தேடுதல்

Vatican News
லாகூரில் ஒற்றுமை விழா லாகூரில் ஒற்றுமை விழா 

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒற்றுமை முயற்சிகள்

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுத சக்தி படைத்தவை என்பதால், இவ்விரு நாடுகளும், காஷ்மீர் பிரச்சனையை, மோதல்கள் வழியே தீர்க்க முயல்வது, மிகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் – பாகிஸ்தான் பேராயர் ஷா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் உலகத் தலைவர்கள் அனைவரும் முழு மனதோடு ஈடுபட்டால், அணு ஆயுதங்களின் தேவை முற்றிலும் அழிந்துபோகும் என்று, பாகிஸ்தானின் லாகூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், செபாஸ்டின் ஷா அவர்கள் கூறினார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் சுல்தானும் ஒருவரை ஒருவர் சந்தித்த நிகழ்வின் 800வது ஆண்டு நிறைவு நிகழ்வு, லாகூரில் கொண்டாடப்பட்ட வேளையில், பேராயர் ஷா அவர்கள் இவ்வாறு கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுத சக்தி படைத்தவை என்பதால், இவ்விரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனையை மோதல்கள் வழியே தீர்க்க முயல்வது மிகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்று பேராயர் ஷா அவர்கள் கவலை வெளியிட்டார்.

800 ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை நிலைநாட்ட புனித பிரான்சிஸ் அவர்களும், சுல்தான் அவர்களும் மேற்கொண்ட முயற்சிகள், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட அபு தாபி பயணத்தின் வழியே மீண்டும் மேற்கொள்ளப்பட்டன என்று கூறிய பேராயர் ஷா அவர்கள், இதே ஒற்றுமை முயற்சிகளை இந்தியப் பிரதமர் மோடி அவர்களும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த ஒற்றுமை விழாவைக் குறிக்கும் வகையில், லாகூர் உயர் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன என்று ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)

16 October 2019, 15:15