தேடுதல்

ஜப்பானில் Nikolai பேராலயம் ஜப்பானில் Nikolai பேராலயம் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: ஜப்பானில் கிறித்தவம்-பகுதி-6

ஜப்பானில், ஏறத்தாழ 350 ஆண்டுகள் கிறிஸ்தவர்கள் அனுபவித்த சிதர்வதைகளும், அடக்குமுறைகளுமே, தற்போது அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதற்குக் காரணம்

மேரி தெரேசா – வத்திக்கான்

ஜப்பானில் மத்திய காலத்தில் ஆட்சி செய்த Tokugawa shogunate என்பவர், Tokugawa Bakufu எனவும், Edo Bakufu எனவும் அறியப்படுகிறார். ஜப்பானில் 1600ம் ஆண்டு முதல், 1868ம் ஆண்டு வரை நிலவிய, இராணுவ ஆட்சிமுறையின் இறுதி ஆளாக, இவர் ஆட்சி செய்தவர். இந்த ஆட்சிமுறை அரசின் தலைவர் shogun என அழைக்கப்பட்டார். இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் Tokugawa குலமரபைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். Tokugawa shogunate என்பவர், Edo அரண்மனையிலிருந்து ஆட்சி செய்தார். இந்த குலமரபைச் சேர்ந்தவர்கள் ஆட்சிசெய்த காலம் Edo காலம் அல்லது, Tokugawa காலம் எனவும் அழைக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடும் சித்ரவதைகள், மரண தண்டனைகள், தூக்குத்தண்டனைகள் போன்றவை, 1805ம் ஆண்டில், Tokugawa shogunate ஆட்சிசெய்த காலத்தில், அதிகாரப்பூர்வமற்ற முறையில் கைவிடப்பட்டன.

ஜப்பானில் கிறிஸ்தவம் தடைசெய்யப்பட்டு, வெளிநாட்டவர் வெளியேற்றப்பட்ட பின், இரகசியமாக விசுவாசத்தைக் கடைப்பிடித்த கிறிஸ்தவர்கள், அருள்பணியாளர்கள் இன்றி இருந்தனர். அருள்பணியாளர்கள் இல்லாததால், அவ்வாறு மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவப் பொதுநிலையினரே திருமுழுக்கு அருள்சாதனத்தை நிறைவேற்றினர். இவ்வாறு திருமுழுக்கு இவர்கள் மத்தியில் முக்கியத்துவம் அடைந்தது. அக்கிறிஸ்தவர்கள் உருவாக்கிய அன்னை மரியா திருவுருவம், புத்தமத போதிசத்வா (bodhisattva) போன்றும், இயேசு திருவுருவம், ஜப்பானில் அதிகமாக வணங்கப்பட்ட Jizo போன்றும் இருந்தன. உண்மையில் இக்கிறிஸ்தவர்களின் வாழ்வில் அன்னை மரியா முக்கிய இடம் வகித்திருந்தார். அந்நாட்டில் அனைவருமே உள்ளூர் புத்தமத ஆலயத்தில் பெயர்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்தபோதிலும், மறைந்த வாழும் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்பதை புத்தமத துறவிகள் அறிந்தே இருந்தனர். இதனால் கிறிஸ்தவர்கள் மிக இரகசியமான வழிகளில் மறைந்து வாழ்ந்தனர்.   

இக்கிறிஸ்தவர்கள், ஒவ்வொரு நாளும், இயேசு கற்பித்த செபம், அருள்மிகப் பெற்றவரே வாழ்க போன்ற செபங்களைச் செய்துவந்தனர். இவற்றை வாய்மொழியாகவே நூற்றாண்டுகளாகப் பரப்பி வந்தனர். சில நூற்றாண்டுகளுக்குமுன் இச்செபங்கள், ஜப்பானிய மொழியில் மட்டுமே மொழி பெயர்க்கப்பட்டன. இயேசு, அன்னை மரியா படங்களை மிதித்தால், மற்றும், புத்தமதச் சடங்கின்படி அடக்கச்சடங்கை நடத்தினால் அதற்காக மனம் வருந்தும் செபங்களையும் அவர்கள் கற்று வைத்திருந்தனர். மொத்தத்தில் அனைத்தையுமே அவர்கள் இரகசியமாகவே ஆற்ற வேண்டியிருந்தது. கிறிஸ்தவத்தை மறைவாகக் கடைப்பிடித்துக்கொண்டு, புத்தமதத்தினர்முன், கிறிஸ்தவர்களாக இல்லாததுபோல் இவர்கள் நடிக்கவேண்டியிருந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு, ஜப்பானை மீண்டும் திறந்து விடுவதற்கு முன்னதாகவே, 19ம் நூற்றாண்டில், shogunate மரபின் இராணுவ ஆட்சி, கிறிஸ்தவர்களைத் தேடுதல் உட்பட, தன் கொள்கைகளைத் தளர்த்தத் தொடங்கியது. 1850களில் அமெரிக்க ஐக்கிய நாடு ஜப்பானில் நுழைய ஆரம்பித்தது. 1867ம் ஆண்டில், Tokugawa ஆட்சி கவிழ்ந்தது. அதற்கு அடுத்த ஆண்டில், நவீன Meiji பேரரசு உருவானது. வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் ஜப்பானில் நுழைந்தனர். 1871ம் ஆண்டில் சமய சுதந்திரம் சட்டமாக்கப்பட்டது. மறைந்த வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தங்களை வெளிப்படையாக அறிவிக்கத் தொடங்கினர். ஜப்பானிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்தவர்களுக்கு, இது வியப்பாக இருந்தது. எனினும், பலர் கத்தோலிக்கத் திருஅவையில் மீண்டும் இணைந்தனர். மேலும் பலர், தங்கள் மூதாதையரின் பழக்கவழக்கங்களை மதிக்கும் நோக்கத்தில் கத்தோலிக்கத்தில் இணையவில்லை. மூதாதையரை மதிக்காவிட்டால் தவறு செய்வதாக அவர்கள் உணர்ந்தனர். கிறிஸ்தவர்களின் சமய சுதந்திரம் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை தொடர்ந்தது.

தற்போதைய கத்தோலிக்கம்

இக்காலத்தில் ஜப்பானில் கிறிஸ்தவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம், ஏறத்தாழ 350 ஆண்டுகள் அவர்கள் அனுபவித்த சிதர்வதைகளும், அடக்குமுறைகளுமே. 2005ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஜப்பானின் மக்கள் தொகையில், 0.5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே, அதாவது  ஏறத்தாழ 509,000 கத்தோலிக்கர் இருந்தனர். 2014ம் ஆண்டில் ஏறத்தாழ 4,40,000 கத்தோலிக்கர் இருந்தனர். அந்நாட்டில், மூன்று உயர்மறைமாவட்டங்கள் உட்பட 16 மறைமாவட்டங்களில், 848 பங்குத்தளங்களில் 1589 அருள்பணியாளர்கள் இறைப்பணியாற்றுகின்றனர். இயேசு சபையைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார், ஜப்பானில் முதன் முதல் கிறிஸ்துவை அறிவித்தார். அதே இயேசு சபையைச் சேர்ந்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஜப்பானில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார். இந்தப் பயணம் சிறுமந்தையாகிய ஜப்பான் கத்தோலிக்கரை விசுவாசத்தில் ஆழப்படுத்தும் என நம்புவோம். 2ம் உலகப் போரில் அணுகுண்டுகளால் கடும் பாதிப்பை அனுபவித்துள்ள இந்ந்நாட்டில் உலக அமைதி மற்றும், அணு ஆயுத ஒழிப்புக்காக திருத்தந்தை குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2019, 15:15