தேடுதல்

ஜப்பானிலுள்ள ஆலயம் ஜப்பானிலுள்ள ஆலயம் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: ஜப்பானில் கிறித்தவம்-பகுதி-5

மதத்தை மறுதலிக்க மறுத்த கத்தோலிக்கர், சிலநேரங்களில், நாகசாகியின் Unzen மலையில், வெப்ப ஊற்றுகளில் போட்டு கொதிக்கவிடப்பட்டனர்

மேரி தெரேசா – வத்திக்கான்

1630களின் மத்தியில், ஜப்பானின் Shimabara தீபகற்பம் மற்றும், Amakusaவில் வாழ்ந்த விவசாயிகள், தங்களின் பண்ணையாளர்கள் விதித்த அதிக வரி மற்றும், பஞ்சத்தினால் மிகவும் துன்புற்றனர். இந்தப் பகுதி, Matsukura Katsuie, Terasawa Katataka ஆகிய இரு நிலச்சுவான்தார்களால் ஆளப்பட்டு வந்தது. இவர்களின் கொடுமைகளால், மீனவர்கள், கைவினைஞர்கள், மற்றும், வர்த்தகர்களும் துன்புற்றனர். எனவே பாதிக்கப்பட்ட ஏழைகள் எல்லாரும் இணைந்து, பண்ணையார்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். Shimabara தீபற்பம், ஒருகாலத்தில், Arima என்ற கிறிஸ்தவ பண்ணையாரின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆதலால், அப்பகுதியில் பலர் கிறிஸ்தவர்களாக இருந்தனர். 1614ம் ஆண்டில், அரிமா அவர்கள், Matsukura என்பவரால் தலைமைப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். Matsukura Shigemasa என்ற புதிய பண்ணையார், தனது குலமரபை உயர்த்திப்பிடிப்பதற்காக, புதிய கட்டடங்களையும், Edo அரண்மனையையும் விரிவுபடுத்தினார். இஸ்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்த, தற்போதைய பிலிப்பீன்ஸ் நாட்டின் ஒரு பகுதியான Luzon வரை தனது நிலப்பரப்பை விரிவாக்கத் திட்டமிட்டார். Shimabaraவிலும் புதிய அரண்மனையைக் கட்டினார். இவற்றுக்கெல்லாம் நிதி தேவைப்பட்டதால் மக்களிடம் அதிகம் வரிவிதித்தார் அவர். அதேநேரம், கிறிஸ்தவத்தையும் கடும் வன்முறை நடவடிக்கைகளால் நசுக்கினார்.

Amakusa தீவுகளில் வாழ்ந்த மக்களும் இதேமுறையான சித்ரவதைகளுக்கு உள்ளாகினர். எனவே, 1637ம் ஆண்டு டிசம்பரில், இளைஞர் Amakusa Shirō தலைமையில் கத்தோலிக்க விவசாயிகள் போராடத் துவங்கினர். இளைஞர் Amakusa Shiro (1621-1638) அவர்களும், ஏழைகளின் மாண்பு மற்றும், சமத்துவத்திற்காக குரல் கொடுத்தார். இவர் நாகசாகியில் இயேசு சபையினரிடம் கற்ற கல்வி, ஏழைகளின் மாண்புக்காக குரல் கொடுக்கத் தூண்டியது. அந்த இளைஞரை கடவுளின் குழந்தையாக நம்பிய ஏழை கத்தோலிக்க  விவசாயிகள், இவரின் தலைமையில் பண்ணையார்களுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆயினும், குளிர் காலத்தில் இம்மக்களை பசிக்கொடுமை வாட்டியதோடு, பாதுகாப்புக் கவசங்களும் இல்லாமல்போயின. அதேநேரம், புரட்சியாளர்களை அடக்குவதற்கு, Tokugawa Shogunate என்பவர், டச்சுக்காரர்களின் ஆதரவுபெற்று, ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கு அதிகமான படைவீரர்களை அனுப்பினார். 1638ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்ற இந்த சித்ரவதைகளில், இளைஞர் Amakusa Shiro உட்பட, புரட்சியாளர்களும், அவர்களுக்காகப் பரிந்துபேசியவர்களும் என, மொத்தத்தில் 37 ஆயிரம் பேர் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். பண்ணையார்களின் ஆட்கள், இந்த புரட்சியாளர்களைக் கொலைசெய்வதற்கு மூன்று நாள்கள் எடுத்தனர் எனச் சொல்லப்படுகின்றது. மேலும், போர்த்துக்கீசிய வர்த்தகர்கள், புரட்சி செய்த கத்தோலிக்கருக்கு உதவினர் என்ற சந்தேகத்தின்பேரில், அவர்களை ஜப்பானைவிட்டு வெளியேற்றினர். பிரபு Bakumatsu காலம்வரை கிறிஸ்தவம் சித்ரவதைக்கு உள்ளானது. Shimabara தீவில் இடம்பெற்ற புரட்சி, ஜப்பானில் Edo ஆட்சி காலத்தில் நடைபெற்ற நீண்டகால உள்நாட்டுப் போர் என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

Shimabaraவில் இடம்பெற்ற புரட்சியில் கொல்லப்பட்ட கத்தோலிக்க விவசாயிகள் பற்றி எழுதியுள்ள John Dougill என்பவர், இந்த எண்ணிக்கையை, இரண்டாம் உலகப் போரில் நாகசாகியில் அணு குண்டால் கொல்லப்பட்ட எண்ணிக்கையோடு ஒப்புமைப்படுத்தியுள்ளார். ஷிம்பாராவில் கொல்லப்பட்ட கத்தோலிக்கரின் பத்தாயிரம் தலைகள் அரண்மனையைச் சுற்றி கம்பங்களில் தொங்கவிடப்பட்டன மற்றும், இதேமாதிரி செய்வதற்காக, மேலும் 3,300 தலைகள் நாகசாகிக்கு அனுப்பப்பட்டன. இது, மற்ற மக்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகவும் நடத்தப்பட்டது. ஜப்பானைவிட்டு வெளியேற்றப்பட்ட வெளிநாட்டவர் மீண்டும் ஜப்பானுக்குள் நுழைந்தால் மரணத்தையே ஏற்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டனர். ஆயினும், Dejima தீவில் மட்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் டச்சு கப்பல்கள் தங்கவும், வர்த்தகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டன. இந்த அடக்குமுறைகளுக்குப் பின், ஜப்பானில் கிறிஸ்தவர்கள் மறைந்து வாழ்வார்கள் என்ற சந்தேகத்தில், மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 1635ம் ஆண்டில் அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி, அனைவரும் புத்தமத ஆலயத்தில் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். 1666ம் ஆண்டில் இது ஒவ்வோர் ஆண்டும் செய்யவேண்டிய நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டது. அதோடு, மக்கள் புத்தமத ஆலயத்திற்குத் தவறாமல் செல்ல வேண்டும். ஒருவர் ஒருவர் பற்றிய விவரங்களை அரசுக்கு அறிவிப்பதற்கு குழுக்களும் உருவாக்கப்பட்டன. ஒருவர் கிறிஸ்தவர் என்று தெரிந்தால், குடும்பம் முழுவதும் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற சட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக, இறந்தவரை அடக்கம் செய்யும் முறைகளும் புத்தமதச் சடங்கின்படியே நடைபெற வேண்டும் எனவும் கண்டிப்பாக அறிவிக்கப்பட்டது.

இயேசு, அன்னை மரியா ஆகியோரின் சிறிய படங்களை வைத்திருந்தால்கூட கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். 1629ம் ஆண்டில் நாகசாகியில், இப்படங்களை வைத்திருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட மதத்தினர் எனச் சொல்லப்பட்டு அவர்கள், சித்ரவதைக்கு உள்ளாயினர். 1856ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, வெளிநாட்டவர்களுக்கு, துறைமுகங்கள் திறந்துவிடப்பட்டபோது, இந்த சித்ரவதைகள், அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டன. இவ்வாறு ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் தொடர்ந்தன. மதத்தை மறுதலிக்க மறுத்த கத்தோலிக்கர், சிலநேரங்களில், நாகசாகியின் Unzen மலையில், வெப்ப ஊற்றுகளில் போட்டு கொதிக்கவிடப்பட்டனர். 1805ம் ஆண்டில், Tokugawa Shogunate என்பவரால், கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள், அதிகாரப்பூர்வமற்ற முறையில் கைவிடப்பட்டன. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2019, 15:54