தேடுதல்

திருச்சி முன்னாள் ஆயர் அந்தோனி டிவோட்டா 151019 திருச்சி முன்னாள் ஆயர் அந்தோனி டிவோட்டா 151019 

திருச்சி முன்னாள் ஆயர் டிவோட்டா அவர்கள் இறைபதம் சேர்ந்தார்

மேதகு ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலி, அக்டோபர் 16, இப்புதன் காலை பத்து மணிக்கு, திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் நடைபெறும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

தமிழகத்தின் திருச்சி மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்கள், அக்டோபர் 15, இச்செவ்வாய் அதிகாலை 2.30 மணியளவில், மாரடைப்பால் இறைவன் திருவடி சேர்ந்தார் என்பதை அறிவிக்கிறோம்.

1943ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி தூத்துக்குடியில் பிறந்த ஆயர் டிவோட்டா அவர்கள், 1971ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 2001ம் ஆண்டு சனவரி 28ம் தேதி திருச்சி மறைமாவட்ட ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர், திருச்சி மறைமாவட்டத்திற்கு ஆயராகத் திருநிலைப்படுத்தப்படுவதற்குமுன், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் தலைமைக் குருவாகப் பணியாற்றினார். சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் பல்வேறு முக்கிய பணிகளை வகித்துள்ள இவர், சென்னை பூந்தமல்லி இயேசுவின் திருஇதய இறையியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

2018ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி, தனது 75வது வயதில் திருச்சி மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிர்வாகத்திலிருந்து ஓய்வுபெற்ற ஆயர் டிவோட்டா அவர்கள், தனது 77வது வயதில், இச்செவ்வாயன்று இறைபதம் சேர்ந்தார்.   

மேதகு ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களை இவ்வுலகைவிட்டு வழியனுப்பும் இறுதி திருப்பலி, அக்டோபர் 16, இப்புதன் காலை பத்து மணிக்கு, திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் நடைபெறும். இத்திருப்பலிக்குப் பின்னர், அவரது உடல், அவர் விருப்பப்படி, பெங்களூரு புனித ஜான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் மாணவ, மாணவியரின் பகுப்பாய்வு படிப்பிற்கு உதவுவதற்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஆயர் டிவோட்டா அவர்களுடைய கண்களும், இறந்த சில மணி நேரங்களுக்குள் திருச்சி புனித ஜோசப் மருத்துவமனைக்கு கண்தானம் செய்யப்பட்டுவிட்டன.     

பேராயர், தொமினிக் ஜாலா

மேலும், அக்டோபர் 10, கடந்த வியாழனன்று கலிஃபோர்னியாவில், வாகன விபத்தில் உயிரிழந்த, ஷில்லாங் உயர்மறைமாவட்ட, 68 வயது நிரம்பிய சலேசிய சபை பேராயர், தொமினிக் ஜாலா அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய, அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள் செபித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2019, 15:14