கர்தினால் சார்லஸ் மாங் போ கர்தினால் சார்லஸ் மாங் போ 

அப்பாவி மக்களுக்காக மதத் தலைவர்கள் குரலெழுப்ப வேண்டும்

மாபெரும் ஆன்மீக அரணாக விளங்கும் மியான்மாரில், அப்பாவி மக்களுக்கு எதிராக ஆற்றப்படும் கொடுமைகள் மத்தியில், சமயத் தலைவர்கள் மௌனம் காப்பது வேதனையளிக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில், அப்பாவி குடிமக்களுக்கு இழைக்கப்படும் கொடுஞ்செயல்களுக்கு எதிராய், மதத் தலைவர்கள் குரலெழுப்ப வேண்டும் என்று, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐந்து இலட்சம் புத்தமத ஆண் துறவிகள், எழுபதாயிரம் புத்தமத பெண் துறவிகள், ஏறத்தாழ 1,200 கிறிஸ்தவப் போதகர்கள், இரண்டாயிரத்திற்கும் அதிகமான கத்தோலிக்க அருள்சகோதரிகள், மற்றும், எண்ணற்ற சமயத் தலைவர்கள் உள்ள ஒரு நாட்டில், அநீதிகளின்முன் மௌனம் காப்பது குற்றமாக நோக்கப்படும் என்று தெரிவித்துள்ளார், கர்தினால் போ.

மாபெரும் ஆன்மீக அரணாக விளங்கும் மியான்மாரில், அப்பாவி குடிமக்களுக்கு எதிராக ஆற்றப்படும் கொடுமைகள் மத்தியில், சமயத் தலைவர்கள் மௌனம் காப்பது வேதனையளிக்கின்றது என்றும், யாங்கூன் பேராயரான கர்தினால் போ அவர்கள் கூறினார்.

அப்பாவி குடிமக்களுக்கு எதிராய் நடத்தப்படும் போர், அநீதியானது மற்றும், புனிதமற்றது, நம் செபங்களும், வழிபாடுகளும், அப்பாவி மக்களின் இரத்தம் மற்றும், கண்ணீர்களுக்கு முன்பாக, அர்த்தமற்றதாக மாறுகின்றன என்றும், கர்தினால் போ அவர்கள் கூறினார்.

தற்போதைய ரோஹிங்ஜியா பிரச்சனை, உலகளாவிய சமுதாயத்தை அதிகம் கவர்ந்துள்ளது, ஆனால், கரேன், ஷான், மோன், சின் போன்ற ஏனைய இனங்களின் மக்களும், பாகுபாடுகள் மற்றும், வன்முறையால் தொடர்ந்து துன்புற்று வருகின்றனர் என்று, கர்தினால் போ அவர்கள் கவலை தெரிவித்தார்.

ரோஹிங்ஜியா மக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களாகிய கரேன் இனம் போன்ற ஏனைய சிறுபான்மை இனங்களும் அந்நாட்டில் உள்ளன என்றும், மியான்மாரில் பெரும்பான்மையாகவுள்ள பாமார் இனத்தில், புத்த மதத்தவரே அதிகம் என்றும், எனவே அந்நாட்டில் அரசியல் தலையீட்டுடன் தொடர்ந்து நடைபெறும் மோதல்கள், கலாச்சார மற்றும், மதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்றும், கர்தினால் போ அவர்கள் கூறினார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2019, 15:29