மறைமாவட்ட பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, அவரை அருளாளராக அறிவித்தார்.

மியான்மார் நாட்டின் Taungngu மறைமாவட்டத்தில், Donokù என்ற கிராமத்தில், 1953ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொல்லப்பட்டார், அருளாளர் லூயிஜி கிரேமோனேசி.

அருளாளர் கிரேமோனேசி அவர்கள் பற்றி ஆசியச் செய்தியிடம் பேசிய, Taungngu மறைமாவட்ட ஆயர் Isaac Danu அவர்கள், மியான்மாரில் மிக வறிய நிலையில் இருந்த மற்றும், மிகவும் ஒதுக்கப்பட்ட பகுதியில், அருளாளர் கிரேமோனேசி அவர்கள் மறைப்பணியாற்றினார், உள்ளூர் மக்கள் மீது அதிக அன்பு வைத்திருந்தார் என்று கூறினார்.  

அருளாளர் கிரேமோனேசி அவர்களுக்கு, Taungnguவிலுள்ள ஆலயம் ஒன்று அர்ப்பணிக்கப்படும் என்றும், ஆயர் Danu அவர்கள் கூறினார்.

1902ம் ஆண்டில் பிறந்த அருளாளர் கிரேமோனேசி அவர்கள், 1911ம் ஆண்டில் மறைமாவட்ட குருத்துவ பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். 1924ம் ஆண்டு அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில், அவர், மியான்மார் நாட்டிற்கு மறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார். (AsiaNews)

19 October 2019, 15:06