தேடுதல்

Vatican News
சிரியாவின் வடகிழக்குப் பகுதியில், துருக்கிப் படைகள் சிரியாவின் வடகிழக்குப் பகுதியில், துருக்கிப் படைகள்  (ANSA)

வடகிழக்கு சிரியாவில் போர் நிறுத்தப்பட செபம்

துருக்கிப் படைகளின் தற்போதைய ஊடுருவல், சிரியாவையும், அப்பகுதி முழுவதையும் ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆக்ரமித்திருந்த ஒட்டமான் ஆதிக்கத்தை நினைவுபடுத்துகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில், துருக்கிப் படைகளுக்கும், குர்த் படைகளுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போர் நிறுத்தப்படுவதற்கு, உலகினர் எல்லாரும் செபிக்குமாறு, சிரியா மற்றும், ஈராக் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிரியா எல்லைக்குள் துருக்கிப் படைகள் ஊடுருவி இருப்பது, கிறிஸ்தவர்களின் கவலையை அதிகரித்துள்ளது என்றுரைத்த, அலெப்போ மெல்கித்தே வழிபாட்டுமுறை பேராயர் Jean-Clement Jeanbart அவர்கள், இத்தாக்குதல்கள், சிரியாவின் வடகிழக்குப் பகுதியின் நிலையான தன்மையைக் குலைக்கும் என்று கூறியுள்ளார்.

துருக்கிப் படைகளின் தற்போதைய ஊடுருவல், சிரியாவையும், அப்பகுதி முழுவதையும் ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் ஆக்ரமித்திருந்த ஒட்டமான் ஆதிக்கத்தை, கிறிஸ்தவர்களுக்கு நினைவுபடுத்துகின்றது என்றும், பேராயர், வத்திக்கான் செய்திகளிடம் கூறினார்.

சிரியா நாடு முழுவதையும் விடுவித்து, அந்நாட்டின் கிறிஸ்தவர்கள், குர்த் மற்றும், முஸ்லிம்கள் ஆகிய, நாட்டு மக்கள் எல்லாரும் சுதந்திரமாக வாழ்வதற்கு, சிரியா மக்கள் எல்லாரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையையும், பேராயர் Jeanbart அவர்கள் தெரிவித்தார்.

சிரியாவில், கடந்த காலங்களில் குறைவுபடும் பாதுகாப்புடன், நாட்டினர் அனைவரும் தாயகத்திற்குத் திரும்பி வருவதற்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைப்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், பேராயர் Jeanbart அவர்கள் குறிப்பிட்டார். (CNA)

சிரியாவில் போர் நிறுத்தம்

இதற்கிடையே, போர் இடம்பெறும் சிரியாவின் வடக்கு பகுதியில், குர்த் இனத்தவரின் படைகள் பின்வாங்குவதற்கு உதவும் வகையில், போர் நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி அரசு ஒப்புக்கொண்டுள்ளது என செய்திகள் கூறுகின்றன.

துருக்கி நாடு, ஐந்து நாள்களுக்கு போரை நிறுத்த இசைவு தெரிவித்துள்ளது. அச்சமயத்தில், துருக்கி எல்லையில் அமைக்கப்படுவதாக கூறப்படும் "பாதுகாப்பு மண்டலம்" என்ற பகுதியில் இருந்து, குர்த் படைகள் பின்வாங்குவதற்கு அமெரிக்கா ஐக்கிய நாடு உதவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த எட்டு நாட்களில், சிரியாவில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்று இலட்சத்திற்கு அதிகமானோர் புலம்பெயர்ந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

18 October 2019, 15:33