தேடுதல்

பாம்புக்கடியைக் குணமாக்கும் அருள்சகோதரி Philomena Guria பாம்புக்கடியைக் குணமாக்கும் அருள்சகோதரி Philomena Guria 

பாம்புக்கடியைக் குணமாக்கும் அருள்சகோதரி

பாம்புக்கடியைக் குணமாக்கும் மருத்துவ முறைகளில் பயிற்சி பெறுவதால், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்களை தங்களால் காக்க முடிகிறது - அருள் சகோதரி சுன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தின் கிராமப்புறங்களில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 4,500 பேர் பாம்புக்கடியால் மரணமடைகின்றனர் என்றும், அவர்களைக் காப்பது தன் தனிப்பட்ட அழைப்பு என்றும், அருள் சகோதரி Crescencia Sun அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மறைபரப்புப் பணிகளின் நமதன்னை என்ற துறவு சபையைச் சேர்ந்த அருள் சகோதரி சுன் அவர்கள், உரோம் நகரில் அக்டோபர் 16ம் தேதி நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற வேளையில், CNA செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் தன் பணியைப் பற்றி விவரித்தார்.

"முன்னணித் தலங்களில் பெண்கள்" என்ற தலைப்பில், அமெரிக்கத் தூதரகம் உரோம் நகரில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் பெண்கள் மற்றும் அருள் சகோதரிகள் வந்திருந்தனர்.

தங்கள் துறவு சபையில் இணைவோரில் பலர் மருத்துவத் தாதியர் பணிகளில் பயிற்சி பெறும் வேளையில், குறிப்பாக, பாம்புக்கடியைக் குணமாக்கும் மருத்துவ முறைகளிலும் அவர்கள் பயிற்சி பெறுவதால், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்களை தங்களால் காக்க முடிகிறது என்று அருள் சகோதரி சுன் அவர்கள் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், குறிப்பாக, கோடைக்காலத்தில் ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேர் நச்சுள்ள பாம்புகளால் கடிபட்டு வருவதாகவும், தகுந்த நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளால், அவர்களில் பெரும்பாலானோர் உயிர் பிழைப்பதாகவும் அருள் சகோதரி சுன் அவர்கள் எடுத்துரைத்தார். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2019, 14:54