தேடுதல்

Vatican News
அருள்பணிஇராபர்ட் தெ நொபிலி சே.ச. அருள்பணிஇராபர்ட் தெ நொபிலி சே.ச. 

சாம்பலில் பூத்த சரித்திரம்: தத்துவ போதகர், தெ நொபிலி-பகுதி-1

மதுரையில் மதம் மாறியிருந்த அனைவரும், கடற்கரைப் பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் அல்லது போர்த்துக்கீசியர்களாகவும், மதுரை நகரைச் சேர்ந்த ஒருவர்கூட மதம் மாறவில்லை என்பதையும் கண்டார், அருள்பணி இராபர்ட் தெ நொபிலி

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவில் ஜாதிப் பிரிவினைகளும், பார்ப்பனர்களின் கோட்பாடுகளும் கிறிஸ்தவ மதப் போதனைகளுக்குப் பெரும் தடங்கல்களாக இருந்தன. சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே கிறிஸ்தவத்தைத் தழுவினர். இந்நிலையில், பார்ப்பனர்களும் கிறிஸ்தவத்தை ஏற்கச் செய்தவர், 16 மற்றும், 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய இயேசு சபை அருள்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி ((Robert de Nobile S.J.1577-1656). இந்தியாவில் திருத்தூதுப் பணியாற்றிய இவர், இந்திய மக்களுக்கு நற்செய்தி அறிவித்தபோது கையாண்ட யுக்திகளால் மிகவும் போற்றப்படுகிறார். 1577ம் ஆண்டு, இத்தாலியின் டஸ்கனி மாநிலத்தில் மொந்தேபுல்சியானோ (Montepulciano) எனும் ஊரில் பிரபுக்கள் குலத்தில் பிறந்த இராபர்ட் தெ நொபிலி அவர்கள், இரு திருத்தந்தையர்க்கு உறவினர். இவரது குடும்பம் கத்தோலிக்கத் திருஅவையில் அதிகம் செல்வாக்குப் பெற்றிருந்தது. இவர் தனது குடும்பத்திற்காக மாபெரும் செயல்கள் ஆற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆப்ரிக்கா மற்றும், ஜப்பானில் திருத்தூதுப் பணியாற்றிய மறைபோதகர்களின் துணிச்சலான செயல்களால் கவரப்பட்டு, தனது 26வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். இவர் தனது குடும்பத்தினர் தன்னைப் பற்றி கொண்டிருந்த கனவுகளையும் தவிடுபொடியாக்கினார்.

தெ நொபிலி அவர்கள் இயேசு சபையில் இணைந்தவுடன் மறைப்பணித் தளங்களுக்குச் செல்வதற்குத் தன்னை தயார் செய்தார். இவர், இந்தியாவில் இறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார். 1605ம் ஆண்டு, மே மாதம் 20ம் தேதி, கோவா வந்திறங்கினார். கோவாவிலிருந்து, முதலில் கொச்சின் என்ற சென்ற அவர், ஏறத்தாழ 1606ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மதுரை சென்றார்.  இராபர்ட் தெ நொபிலி பற்றி, “இந்தியாவுக்கு ஒரு முத்து:இராபர்ட் தெ நொபிலியின் வாழ்வு” என்ற தலைப்பில் வின்சென்ட் குரோனின் என்பவர் எழுதி, 1959ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலில், இந்த இளம் இயேசு சபை அருள்பணியாளர், கோவாவை விட்டு வெளியேறி வேறு இடங்களில் இறைப்பணி ஆற்றவே விரும்பினார். ஏனெனில், மதமாற்றம், தீவுகளிலும், கடற்கரையோரங்களிலுமே நடைபெறுகின்றது என்பதையும், தேவைப்பட்டால், பாதுகாப்பிற்கு, போர்த்துக்கீசியரின் துப்பாக்கிகளும் இதற்கு துணை நின்றன என்பதையும், இந்த இளம் குரு, முழுமையாய் நம்பினார். எனவே இவர், இந்தியாவின் உட்பகுதிக்குச் சென்று தென்னிந்தியாவின் மத்திய பகுதியில் வாழ்ந்தவர்களை மதமாற்றும் முயற்சியில் இறங்க விரும்பினார் என்று அந்த நூலில் குறிக்கப்பட்டுள்ளது. 

மதுரை சென்ற தெ நொபிலி

மதுரைக்குச் சென்ற அருள்பணியாளர் தெ நொபிலி அவர்கள், அப்பகுதியில் மற்றுமோர் இயேசு சபை அருள்பணியாளரைச் சந்தித்தார். அவர், அப்பகுதியில் பல ஆண்டுகளாக இறைப்பணியாற்றி வந்தாலும், மத மாற்றத்தைப் பொருத்தவரை வெற்றி காணவில்லை என்பதை அறிந்தார் தெ நொபிலி. நகரத்தில் மதம் மாறியிருந்த அனைவரும், கடற்கரைப் பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் அல்லது போர்த்துக்கீசியர்களாகவும், மதுரை நகரைச் சேர்ந்த ஒருவர்கூட மதம் மாறவில்லை என்பதையும் கண்டார். அது பற்றி தனது மூளையைப் போட்டு குழப்பினார். சில வாரங்கள் சென்று, கடைசியில், அதிர்ச்சியூட்டும் ஓர் உண்மை அவருக்குப் புலப்பட்டது. மதுரையில் வாழ்ந்த இந்துக்கள், வெளிநாட்டவரை மிகவும் உற்று கண்காணிப்பதைக் கண்டார். வெளிநாட்டவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கவனித்து வந்த இந்துக்கள், மறைப்பணியாளர்கள் மாமிசம் சாப்பிடுவதையும், “பரங்கி”  என முத்திரை குத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரோடு தொடர்பு வைத்திருப்பதையும் கவனிப்பதை தெ நொபிலி அவர்கள் உணர்ந்தார். அதனால் வெளிநாட்டு மறைப்பணியாளர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று இந்துக்கள் முடிவு செய்தனர். இவ்வாறு தாங்கள் தலித்துகளுடன் இணைக்கப்பட்டதற்கு, இயேசு சபையினர் உட்பட போர்த்துக்கீசியர்கள் மகிழ்வடைந்தனர். ஏனெனில், “போர்த்துக்கீஸ்” என்ற சொல்லுக்கு, தமிழில் பரங்கி என்று மொழிபெயர்க்கப்பட்டது. இயேசு சபையினர் மேலும் ஒரு தவறு செய்தனர். அவர்கள், தங்களின் மதத்தைக் குறிப்பதற்கு, “Parangi” என்ற சொல்லையே பயன்படுத்தினர். எனவே, ஒருவர் கிறிஸ்தவராக மாற வேண்டுமெனில், தங்களின் சாதியை ஒதுக்கிவிட்டு, மாமிசமும் சாப்பிட வேண்டுமென, இந்துக்கள் முடிவு செய்தனர். இதனாலேயே மதுரையில், உயர் ஜாதி இந்துக்கள் எவரும் மதம் மாறவில்லை என்பதைக் கண்டறிந்தார், இராபர்ட் தெ நொபிலி.

 அதேநேரம், பல இந்துக்கள் தங்கள் கடவுள்கள் மீது ஆழ்ந்த பக்திகொண்டு, எளிய மற்றும் கடினமான வாழ்வு வாழ்ந்து வந்ததையும், இவர்கள் எல்லாரும் எல்லா சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களை அனைவரும் நன்மதிப்புடன் நடத்தப்பட்டதையும், இவர்கள் சந்நியாசிகள் என்று அழைக்கப்பட்டதையும் கவனித்தார், இராபர்ட் தெ நொபிலி. எனவே சிறிது காலம் சென்று, தெ நொபிலி அவர்களும், சந்நியாசியாக மாறுவதற்குத் தீர்மானித்தார். அதன் வழியாக, தங்கள் சாதிகளைப் புறக்கணிக்க விரும்பாதவர்களை அணுக முடியும் என்பதை உணர்ந்தார் இவர். இத்தாலிய இயேசு சபை அருள்பணி  இராபர்ட் தெ நொபிலி அவர்கள், வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றை ஆய்ந்தறிய வடமொழி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தத்துவ போதக சுவாமிகள் என அழைக்கப்படும் இவர், தமிழில் 40 உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இத்தகைய பங்களிப்பால் இவர் தமிழ் உரைநடையின் தந்தை என்று அறியப்படுகிறார். மூன்று கவிதை நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

16 October 2019, 14:57