தேடுதல்

பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் 

விவிலியத்தேடல்: பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் - பகுதி 1

ஒரு செய்தியை சொல்லும்போது மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் விதமாக எப்படி சொல்லவேண்டும் என்பதையும், பிறர் உதவி நாடும்போது, எப்படி கேட்கவேண்டும் என்பதையும் அறிந்திருத்தல் நலம்பயக்கக்கூடியது

விக்டர் தாஸ் - வத்திக்கான்

விவிலியம்-புதுமைகள் 081019

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவான புதுமைகளில், 12வது புதுமையான  பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் நிகழ்வில் இன்று நம் தேடல் பயணம் துவங்குகிறது.

பொதுவாக புதுமைகள்  குறித்து நாம் சிந்திக்கும்போது இயேசுவின் வல்ல செயல்களை நற்செய்தியாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கும் நாம், அதேபோல் நற்செய்திப் பதிவுகளில் ஒரு சில கூடுதல் அல்லது குறைவான தகவல்கள் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் புதுமையை உற்றுநோக்கும்போது ஒரு சில குழப்பங்களை நாம் அறியமுடிகிறது.

முதலாவதாக, இந்த புதுமையானது ஒத்தமை நற்செய்திகளில் வெவ்வேறு தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாம் காணமுடிகிறது. மாற்கு நற்செய்தியாளர் பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் என்றும், லூக்கா நற்செய்தியாளர் பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுதல் என்றும், மத்தேயு நற்செய்தியாளர் பார்வையற்றோர் இருவர் பார்வைபெறுதல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மாற்கு 10:46 “...திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.”

லூக்கா 18:35  “இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.”

மத்தேயு 20:30 “அப்பொழுது வழியோரத்தில் உட்கார்ந்திருந்த பார்வையற்றோர் இருவர் இயேசு அவ்வழியே கடந்து செல்கிறார் என்று கேள்விப்பட்டு, "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்தினர்.”

நற்செய்தியாளர்கள் மாற்கு மற்றும் லூக்கா பார்வையற்ற ஒருவரை மட்டுமே குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில் பார்வையற்றோர் இருவரை இயேசு குணப்படுத்தியதாக மத்தேயு குறிப்பிட்டுள்ளதால் புரிந்துகொள்ளுதலில் எழும் சிரமம் குறித்து ஆங்கிலிக்கன் பேராயரும் கவிஞருமான ரிச்சர்ட் செனவிக்ஸ் ட்ரென்ச் அவர்கள் இணையான வரலாறுகளின் அனைத்து நல்லிணக்கங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு விதியை முன்வைக்கிறார். அதாவது ஒரு கதைச்சொல்லியின் அமைதி, மற்றொருவரின் உறுதிப்பாட்டிற்கு முரணானது அல்ல;   எனவே, பார்வையற்ற ஒருவர் பற்றி குறிப்பிடும் மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் பார்வையற்றோர் இருவர் பற்றி குறிப்பிடும் புனித மத்தேயுவுக்கு முரணாக இல்லை என்று தெளிவுபடுத்துகிறார். எனவே, இதிலிருந்து மத்தேயு நற்செய்தியாளர் பதிவுசெய்துள்ள பார்வையற்ற இருவரில் ஒருவர் பர்திமேயுவாக இருக்கலாம் என்று கூட நம்மால் அனுமானிக்க  முடிகிறது.

இரண்டாவதாக, புதுமை நிகழ்ந்த இடமும் சூழலும் சில குழப்பங்களை நம்முள் ஏற்படுத்துகிறது. அதாவது நற்செய்தியாளர்கள் மத்தேயு மற்றும் மாற்கு இயேசு எரிக்கோவை விட்டு வெளியே சென்றபோது இப்புதுமையை நிகழ்த்தினார் என்றும், லூக்கா நற்செய்தியாளர் இயேசு எரிக்கோவை நெருங்கி வந்தபோது இப்புதுமையை செய்தார் என்றும் பதிவுசெய்துள்ளனர்.

இந்த குழப்பம் பற்றி நாம் சிந்திக்கும்போது ஜேம்ஸ் பர்ட்டன் கோப்மன் விவிலிய விளக்கவுரைகள் நமக்கு சில தெளிவுகளை முன்வைக்கிறது. அதாவது இரண்டு எரிக்கோக்கள் இருந்ததாக கருதப்படுகிறது. பழைய நகரம் யோசுவாவால் அழிக்கப்பட்டது, ஆனால் ஒரு கிராமமாக தொடர்ந்து உள்ளது, மேலும் புதிய நகரம் பழைய இடத்திற்கு அருகில் கட்டப்பட்டது. எந்தவொரு இரந்துண்பவரும் (பிச்சைக்காரரும்) இயல்பாகவே இரு இடங்களுக்கிடையில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே அமர்ந்து மக்கள் கூட்டத்திடம் உதவிவேண்டுவர்.  அருகருகே அமைந்திருக்கும் இந்த இரண்டு இடங்களுக்கு நடுவே இந்த புதுமை நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது, ஒரே பெயர்க்கொண்ட இரண்டு இடங்களில் ஒர் இடத்திலிருந்து வெளியேறுவது, அதே பெயர்க்கொண்ட மற்றோர் இடத்திற்குள் நுழைவதாக அல்லது நெருங்குவதாக அமைகிறது என்று  கோப்மன் விவிலிய விளக்கவுரைகள் தெளிவுபடுத்துகிறது. எனவே, இந்த பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் நிகழ்வு எரிக்கோவில் நிகழ்ந்தது என்பது மட்டும் நிதர்சன உண்மையாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துணரமுடிகிறது.

ஒரு காலை நேரம்  பார்வையற்ற சிறுவன் ஒருவன் மக்கள் புழக்கம் அதிகமாக உள்ள ஒரு கட்டிடத்தின் படிகளில் அமர்ந்துகொண்டு அங்கு வந்து செல்லும் மக்களிடம் உதவிவேண்டிக்கொண்டிருந்தான். தனக்கு முன் தன்னுடைய தொப்பியை வைத்து அதோடு கூட "நான் பார்வையற்றவன், தயவுசெய்து உதவுங்கள்" என்ற ஓர் அடையாளத்தையும் வைத்திருந்தான். தொப்பியில் ஒரு சில நாணயங்கள் மட்டுமே இருந்தன.

அந்தவழியாக வந்த ஒரு மனிதர் பார்வையற்ற சிறுவனை பார்த்து அவன்மீது இரக்கம் கொண்டு அவர் தனது சட்டைப் பையில் இருந்து சில நாணயங்களை எடுத்து தொப்பியில் போட்டார். பின்னர் அவர் அந்த சிறுவன் வைத்திருந்த அடையாளத்தை எடுத்து, அதைத் திருப்பி, சில வார்த்தைகளை எழுதினார். அவர் அந்த அடையாளத்தை மீண்டும் அதே இடத்தில்  வைத்துவிட்டு சென்றுவிட்டார்.  விரைவில் தொப்பி நிரப்பத் தொடங்கியது. அதோடுமட்டுமல்லாமல் பார்வையற்ற சிறுவனுக்கு இன்னும் நிறைய பேர் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அன்று மதியம் சிறுவன் எழுதியிருந்த அடையாளத்தை மாற்றியவர் மீண்டும் அந்த வழியாக செல்ல நேர்ந்தது. சிறுவன் அவருடைய காலடி   ஓசையை  அடையாளம் கண்டு, "இன்று காலை நான் வைத்திருந்த அடையாளத்தை மாற்றியவர் நீங்களா? நீங்கள் என்ன எழுதினீர்கள்?" என்று கேட்டான்.  அந்த நபர் அந்த சிறுவனிடம் "நீ எழுதியிருந்ததைத்தான் நானும் எழுதினேன், ஆனால் வேறு விதமாக எழுதினேன்."  நான் எழுதியது: "இன்று இது நமக்கு ஓர் அழகான நாள், ஆனால் அதை என்னால் பார்க்க முடியவில்லை" என்று எழுதினேன் என்று சொன்னார்.

அடையாள அட்டையில் எழுதப்பட்ட இரண்டுமே சிறுவன் பார்வையற்றவனாக இருப்பதாகக் கூறின. முதல் அடையாளம் சிறுவன் பார்வையற்றவன் என்று வெறுமனே தெரிவித்தது; இரண்டாவது அடையாளம் சிறுவன் பார்வையற்றவன் என்று சொன்னதோடல்லாமல், அதிர்ஷ்டசாலிகளை அவர்களின் நேர்மறையான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டி, உதவக்கூடிய மனப்பான்மையை ஊக்குவித்தது.  

ஒரு செய்தியை சொல்லும்போதும் அல்லது வெளிப்படுத்தும்போதும் மற்றவர்களுடைய  கவனத்தை ஈர்க்கும் விதமாக எப்படி சொல்லவேண்டும் என்பதையும், நமது தேவையில் பிறர் உதவி நாடும்போது, கேட்பதை எப்படி கேட்கவேண்டும் என்பதையும் அறிந்திருத்தல் நம்முடைய வாழ்விற்கு நலம்பயக்கக்கூடியதாக அமையும் என்பது உறுதி. சொல்லும் செய்தி ஒன்றாக இருந்தாலும் அது வெளிப்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து கூடுதலான அல்லது குறைவான பலன் அமையும். இன்று நாம் சிந்திக்கும் பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் நிகழ்வில் இத்தகைய சாத்தியக் கூறுகளை நாம் காணமுடிகிறது.

மாற்கு 10:47ல் நாம் வாசிக்கிறோம், “நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார்” என்று.

இந்த வரிகளை சற்று கூர்ந்து நோக்கும்போது ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ளமுடியும். அதாவது, பார்வையற்ற பர்த்திமேயு கேள்விப்பட்டது அல்லது அவருக்கு சொல்லப்பட்டது என்னவென்றால் அங்கே  போகிறவர் நாசரேத்தூர் இயேசு என்று; ஆனால் பர்த்திமேயு இயேசுவை அழைத்தது, "இயேசுவே, தாவீதின் மகனே" என்று. எனவே, இயேசுவை 'நாசரேத்து இயேசுவே' என்று அழைக்காமல், 'இயேசுவே, தாவீதின் மகனே' என்று அழைத்து அதன் பயனாக தான் விரும்பிய பார்வையை பெற்றுக்கொண்டது  பர்த்திமேயுவின் யுக்தியாக இருக்குமோ என்று கூட சிந்திக்க தோன்றுகிறது. மேலும், பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவை தாவீதின் மகனே என்று அழைத்தது நமக்கு ஒரு மிகபெரிய இறையியல் உண்மையையும் நினைவு படுத்துகிறது.    

மத்தேயு 11:25,26 : இயேசு, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்”

ஆக, இறைவெளிப்பாடு, பார்வையிழந்து சமுதாயத்தின் கீழ்நிலை மனிதனான பர்த்திமேயுவுக்கு அருளப்படுகிறது. இயேசுவை எல்லோரும் நசரேத்தூரில் பிறந்த ஒரு மனிதராக பார்க்கும்போது, பர்த்திமேயு மட்டும் இயேசுவை மெசியாவாக, தாவீதின் மகனாக பார்த்ததோடல்லாமல், உரக்க கூறி அறிக்கையிடுகிறார்.  ‘தாவீதின் மகன்’ என்பது இயேசு கிறிஸ்துவின் காலங்களில் இஸ்ரேல் முழுவதும் பயன்பாட்டில் இருந்த எதிர்பார்க்கப்பட்ட மெசியாவின் பொதுவான தலைப்பாகும். ஆனால், அதை பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கண்டுகொள்ளாமல்,  இயேசுவின் மீது குறைகூறுவதும் பழிபோட துடிப்பதுமாக இருப்பது,  உண்மையில் அவர்கள்தான் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

கண் பார்வையிழந்த பர்த்திமேயு, இயேசுவை இறைவனாக கண்டுகொள்தலும், தெளிந்த கண் பார்வைகொண்ட பரிசேயர்கள் பார்வையற்றவர்களாக திகழ்வதும் விந்தையாக இருக்கிறது. இந்த உலகில் கண்ணிருந்தும் குருடர்களாக மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2019, 15:39