தேடுதல்

மக்கள் நடுவே இயேசு மக்கள் நடுவே இயேசு 

விவிலியத்தேடல்: தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல் - பகுதி 3

நம்பிக்கைப் படகு சந்தேக அலையால் தாக்கப்பட்டு நிலைகுலையும்போது சீடர்கள் செய்த செயல் நம்முடைய வாழ்விற்கும் ஒரு வழிகாட்டியாய் அமைகிறது. சீடர்கள் இயேசுவை அணுகி தங்களுடைய இயலாமைக்கு காரணம் கேட்கின்றனர்.

விக்டர் தாஸ் - வத்திக்கான்

விவிலியம்-புதுமைகள் 011019

அனுபவம் சொல்லித்தருகின்ற பாடத்தை எத்தனை ஆயிரம் ஆசான்களாலும் சொல்லித்தரமுடியாது. தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல் நிகழ்வில் சீடர்கள் தாங்கள் சந்தித்த அனுபவதால் தங்களுடைய இயலாத்தன்மையை உணர்ந்துகொண்டனர் என்று சிந்தித்த நாம் சீடர்களின் இயலாமைக்கு காரணம் என்ன என்பதையும் நம்முடைய வாழ்வில் இயலாமை அகல என்ன செய்யவேண்டும் என்பதையும் இன்றைய நமது தேடுதல் பயணத்தில் சிந்தித்து தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல் நிகழ்விற்கான தேடுதல் பயணத்தை நிறைவு செய்வோம்.

இயலாமை போக்க முயலாமை, நம்மை இயலாமையிலேயே நீடித்திருக்கசெய்திடும். சீடர்கள் தங்ளுடைய தோல்வியை, இயலாமையை ஏற்றுக்கொண்டு அது களைவதற்கான காரணம் தேட முயல்வதை நாம் நற்செய்தியில் வாசிக்கமுடிகிறது.

மாற்கு 9:28 அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, "அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று கேட்டனர்.

தன்னிடம் இல்லாததை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று ஏங்குவதும், பெற்றுக்கொள்ள துடிப்பதும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இயற்கையான குணம். தன்னிடம் குறைவாய் உள்ளதை நிறைவு செய்துகொள்ள விரும்புவதும், குறைவிற்கான காரணம் கண்டுதெளிதலும், அதை நிறைக்க முயல்தலும் பாராட்டப்படக்கூடிய பண்பாகும்.  

"அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று சீடர்கள் கேட்ட கேள்வியை சிந்திக்கும்போது, விவிலிய அறிஞர் மற்றும் இறையியலாளர் ஜான் கில்  அவர்கள், தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல் நிகழ்வில் தோல்விக்கண்டு தங்களின் இயலாமையை உணர்ந்த ஒன்பது சீடர்கள், எங்கே இயேசு தங்களுக்குக்  கொடுத்த தீய ஆவிகளை விரட்டக்கூடிய வல்லமையையும் ஆற்றலையும் இழந்துவிட்டார்களோ என்ற அச்சத்தில் இயேசுவிடம் தனிமையில் கேட்டிருக்கக்கூடும் என்று குறிப்பிடுகிறார்.

 சீடர்களின் உள்ளத்தில் எழுந்த, “ஏன் நம்மால் அந்த தீய ஆவியை ஓட்டமுடியவில்லை?” என்ற சந்தேகக்  கேள்வியும், அவர்களை ஆட்கொண்ட அச்சமும்   எதார்த்தமான ஒன்றுதான். ஏனென்றுசொன்னால், இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுத்திருந்தார் என்று ஒத்தமை நற்செய்தியாளர்களின் நற்செய்தி பதிவுகள் நமக்கு சான்றுபகர்கின்றன.

மாற்கு 3:13 “அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்” என்று மாற்கு நற்செய்தியாளரும்;

மத்தேயு 10:1 “ இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்” என்று மத்தேயு நற்செய்தியாளரும்;

லூக்கா 9:1 “இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார்” என்று லூக்கா நற்செய்தியாளரும் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சீடர்கள் தங்களிடம் இயேசு வழங்கியிருந்த ஆற்றலைக்கொண்டு வல்லச்செயல்கள் பல செய்தனர் என்றும் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாற்கு 6:12-13 இல் நாம் வாசிக்கின்றோம் “அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்”.

இப்படி வல்லசெயல்கள் செய்த சீடர்கள், இதற்கு முன்பு பெரும்பாலும் வெற்றியை மட்டுமே பெற்றிருந்ததால், இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கு தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக அவர்கள் நம்பியிருக்கலாம். இப்படிப்பட்ட தருணத்தில், ஒரு சிறு தோல்வி அவர்களுடைய நம்பிக்கையை ஆட்டம்காண செய்கிறது. தாங்கள்  பயணித்துக் கொண்டிருந்த நம்பிக்கைப் படகு சந்தேக அலையால் தாக்கப்பட்டு  நிலைகுலையும்போது சீடர்கள் செய்த செயல் நம்முடைய வாழ்விற்கும் ஒரு வழிகாட்டியாய் அமைகிறது. சீடர்கள் இயேசுவை அணுகி தங்களுடைய இயலாமைக்கு காரணம் கேட்கின்றனர்.

சீடர்களின் கேள்விக்கு இயேசு தரும் பதில் இரண்டு விதமாக ஒத்தமை நற்செய்தியாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் காணமுடிகிறது. மத்தேயு நற்செய்தியாளர் சீடர்களின் தோல்விக்கு அவர்களின் நம்பிக்கை குறைவுதான் காரணம் என்று இயேசு கூறுவதாக பதிவுசெய்துள்ளார் (மத்தேயு 17:20),  ஆனால் மாற்கு நற்செய்தியாளர் இறைவேண்டலின் குறைவுதான் காரணம் என்பதை சுட்டிக்காட்டுவது போன்ற அர்த்தத்தில் பதிவுசெய்துள்ளார் (மாற்கு 9:29). மேலோட்டமாக பார்க்கும்போது இயேசுவின் பதில்  இருவேறுபட்ட பதிலாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஆழ்ந்து நோக்கும்போது இரண்டும் இலைமறைக்காயாக ஒரே உண்மைப்பொருளையே சுட்டிக்காட்டுகின்றன.

நம்பிக்கையும் இறைவேண்டலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைத்தவை அல்லது ஒற்றை நாணயத்தின் இரட்டைப்பக்கங்கள் என்று கருதலாம். நம்பிக்கையை அதிகரிப்பதற்கான வழிமுறையாக இறைவேண்டல் இருக்கிறது.  இறைவேண்டல் நம்பிக்கையை அடிநாதமாகக்கொண்டு எழுப்பப்படுகிறது. எனவே, இயேசுவின் பதில் இறைவேண்டலின் இன்றியமையாமையை முன்னிறுத்துகிறது என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்ற அதேவேளையில், இயேசு செய்த மிகப் பெரிய அற்புதங்கள் கூட இறைவேண்டலுக்கு விடையளிக்கும் வகையில் செய்யப்பட்டன என்பதை நாம் கண்முன்னிறுத்தவேண்டும் (எ .கா: யோவான் 11:41).

இறைவேண்டலின் இன்றியமையாமையை எடுத்தியம்பும் இயேசு, இறைவேண்டலை தன்னுடைய வாழ்விலும் கடைபிடித்தார் என்பது நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஊன்றப்படவேண்டிய உன்னதமான செய்தி. இயேசு ஒரு மனிதனாக தன்னுடைய ஆன்மீகத்தில் அக்கறைக்கொண்டிருந்தார் என்பதை அவர் பாலைவனத்தில், மலையில் தனிமையாக இருந்த தருணங்களும்; தந்தையுடன் அவர் செலவிட்ட நேரங்களும்; இறைவேண்டல் செய்து அற்புதங்களை புரிந்த நிகழ்வுகளும் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. ஆக, ஆன்மீக ஆழம் இல்லாமல் மனித இயல்பின் பாவத்தின் தாக்கங்களை ஆன்மாவிலிருந்து ஒழிக்க முடியாது என்பதை இயேசு அறிந்திருந்தார், அதை வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

அதிநவீன அறிவியல் வளர்ச்சியின் அதிவேக பயன்பட்டால் ஆன்மீக கவனக்குறைவும் ஆன்மீக அலட்சியமும் அதிகரித்தே வருகிறது என்பது நிதர்சன உண்மை. அண்டைவீட்டாரோடு அளவளாவியபோதும், அடுத்தவர் இன்பத்துன்பங்களில் பங்கெடுத்தபோதும் இருந்த ஆன்மிகம், ஆண்ட்ராய்டு அலைபேசி மற்றும் இணையத்தளம்  வலைத்தளங்களின் வளர்ச்சியால் அழிந்து போகின்ற அவலம் தொடர்வது நெருடலாகவே இருக்கிறது.

தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல் பகுதியில் சீடர்களின் தோல்விக்கு, சீடர்களின் ஆன்மீக அலட்சியம் தான் காரணம் என்றுகூட சிந்திக்க தோன்றுகிறது. ஏனென்றுசொன்னால், "இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் (நோன்பினாலும் ) அன்றி வேறு எதனாலும் வெளியேறாது" என்ற இயேசுவின் பதில், சீடர்களின் ஆன்மீக குறைபாட்டை அல்லது பலவீனத்தை உள்ளங்கை நெல்லிக்கனியாய் நமக்கு தெளிவுபடுத்துகிறது. 

ஆன்மீக கவனக்குறைவு, ஆன்மீக புறக்கணிப்பு அல்லது ஆன்மீக அலட்சியம் என்பது நம்மில் ஆன்மீக பலவீனத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஆயுளையும் குறைத்துவிடும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எந்தவொரு தீய செல்வாக்கையும் அல்லது எந்த பலவீனத்தையும் நம் வாழ்க்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பி, அதை வெளியேற்ற முடியவில்லை என்று விரக்தியுடன் இருக்கிறோம் என்றுசொன்னால், இயேசு சீடர்களுக்கு கொடுத்த அதே பதில்தான் நமக்கும் வழியாக அமையமுடியும்.  வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றுசொன்னால், நம்முடைய ஆன்மீக வாழ்வு பலப்படுத்தப்பட வேண்டும். அதை நாம் இறைவேண்டலில் நிலைத்திருப்பதன் வழியாக பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பமாக இருக்கிறது.

தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல் பகுதியில் அச்சிறுவனின் தந்தை, "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று இயேசுவிடம் தன்னை ஒப்படைத்ததுபோல; சீடர்கள் இயேசுவிடம் தனிமையாக வந்து, "அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று தங்களின் இயலாமையை ஒப்புக்கொண்டதுபோல; நாமும், நம்முடைய நம்பிக்கையின்மை நீங்கிட, இயலாமை நீக்கப்பட இயேசுவைத்தேடி செல்வோம். இறைவேண்டலில் நிலைத்திருந்து நம்பிக்கையில் நாளுக்குநாள் மிகுந்து ஆண்டவரின் அற்புதங்களையும் அதிசயங்களையும் அவனியில் அனுபவிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2019, 16:00