ஹாங் காங் போராட்டத்தில் மனித சங்கிலியை உருவாக்கிய மாணவர்கள் ஹாங் காங் போராட்டத்தில் மனித சங்கிலியை உருவாக்கிய மாணவர்கள் 

குடிமக்களின் குரலுக்கு அரசு செவிமடுக்க அழைப்பு

கோபம் - வெறுப்புணர்வுக்கு இட்டுச்செல்லும், எளிதாக வெறுப்பைத் தூண்டும், சரியானது எது, தவறானது எது என்பதைத் தேர்ந்துகொள்ளும் திறனை இழக்கச் செய்யும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஹாங் காங்கில் பிரச்சனைக்குரிய ஒப்படைப்பு சட்ட திருத்த வரைவு திரும்பப் பெறப்பட்டாலும், மக்கள் போராட்டம் இன்னும் முடிவுக்குவராதவேளை, குடிமக்கள், கோபத்தை விலக்கி, நம்பிக்கையுடன் நல்லிணக்கத்திற்காக உழைக்குமாறு, ஹாங் காங் கர்தினால் ஜான் டாங் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹாங் காங்கின் தற்போதைய நிலவரம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்தினால் டாங் அவர்கள், ஏமாற்றமடைந்துள்ள இளையோரின் குரலுக்கு, ஹாங் காங் அரசு உண்மையிலேயே செவிசாய்க்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

ஹாங் காங் மக்கள் மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்து விளக்கிய கர்தினால் டாங் அவர்கள், தற்போது ஹாங் காங்கின் பதட்டநிலை சிறிது குறைந்திருந்தாலும், போராட்டங்கள் தொடர்கின்றன, இவை மிகவும் கவலை தருகின்றது எனவும் தெரிவித்தார்.

செபத்தை தவிர வேறு என்ன நம்மால் செய்ய முடியும் என, பல கத்தோலிக்கர் என்னிடம் கேட்கின்றனர், மற்றவரை மாற்றுவதற்காக அல்ல, மாறாக, நம் சொந்த இதயங்கள் மனமாற்றம் அடையவும், பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், செபம் உதவும் என்று தெரிவித்ததாகவும் ஹாங் காங் கர்தினால் கூறினார்.

கோபம், வெறுப்புணர்வுக்கு இட்டுச்செல்லும், கோபம், எளிதாக வெறுப்பைத் தூண்டும், சரியானது எது, தவறானது எது என்பதைத் தேர்ந்துகொள்ளும் திறனை இழக்கச் செய்யும், ஒருவர் தனது நன்மைத்தனம் நிறைந்த இதயத்தை இழப்பார் என்றுரைத்த கர்தினால், குடிமக்கள், வன்முறையை விலக்கி வாழ அழைப்பு விடுத்தார்.   

ஹாங்காங்கில் கைதாகும் குற்றம் சாட்டப்பட்டோர் அல்லது குற்றவாளிகளைச் சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும், ஒப்படைப்புச் சட்டத்திருத்த வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹாங்காங் நகர மக்கள் கடந்த சில மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2019, 15:53